வேங்கை

100
கையது வேலே; காலன புனை கழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்;
வட்கர் போகிய வளர் இளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு,
5
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ,
சுரி இரும் பித்தை பொலியச் சூடி,
வரிவயம் பொருத வயக் களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே;
10
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே.

திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.

108
குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின், அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும்
பறம்பு பாடினரதுவே; அறம் பூண்டு,
5
பாரியும், பரிசிலர் இரப்பின்,
'வாரேன்' என்னான், அவர் வரையன்னே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

137
இரங்கு முரசின், இனம்சால் யானை,
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவா அறியேனே;
நீயே, முன் யான் அறியுமோனே துவன்றிய
5
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது,
கழைக் கரும்பின் ஒலிக்குந்து,
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும்,
கண் அன்ன மலர் பூக்குந்து,
கருங் கால் வேங்கை மலரின், நாளும்
10
பொன் அன்ன வீ சுமந்து,
மணி அன்ன நீர் கடல் படரும்;
செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந!
சிறு வெள் அருவிப் பெருங் கல் நாடனை!
நீ வாழியர்! நின் தந்தை
15
தாய் வாழியர், நிற் பயந்திசினோரே!

திணை அது; துறை இயன்மொழி; பரிசில் துறையும் ஆம்.
நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப் பெரியனார் பாடியது.

168
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,
கடுங் கண் கேழல் உழுத பூழி,
5
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி
10
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளம் கவினிய குளவி முன்றில்,
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,
15
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி,
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற!
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப,
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப்
20
பாடுப என்ப பரிசிலர், நாளும்
ஈயா மன்னர் நாண,
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே.

திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.

265
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை,
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து,
பல் ஆன் கோவலர் படலை சூட்ட,
5
கல் ஆயினையே கடு மான் தோன்றல்!
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க்
கடும் பகட்டு யானை வேந்தர்
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே.

திணையும் துறையும் அவை.
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.

352
தேஎம் கொண்ட வெண் மண்டையான்,
வீ...................................................................கறக்குந்து;
அவல் வகுத்த பசுங் குடையான்,
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து;
5
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர்
குன்று ஏறிப் புனல் பாயின்,
புற வாயால் புனல் வள
............................................................ நொடை நறவின்
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி
10
உறந்தை அன்ன உரைசால் நன் கலம்
கொடுப்பவும் கொளாஅனெ
.......................ர் தந்த நாகு இள வேங்கையின்,
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின்
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும்
15
சிறு கோல் உளையும் புரவி ª..................
...................................................................... யமரே.

திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.