கழுதை

15
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி,
பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல் எயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல்,
5
வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத்
தேர் வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்து;
துளங்கு இயலான், பணை எருத்தின்,
பாவு அடியான், செறல் நோக்கின்,
ஒளிறு மருப்பின் களிறு அவர
10
காப்பு உடைய கயம் படியினை;
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு
நிழல் படு நெடு வேல் ஏந்தி, ஒன்னார்
ஒண் படைக் கடுந் தார் முன்பு தலைக் கொண்மார்,
15
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய,
வசை பட வாழ்ந்தோர் பலர்கொல்? புரை இல்
நல் பனுவல், நால் வேதத்து,
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல் மாண்
20
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
யூபம் நட்ட வியன் களம் பலகொல்?
யா பலகொல்லோ? பெரும! வார் உற்று
விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
25
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.

திணையும் துறையும் அவை.
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

392
மதி ஏர் வெண் குடை அதியர் கோமான்,
கொடும் பூண் எழினி, நெடுங் கடை நின்று, யான்
பசலை நிலவின் பனி படு விடியல்,
பொரு களிற்று அடி வழி அன்ன, என் கை
5
ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ,
'உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து,
நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து
அணங்குடை மரபின் இருங் களந்தோறும்,
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி,
10
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ! வாழிய பெரிது!' எனச்
சென்று யான் நின்றனெனாக, அன்றே,
ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி
வேர் புரை சிதாஅர் நீக்கி, நேர் கரை
15
நுண் நூல் கலிங்கம் உடீஇ, 'உண்' எனத்
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்மீன் அன்ன பொலங் கலத்து அளைஇ,
ஊண் முறை ஈத்தல் அன்றியும், கோள் முறை
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து
20
அரும் பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே.

திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.