நாற்பது, இன்னா
நாற்பது , கார் நாற்பது, களவழி நாற்பது, இவற்றுள்,
‘இனியவை நாற்பது ' அறம் பொருளின்பம் பற்றிச்
சிலவாய மெல்லிய மொழிகளான் ஐந்தடியினேறாது
நாற்பது வெண்பாக்களினமைதலின்
கீழ்க்கணக்காயினமை காண்க. ‘இனியவை நாற்பது '
என்பது. ‘இனிய பொருள்களை யுரைக்கும் நாற்பது
வெண்பாக்களையுடைய நூல்' என விரிதலின்,
அன்மொழித் தொகையாய் நூற்குக் காரணக்
குறியாயிற்றென்க. நாற்பது : ஆகுபெயர். ‘இனியது
நாற்பது ' ‘இனிது நாற்பது' ‘இனிய நாற்பது' என்னும்
பெயர்களானும் இந்நூல் வழங்குதலுண்டு. இந் நூற்கு
ஆசிரியர், மதுரைத் தமிழாசிரியர் மகனார்
பூதஞ்சேந்தனார் என்பார். ‘ஆர்' விகுதிகள்
உயர்வுபற்றி வந்தன. ‘பூதன்' ‘சேந்தன்' என்னும்
இருமொழிகள் தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
புள்ளி மயங்கியல் 55வது சூத்திர விதிபற்றிப்
‘பூதஞ்சேந்தன்' எனப் புணர்ந்த தென்க. ஆசிரியர்
பெயர் ‘சேந்தன்' என்பதூஉம். அவர் தந்தையார்
இயற்பெயர் ‘பூதன் ' என்பதூஉம், அவர்
சிறப்புப்பெயர் ‘மதுரைத் தமிழாசிரியர் '
என்பதூஉம் உய்த்துணர்க.
ஆசிரியர் முதற்பாவில்
மும்மூர்த்திகளைப்பற்றிக் கூறுதலின், வேத
வொழுக்கினராதல் வேண்டுமென்ப ரொருசாரார். சினனை
நான்முகனாகவும், திருமாலாகவும், சிவபிரானாகவும்
வைத்து வாழ்த்துதல் சைன சம்பிரதாயமாகலின், அவர்
சைனரென்பர் மற்றொரு
சாரார்.
திருநெல்வேலித் தென்னிந்திய
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்
விரும்பியவாறு யானும் ஓருரை யெழுதினன். இவ்வுரைக்கட்
குறையேனுங் குற்றமேனுங் காணப்படின், அறிவுடையுலகம்
அவற்றைப் பாராட்டாது கொள்ளுமாறு வேண்டுகின்றனன்.
|