10

மாங்குடி  மருதனார்  என்ற  பாட வேறுபாடும் தரப்பட்டிருக்கிறது (பாட்டு 24). மாங்குடி கிழாரால் பாடப்பெற்ற  பேரரசன்  தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ் செழியன் என்ற பாண்டியன். இந்தப் பாண்டியன் பாடிய வஞ்சினப் பாடலில் (புறம்.72) 

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நில வரை!

என்று  தனது  வஞ்சினங்களுள்  ஒன்றாக  மாங்குடி  மருதன்  முதலான  புலவர்கள்  தன்னைப் பாடாதொழியட்டும் என்று கூறியுள்ளான். இதனால் மாங்குடி கிழாரும் மாங்குடி மருதனும் ஒருவரே என்பதில்  ஐயம்  இல்லை. 'மதுரைக் காஞ்சி' பாடிய சிறப்பினால் இவர் 'காஞ்சிப் புலவர்' என்றும் அழைக்கப்பட்டனராதல் வேண்டும். 

இங்ஙனம்,   பாடல்களில்   வரும்   அகச்   சான்றுகளையும்,   பிரதிகளில்  காணும் பெயர் வேற்றுமைகளையும்,  பிற   குறிப்புக்களையும்,   கவனித்து  ஆராய்ந்து  பார்த்தே  பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை அவர்கள் சங்க இலக்கியத்தில் புலவர் வரிசையை வகுத்துள்ளார் என்று தோன்றுகிறது.   எனவே,   அந்த  வரிசைக்   கிரமத்தை  அடியொற்றிப்  புலவர்  அகராதியை மேற்கொண்டு,  அந்தப்  புலவர்  பெயர்க்கு ஒவ்வொரு நூலிலும் வரும் வேறுபாடுகளும் விளங்க, அந்தப் பெயரின்  கீழேயே  சிறிது உள்ளடக்கி, அத்தகைய மாறுபாடுகளுடன் கூடிய பெயர்களும் தரப்பட்டுள்ளன.  தவிரவும்,  இவ்வாறான பெயர்கள் தனிப்படவும் அகராதி வரிசையில் இருக்கும். ஆனால்,  அவ்வாறான  இடங்களில்  இருதலைப்  பிறைக் குறிகளுக்குள் அவரது தேர்ந்த பெயர் மட்டும்  தரப்பட்டிருக்கும்.  மாற்றுப் பெயருடன் கூடி வரும் பாடல் எண்களை இவ்வாறு தேர்ந்த பெயர்  மட்டும்  தரப்பட்டிருக்கும்.  மாற்றுப் பெயருடன் கூடி வரும் பாடல் எண்களை இவ்வாறு தேர்ந்த பெயரின் கீழ்க் கண்டு கொள்ளலாம். இந்த வேறுபாடுகளுடன் கூடிய புலவர் பெயர்களில் சில வெவ்வேறு புலவரைக் குறிப்பனவாகலாம் என ஆராய்ச்சியாளர் எண்ணுவாராயின், அவ்வாறு கொள்ளுதற்கும் வசதியாக இந்த அகராதி அமைக்கப்பட்டிருக்கிறது.

நானூற்றுத்   தொகைகள்   தவிர   ஏனைய   நூல்களாகிய   பத்துப்பாட்டு,   ஐங்குறுநூறு, முதலியவற்றைப்  பாடிய  புலவர்களின் பெயர்களும்,  இந்த அகராதியின் முடிவில் தனித்தனியாக அகராதி  வரிசையில்  அமைக்கப்பட்டிருக்கின்றன.  இவர்களில் சிலர் நானூற்றுத் தொகை பாடிய புலவர் கூட்டத்திலும் காணப்படுவர்.