நாலடி நானூற்றைப்
போலவே நானூறு பாடல்களைக் கொண்டு விளங்கும் கீழ்க்கணக்கு நூல்பழமொழி. நாலடிப் பாடல்களின் சொற்பொருள்களைப்பல இடங்களில் தழுவிச் செல்வதனால், இது நாலடியாரோடு நெருங்கிய தொடர்புடையது எனலாம். இந் நூலிலுள்ள பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்து, அதற்கு விளக்கம் கூறும் வகையில் ஆசிரியர் பாடியிருத்தலின், பழமொழி என்னும் சிறப்புப்பெயர் இதற்கு அமைவதாயிற்று. பாடல் தொகையைக் கொண்டு, 'பழமொழி நானூறு' என்றும் இது
குறிக்கப் பெறும். இந்நூலகத்துப் பண்டைப் பழமொழிகளைத்
தேர்ந்து எடுத்து ஆசிரியர் அமைத்துள்ளார் என்பதை
பிண்டியின்
நீழல் பெருமான் அடிவணங்கி,
பண்டைப் பழமொழி நானூறும்-கொண்டு இனிதா
முன்றுறை மன்னவன் நான்கு அடியும் செய்து அமைத்தான்,
இன் துறை வெண்பா இவை
என வரும்
தற்சிறப்புப் பாயிரத்தால் அறிகின்றோம்.
பழமொழிகள்
எனப்படுபவை புதியனவாக அமைக்கப்படாது, வழிவழியாக
மக்களிடையே வழங்கிவரும் உலக வசனங்களாகும். இவை ஒரு கருத்தைத் தெளிவாகவும், சுருக்கமாகவும், கேட்போர் உளம் கொளும் வகையிலும் தெரிவிக்கின்றன. இவை பொது மக்களின் அனுபவம் வாயிலாக, அவர்களது உள்ளுணர்ச்சியினின்று வெளிப்படுவன ஆகும். எனவே, இவை கருதிய பயனை விளைக்கும் ஆற்றல்வாய்ந்து விளங்குகின்றன. 'சுருக்கம், தெளிவு முதலியன விளங்க அமைந்து, கருதின பொருளை முடித்தற்கு வரும், ஏதுவைக் குறித்த தொடர்கள் முதுமொழி
எனப்படும்' என்பது தொல்காப்பியத்தில் காண்கிறது.
தொல்காப்பியர்கூறிய,
நுண்மையும்
சுருக்கமும் ஒளியுடைமையும்
ஒண்மையும் என்று இவை விளங்கத் தோன்றி,
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்,
ஏது நுதலிய முதுமொழி என்ப
என வரும் முதுமொழி
விளக்கம் பற்றிய இச் சூத்திரஉரையில், நச்சினார்க்கினியர்,
'பழமொழி இவ்விலக்கணம்பற்றிச் செய்தது' என்று
குறித்துள்ளார்.
சங்கப் பாடல்களிலும்
பிற்காலப்பாடல்களிலும் புலவர்கள் சிற்சில இடங்களில், அக்காலத்துவழங்கிய பழமொழிகளை ஆற்றலுடன் சந்தர்ப்பத்திற்கு இயைய
எடுத்தாண்டிருக்கிறார்கள்.
அம்ம வாழி தோழி! 'இம்மை
நன்று செய் மருங்கில்
தீது இல்'என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று
பொய்த்தன்றுகொல்?
(அகம். 101)
என வரும் அகப்பாடலில் பழமொழிஒன்றை எடுத்துக் காட்டியதுடன், 'தொன்றுபடு பழமொழி' என, வழிவழியாக வழங்கிவருகின்ற இயல்பையும் ஆசிரியர் புலப்படுத்தியிருத்தல் காணலாம். ஆனால், இப்பழமொழிகளின் அருமை பெருமைகளை உணர்ந்து தனிப்பட நூல் செய்தபெருமை புலவர்
முன்றுறை அரையனார்க்கு உரியதாகும்.