களவழி நாற்பது

முகவுரை

கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் நிகழ்ச்சியாகிய போர்ச் செய்தி பற்றியது களவழி நாற்பது ஒன்றே. ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப்பெறும் பாடல்கள் களவழி எனப்படும் என்று தொல்காப்பியர் வாகைத் திணையில் ஒரு துறை அமைத்துள்ளார்.

ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோற்றிய வென்றியும்

என்பது தொல்காப்பியம் (புறத்.21). களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல் தொகுதி. மேற்குறித்த தொல்காப்பியச் சூத்திர உரையில், நச்சினார்க்கினியர், 'களவழி நாற்பது புலவர் களவழியைத் தோற்றுவித்தது' என்று கூறி, 'ஓஒ உவ மன்' எனத் தொடங்கும் இந் நூற் செய்யுளையும் (36) மேற்கோள் காட்டியுள்ளார். இவர்க்கு முந்திய இளம்பூரணரும் களம் பாடியதற்கு இக் களவழிச் செய்யுளையே எடுத்துக்காட்டியுள்ளார். இந் நூலகத்துள்ள பாடல்கள் எல்லாம் 'களத்து' என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதலும் கவனிக்கத் தக்கது. 'களத்து' என்று முடிவதனாலும், போர்க்கள நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துள்ளமையினாலும், 'களவழி' என்றும், பாடல் தொகை அளவினால், களவழிநாற்பது' என்றும், இந் நூல் வழங்கப் பெறுவதாயிற்று. பரணி நூல்களில் 'களம் பாடியது' என்னும் ஒரு பகுதி உண்டு. அதுவும் போர்க்களக் காட்சிகளைச் சித்திரிப்பதாகும்.

இடம் பற்றித் தொகுத்த நூலுக்குத் தண்டியலங்கார உரையில் (5) இக் களவழி நாற்பது மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. நானாற்பதில் இடம் பற்றிவந்ததற்கு இலக்கண விளக்கப் பாட்டியலில் (851) இந்நூல் எடுத்துக்காட்டாகத் தரப்பெற்றுள்ளது. எனவே, போர்க்களமாகிய இடத்தைச் சுட்டி எழுந்ததே இந்நூல் என்பது தெளிவு.

இந் நூல் தோன்றிய வரலாறு பற்றியசெய்திகள் தெளிவு இன்றிப் பற்பல ஐயப்பாடுகளை விளைவித்துள்ளன. இதனால், ஆராய்ச்சியாளர்களிடையே நேர்ந்துள்ள கருத்து வேற்றுமைகளும் பலவாம்.

களவழி நாற்பதின் இறுதியில் காணப்பெறும் குறிப்பை முதற்கண் நோக்குவோம்: 'சோழன் செங்கணானும் சேரமான் கணைக்காலிரும் பொறையும் (திருப்)போர்ப் புறத்துப் பொருது உடைந்துழி, சேரமான் கணைக்காலிரும் பொறையைப் பற்றிக்கொண்டு, சோழன்சிறை வைத்துழி, பொய்கையார் களம் பாடி, வீடு கொண்ட களவழி நாற்பது' என்னும் குறிப்பு உள்ளது. இதிலிருந்து, சோழன் செங்கணான் போர் என்னும் இடத்தில் கணைக்காலிரும் பொறையோடு போரிட்டான் என்பதும், போரில் சோழன் வெற்றி பெற்று, சேரமான் கணைக்காலிரும் பொறையைச் சிறைப்படுத்தினான் என்பதும், அப்பொழுது பொய்கையார் என்பார் சோழனது வெற்றியைப் புகழ்ந்து பாடிச் சேரனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார் என்பதும் தெரியவருகின்றன.