மதுரைப் பாலாசிரியனார்

52.வெள்ளி வியாழம் விளங்கிரவி வெண்டிங்கள்
பொள்ளென நீக்கும் புறவிருளைத்-தென்னிய
வள்ளுவ ரின்குறள் வெண்பா வகிலத்தோர்
ருள்ளிரு ணீக்கு மொளி.

(பொ-ரை.) வெள்ளி வியாழன் கதிரவன் திங்கள் என்பன புறவிருளை நீக்கும் ஒளிகளாம். அவைபோலத் திருவள்ளுவரின் இனிய குறள் வெண்பா அகவிருள் நீக்கும் ஒளியாம்.

ஆலங்குடி வங்கனார்

53.வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்குந்
தெள்ளமுதின் றீஞ்சுவையு மொவ்வாதால்-தெள்ளமுதம்
உண்டறிவார் தேவ ருலகடைய வுண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து.

(பொ-ரை.) திருவள்ளுவர் பாட்டின் தீஞ்சுவைக்குத் தெள்ளமுதமும் ஒவ்வாது. தெள்ளமுதைத் தேவர் மட்டும் உண்டு சுவைப்பர்; முப்பாலமுதையோ உலகத்தாரனைவரும் உண்டு சுவைப்பர்.

இடைக்காடர்

54.கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
   குறுகத் தறுத்த குறள்.

(பொ-ரை.) திருக்குறளின் சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகின் நடுவில் துளைசெய்து அதில் எழுகடல் நீரையும் பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்துவைத்தாற் போன்றதாம்.

ஒளவையார்

55.அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
  குறுகத் தறித்த குறள்.

(பொ-ரை.) திருக்குறளின் சொற்சுருக்கத்தையும் பொருட்பெருக்கத்தையும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகினும் மிக நுண்ணிய அணுவைத் துளையிட்டு அதில் எழுகடல் நீரையும்