பதிப்புரை

"ஆசாரக்கோவை" என்னும் இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவை என்பது யாங்கள் வெளியிட்டிருக்கும் சிறுபஞ்சமூல முகவுரையான் அறியலாம். இந்நூல் கடைச்சங்க மருவிய நூல்களுள் ஒன்றாகலான், இதனாசிரியர் பெருவாயின் முள்ளியாருடைய காலம் அச் சங்ககாலத்திற்குப் பிற்பட்ட தன்றென்பது நன்கு போதரும். தற்சிறப்புப்பாயிரச் செய்யுள் நீங்கலாக, இதன்கண் நூறு வெண்பாக்கள் உள்ளன. இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, குறள் வெண்பா, பஃறொடை வெண்பா முதலிய வெண்பா வகையெல்லாம் இந்நூலின்கண் உண்டு. இந்நூலாசிரியர் சைவசமயத்தைச் சார்ந்தவர் என்பதும், இவர் ஊர்ப்பெயர் வண்கயத்தூர் என்பதும் தற்சிறப்புப் பாயிரச் செய்யுளான் விளங்குகின்றன.

இந்நூற்பாக்களிற் சில பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி முதலிய இலக்கியங்களிலும், நன்னூல், இலக்கணவிளக்கம் முதலான இலக்கண நூல்களிலும் உரைகளில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

இந்நூலுக்கு மூலநூல் ஆரிடம் என்னும் வடநூலெனத் தற்சிறப்புப் பாயிரத்தால் அறியக்கிடக்கின்றது. இதன்கண் கூறிய ஆசாரங்கள் பெரும்பான்மையும் சுக்ர ஸ்மிருதியிலுள்ளன வென்று வடநூற் புலவர் கூறுவர் ஆசாரங்களை எடுத்து நுவல்வது குறித்தே இந்நூலுக்கு "ஆசாரக் கோவை" எனப் பெயர் இடப்பெற்றது.