'மாண்டவர் மாண்ட' (30), மத்த மயில் அன்ன' (31) எனவரும் இரண்டு பாடல்களிலும் உரைத்துள்ளார். வடமொழியாளரின் பழக்கவழக்கங்களை உணர்த்தும் இச் செய்தியை ஆசிரியர் கூறியுள்ளமையால்,
வடமொழிக் கலப்பு மிகுதிப்பட்டபிற்காலத்தே
இந் நூல் தோன்றியதாதல் கூடும் என்று ஊகிக்கலாம். இந்
நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எண்பது பாடல்கள் உள்ளன. சிறுபஞ்சமூலப் பாடல்களினும் இந்நூற் பாடல்கள் பொருள் தெளிவின்றியுள்ளன. ஆறுபொருள்களை நான்கு அடிப் பாடலில் அடக்கும் இந் நூலிலும் மகடூஉ முன்னிலைகளைச் சிற்சில பாடல்களில் ஆசிரியர் மேற்கொள்ளுதல் பொருளை மேலும் குறுக்கிவிடுகிறது. இந் நூலைப் பற்றிய சிறப்புப் பாயிரப் பாடல் ஒன்றுஉள்ளது.
இப் பாடல் நூலின் இறுதியில் தரப் பெற்றிருக்கிறது இந் நூலுக்குப் பழைய உரை உண்டு. இவ்உரை முதலில் எட்டுப் பாடல்களுக்கும் பின்னரும் இடையிடையே சிற்சில பாடல்களுக்கும் கிடைக்கவில்லை. அப்பகுதிகள் சிதைவு பட்டிருக்கலாம். உரையின் துணைகொண்டே இந் நூற் பாடல்களில் அமைந்துள்ள ஆறு பொருள்களையும் தெளிவுறத் தெரியலாம். இங்ஙனம் நூற் பொருளை அறிதற்குக் கருவியாய்த் துணைபுரிவது இப் பழைய உரை.
|