ஆரல்

18
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியல் ஞாலம்
தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ,
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்!
5
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய
பெருமைத்தாக, நின் ஆயுள்தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
10
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;
வான் உட்கும் வடி நீள் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி,
15
ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;
20
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே;
வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன்
25
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே; அதனால்,
அடு போர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே;
30
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.

திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.
212
'நும் கோ யார்?' என வினவின், எம் கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங் கள்
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா,
ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ,
5
வைகு தொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நல் நாட்டுள்ளும், பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகி,
கோழியோனே, கோப்பெருஞ்சோழன்
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
10
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே.
திணை அது; துறை இயன்மொழி.
கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
249
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப,
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர்
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர,
5
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு,
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்,
அகல் நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே,
10
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,
உயர் நிலை உலகம் அவன் புக,.... வரி
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி,
அழுதல் ஆனாக் கண்ணள்,
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.
திணையும் துறையும் அவை.
....................தும்பி சேர் கீரனார் பாடியது.
320
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி,
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென,
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர்
5
தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து,
10
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென,
ஆர நெருப்பின், ஆரல் நாற,
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி,
15
தங்கினை சென்மோ, பாண! தங்காது,
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே.
திணையும் துறையும் அவை.
வீரை வெளியனார் பாடியது.
342
'கானக் காக்கைக் கலிச் சிறகு ஏய்க்கும்
மயிலைக் கண்ணி, பெருந் தோள் குறுமகள்,
ஏனோர் மகள்கொல் இவள்?' என விதுப்புற்று,
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை!
5
திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே;
பைங் கால் கொக்கின் பகு வாய்ப் பிள்ளை
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின்,
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை,
10
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம்,
தண் பணைக் கிழவன் இவள் தந்தையும்; வேந்தரும்
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின்,
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா,
வாள் தக வைகலும் உழக்கும்
15
மாட்சியவர், இவள் தன்னைமாரே.
திணையும் துறையும் அவை.
அரிசில் கிழார் பாடியது.