ஆராய்ச்சி முன்னுரை
மணிமேகலை என்னும் இவ் அணிகெழுநூல், ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. இது சொன்னயமும் பொருள்நயமும் மிக்க விழுமிய நூலாகும்.

இந்நூலின் சிறப்பை "ஞகாரை முதலா" என்னும் தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாவில் 'இயைபு' என்னும் செய்யுள் வனப்பிற்கு எடுத்துக்காட்டாக அதன் உரையாசிரியர் பேராசிரியரால், "சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும், கொங்குவேளிராற் செய்யப்பட்ட தொடர்நிலைச் செய்யுளும் போல்வன" என்று பாராட்டிக் கூறுதலானும், பிற்காலச் செஞ்சொற்புலவராக மிளிர்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளால் "கொந்தார் குழல்மணிமேகலை நூல்நுட்பம் கொள்வதெங்ஙன்" என்று சிறப்புக்காட்டிச் சொல்வதானும், அம்பிகாபதி என்னும் ஆசிரியரால் "மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே" என்று நயம் பெறக் கூறப்பெறுதலானும் இந்நூலின் அரும்பெருஞ் சிறப்புப் புலனாகும்.

இத்தகைச் சிறப்புவாய்ந்த இந்நூல் நல்லிசைப்புலமை வல்லுநரான கூலவாணிகன் சாத்தனாரால் அருளிச்செய்யப்பெற்றுச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளால் கேட்கப்பெற்ற பெருமையுடையது. இதனை "மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகார முற்றும்" என ஆசிரியர் இளங்கோவடிகளார், சிலப்பதிகார நூற் கட்டுரைக்கண் உரைத்தலானும், "இளங்கோவேந்தன் அருளிக்கேட்ப, வளங்கெழு கூலவாணிகன் சாத்தன், மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு" என்று இந்நூற் பதிகத்தின்கண் கூறப்பெறுதலானும் அறியலாம் இவ்வாறுபாராட்டப்பெறும் இந்நூல், காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்திருந்த ஏசாச்சிறப்பின் இசைவிளக்கு பெருங்குடி மாசாத்துவான் மகனான கோவலற்கு ஆடல் பாடல் அழகு என்றிம் மூவகைப் பண்பு முற்றும் நிறைந்த நாடகக்கணிகை மாதவிபால் தோன்றிய 'மணிமேகலை' என்னும் பெண்ணினல்லாளின் வரலாற்றை எடுத்துரைக்கும் பெற்றியுடையது.

இதன்கண் 'விழாவறை காதை' முதலாக 'பவத்திறமறுகெனப் பாவை நோற்ற காதை' இறுதியாக முப்பது காதைகளால் மணிமேகலையாரின் வரலாற்றை எடுத்துச் செவ்வியமுறையில் விளக்கப்பெற்றுள்ளது.

இந்நூலாசிரியர் நாவீறுபெற்ற நல்லிசைப் புலவராகலான், ஆங்காங்கே கற்பனைத்திறங்களும் சொன்னலம் பொருணலம் யாவும் ஒருங்கே கெழுமுமாறு புனையப்பெற்றுக் கற்றாரைத் தம்வழி ஈர்த்து இன்பத்தை ஈத்து அன்பும் அருளும் பிறக்க நல்லொழுக்கப் பண்பை நயக்கும் பண்பு மிக்கது; இடையிடையே கிளைக்கதைகளும், அறமுறைகளும், அறிவுரைகளும் பொதிந்து கிடப்பதால் கற்றார் நெஞ்சைக்கரைக்கும் பெற்றிமைமிக்கதாய்த் திகழுவ திந் நூலென்றால் மிகையாகாது.

இனி, இந்நூலின் கதைச்சுருக்கமும், நூலின் நயமும் ஆய்ந்து காண்போம்

மணிமேகலையின் தந்தையாகிய கோவலன் தன் இல்லக்கிழத்தி கண்ணகியாரோடு சிலம்புவிற்று வாணிகஞ்செய்வதற்கு மதுரைக்குச் சென்றான். கள்வனென்று ஓர் பொற்கொல்லனால் குற்றஞ்சாற்றப்பெற்றுப் பாண்டி வேந்தனால் ஆங்கே கொலையுண்டு இறந்துபடுகின்றான்.