நல் இசைக் கடாம் புனை நன்னன்
வெற்பில்
வெல் புகழ் அனைத்தும் மேம்படத் தீட்டிய
என்பது திருவண்ணாமலைச் சாஸனப் பகுதி
இதில் 'கடாம்' என வரற்பாலது 'படாம்'
எனச்
சாஸனக் குறிப்பில் காணப்படுவது
பிழையாதல் வேண்டும். இச் சாஸனப்
பகுதியில்
மலைபடுகடாமும்
அதன் பாட்டுடைத் தலைவனாகிய
நன்னன் சேய் நன்னனும் குறிக்கப்பெறுதல்
காணலாம்.
எட்டுத் தொகை நூல்களை நற்றிணை,
குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து,
பரிபாடல்,
கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, என்ற வரிசையில் 'நற்றிணை நல்ல குறுந்தொகை'
எனத்
தொடங்கும் பாடல் கூறுகிறது. பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை
அவர்கள், 'தொகை
நூல்களின் காலமுறை' எனத் தாம்
எழுதியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையில், குறுந்தொகை,
நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு,
பதிற்றுப் பத்து, புறநானூறு, கலித்தொகை, பரிபாடல்,
என்ற வரிசை முறையில் தொகை நூல்கள் தோன்றியிருத்தல்
கூடும் என்று குறித்துள்ளார்கள்.
இறையனார் அகப்பொருள்
உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் அகநானூற்றை
முதலாகக்
கொண்டு தொகை நூல்களை
வரிசைப் படுத்திக் கூறுகின்றனர்.
செய்யுள் மொழியால் சீர்
புனைந்து யாப்பின்
அவ்வகை தானே அழகு எனப்படுமே
எனவரும் தொல்காப்பியச்
செய்யுளியல் சூத்திர (236) உரையில்,
'அவ்வகை என்றதனால்
அது வேறு
வேறாக ஈண்டிய தொகைநிலைச் செய்யுள் என்று
உணர்க. அவை நெடுந்தொகை முதலிய தொகை
எட்டுமாம். அது தலைச் சங்கத்தாரை
ஒழிந்தோர் சிறுபான்மை வழக்கும் பெரும்பான்மை செய்யுட் சொல்லுமாக
இவ்
இலக்கணத்தால் செய்தவாறே இக் காலத்துச்
செய்யினும் ஆம்',
என்று எழுதுகின்றனர். இறையனார்
அகப்பொருள் உரையாசிரியர் கூறுவது பின்
வருமாறு:
கடைச் சங்கம் இருந்து
தமிழ் ஆராய்ந்தார்........ நாற்பத்தொன்பதின்மர்
என்ப.
அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார்
என்ப. அவர்களால்
பாடப்பட்டன
நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை
நானூறும்,
புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்
பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது
பரிபாடலும்,
கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும், என்று இத்
தொடக்கத்தன. அவர்க்கு நூல்
அகத்தியமும்
தொல்காப்பியமும் என்ப.
இவ் இரு உரையாசிரியர்கள்
கூற்றிலிருந்தும் தொகை நூல்கள் தலைச்சங்க
காலத்திற்குப்
பிற்பட்டவை என்பதும், அவை அகநானூறு முதலாக எண்ணப்பட்டன
என்பதும் தெளிவாம்.
உரைகாரர்கள் காட்டிய முறைவைப்பில்
நானூற்றுத் தொகைகளை முன்னரும்
பாவகையில்
வேறுபட்ட கலித்தொகை, பரிபாடல்களை ஈற்றிலும்வைத்து, நூறு நூறு
பாடல்களைக் கொண்ட
ஐங்குறுநூற்றையும் பத்துப் பத்துப்
பாடல்களைக் கொண்ட பதிற்றுப்பத்தையும்
இடையே
கொண்டுள்ளமை புலனாகிறது. இதுவே பழமையாக
வழங்கிய வரிசை முறையாதல் கூடும்.
இந்நூல்கள் ஒவ்வொன்றைப்
பற்றியும் விரிவான செய்திகளை
அந்தந்த நூல்களின்
முகவுரைகளில் பார்க்கக் காணலாம். |