பதிப்புரை

முற்காலங்களில் பாண்டியர்களால் ஏற்பட்ட தமிழ்ச் சங்கங்கள் மூன்று. அவை தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என்பன தலைச்சங்கமும் இடைச்சங்கமும் சரிதக்காலத்துக்கு முற்பட்டவை. கடைச்சங்கம் ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த தென்பது இக்காலப் புலவரில் பலருடைய கொள்கை. கடைச்சங்கம் இருந்த இடம் மதுரை. அச்சங்கமிருந்து தமிழாராய்ந்தவர், சிறுமேதாவியர், சேந்தம்பூதனார், அறிவுடையானார், பெருங்குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லநதுவனார், மருதனிளநாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் முதலானவர். அவருள்ளிட்டுப் பலர் பாடினர். அவர்கள் பாடியன கூத்தும் வரியும் பேரிசையும் சிற்றிசையும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண்கீழ்க்கணக்கும் என்றித் தொடக்கத்தன. இவற்றில் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் மேற்கணக்கின் பாற்படும். முதுமொழிக்காஞ்சி பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று.

காஞ்சியென்பது பொருளிலக்கணத்தில் புறப்பொருளின் பகுதியைச் சேர்ந்தது. பொருளாவது சொற்றொடர் கருவியாகச் செய்யுளிடத்தே சார்ந்து விளங்கும் இயல்பினையுடையது. அது நோக்குதற்கு எட்டாத வீட்டை விடுத்து, அறமும் பொருளும் இன்பமும் என மூன்று வகையினையுடையது. அவற்றில், இன்பமென்னும் இயல்பினையுடைத்தாகி உள்ளத்தின் கண்ணே நிகழும் ஒழுக்கம் அகம் எனப்பெறும். அது, முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலையோடு பெருந்திணை கைக்கிளை யென்னும் ஏழுவகையினையுடையது. அறமும் பொருளும் என்னும் இயல்பினையுடைத்தாய்ப் புறம்பே நிகழும் ஒழுக்கம் புறம் எனப்பெறும். அது வெட்சி, வஞ்சி, உழிஞை தும்பை, வாகையொடு, காஞ்சி, பாடாண் என்னும் ஏழுவகையினையுடை