காந்தள் (கோடல்)

90
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல்,
மறப் புலி உடலின், மான் கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
5
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?
அச்சொடு தாக்கிப் பார் உற்று இங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய,
வரி மணல் ஞெமர, கல் பக, நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
10
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை
வழு இல் வன் கை, மழவர் பெரும!
இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ, நீ களம் புகினே?

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

144
அருளாய் ஆகலோ கொடிதே; இருள் வர,
சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழ நின்
கார் எதிர் கானம் பாடினேமாக,
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண்
5
கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப,
இனைதல் ஆனாளாக, 'இளையோய்!
கிளையைமன், எம் கேள் வெய்யோற்கு?' என,
யாம் தன் தொழுதனம் வினவ, காந்தள்
முகை புரை விரலின் கண்ணீர் துடையா,
10
'யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள், இனி:
எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும்,
வரூஉம்' என்ப 'வயங்கு புகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு,
முல்லை வேலி, நல் ஊரானே.'

திணையும் துறையும் அவை.
அவனை அவள் காரணமாகப் பரணர் பாடியது.

157
தமர் தற் தப்பின் அது நோன்றல்லும்,
பிறர் கையறவு தான் நாணுதலும்,
படைப் பழி தாரா மைந்தினன் ஆகலும்,
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்,
5
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன்,
சிலை செல மலர்ந்த மார்பின், கொலை வேல்,
கோடல் கண்ணி, குறவர் பெருமகன்
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை,
எல் படு பொழுதின், இனம் தலைமயங்கி,
10
கட்சி காணாக் கடமான் நல் ஏறு
மட மான் நாகு பிணை பயிரின், விடர் முழை
இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும்
பெருங் கல் நாடன் எம் ஏறைக்குத் தகுமே.

திணையும் துறையும் அவை.
ஏறைக் கோனைக் குறமகள் இளவெயினி பாடியது.

168
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,
கடுங் கண் கேழல் உழுத பூழி,
5
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி
10
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளம் கவினிய குளவி முன்றில்,
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,
15
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி,
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற!
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப,
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப்
20
பாடுப என்ப பரிசிலர், நாளும்
ஈயா மன்னர் நாண,
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே.

திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.