தெரியாமல் அவளைத் தானே மனைவியாகக் கொண்டான் என்று கூறும். இவ்வேறுபாடே இவற்றின் கட்டுத்தன்மையைக் காட்டுதல் காண்க.

உடன்பிறந்தார்: இவருக்கு உடன் பிறந்தார் இருந்ததாகத் தெரியவில்லை.

யாளிதத்தனின் மனைவி பிராமணத்தியாயிருந்து பிள்ளைகளைப் பெற்றாளென்று ஞானாமிர்தவுரையும், ஆதியென்னும் புலைச்சி மறு நாட்பகலில் அடையாளங்கண்டுபிடிக்கப்பட்டபின், பிறக்கும் பிள்ளைகளையெல்லாம் உடனுடன் விட்டுவிட்டு வரவேண்டுமென்னும் நிலைப்பாடு பற்றியே நிலையான மனைவியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டாளென்று கபிலரகவல் பற்றிய கதையும் வேறுபட்டுக் கூறினும், பிறந்த பிள்ளைகள் வள்ளுவருள்ளிட்ட கபிலர் முதலிய எழுவர் என்பதில் மட்டும் ஒன்றுபடுகின்றன.

"கபில ரதிகமான் கான்குறவர் பாவை
முகிலனைய கூந்தன் முறுவை - நிகரில்லா
வள்ளுவ ரௌவை வயலூற்றுக் காட்டிலுப்பை
யெள்ளி லெழுவ ரிவர்."

என்பது ஞானாமிர்தவுரை யடிக்குறிப்பு.

"யாளி-கூவற் றூண்டு மாதப் புலைச்சி
காதற் காசனி யாகி மேதினி
யின்னிசை எழுவர்ப் பயந்தோ ளீண்டே"
என்பதே ஞானாமிர்த மூலம்.

"அருந்தவ மாமுனி யாம்பக வற்குக்
கருவூர்ப் பெரும்பதிக் கட்பெரும் புலைச்சி
ஆதி வயிற்றினி லன்றவ தரித்த
கான்முளை யாகிய கபிலனும் யானே
என்னுடன் பிறந்தவ ரெத்தனை பேரெனில்
ஆண்பால் மூவர் பெண்பால் நால்வர்
------------------------------------
ஊற்றுக் காடெனும் ஊர்தனிற் றங்கியே
வண்ணா ரகத்தில் உப்பை வளர்ந்தனள்
காவிரிப்பூம் பட்டினத்திற் கள்விலைஞர் சேரியில்
சான்றா ரகந்தனில் உறவை வளர்ந்தனள்
நரப்புக் கருவியோர் நண்ணிடு சேரியில்
பாணரகத்தில் ஒளவை வளர்ந்தனள்