அவரும் ‘செம்பொன் வரைமேற் பசும்பொன்‘ என்று தொடங்கும் பாட்டைப் பாடிக் கொடுத்தனர் என்றும் ; பின்னர், தேவர் "மூவா முதலா உலகம்" என்னும் கடவுள் வாழ்த்தைப் பாடிக் காப்பியந் தொடங்கினராக இந்தச் செய்யுள் தம்முடைய செய்யுளினுங் காட்டிற் சிறந்திருத்தல் கண்ட ஆசிரியர், இதனையே முதற் செய்யுளாக அமைத்துக்கொள்ளும்படி பணித்தனர் என்றும் ஆசிரியர் பணியாகலின் அதனை மறுக்கமாட்டாராய் அங்ஙனமே தம் செய்யுளையே முதலாக வைத்துப் பாடினர் என்றுங் கூறுவர்.
இன்னும் இளமையிலேயே துறவியாகிய இவர் காமச்சுவை ததும்ப இவ்வாறு எங்ஙனம் பாடவியலும் என்று சிலர் ஐயுற்ற பொழுது தேவர் தீயிற் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பின் துண்டினைக் கையிலேந்தித் தம்முடைய நல்லொழுக்கத்தைப் பலரும் அறியச் செய்தனர் என்றும் கூறுவர். இவை யெல்லாம் தேவரைப்பற்றிக் கன்னபரம்பரையாக வழங்கிவருஞ் செய்திகளேயாம். இவற்றிற்குச் சான்றுகள் இல்லை.
திருத்தக்க தேவருடைய ஒப்பற்ற நல்லிசைப் புலமையை என்றென்றும் உலகத்தார்க்கு நன்கு விளக்கிக்கொண்டு நின்று நிலவும் நற்சான்று அப்பெரியார் இயற்றிய சீவக சிந்தாமணி என்னும் இந்த வனப்பு நூலேயாகும். இவர் இயற்றிய இந்த நூலைக் கல்லாதார், ஒருதலையாகக் கல்லாதவரேயாவர். சிந்தாமணியின் தீஞ்சுவை தேறாதார் செந்தமிழின் தீஞ்சுவை தெரியாப் பதடிகளே.
திருத்தக்கதேவர் பொதுவாகத் தமக்கு முந்திய செந்தமிழிலக்கியங்களிலே கண்ட அறிவுச் செல்வம் பலவற்றையும் திரட்டித் தமது சிந்தாமணியிலே பொதிந்து வைத்துள்ளனர். சிறப்பாக இவர் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கினும் ஆசிரியர் திருவள்ளுவனாரையே பின்பற்றித் தமது காப்பியத்தைப் படைத்தருளி யிருக்கின்றார். இவருடைய செய்யுள் சில திருக்குறட் செய்யுள் சிலவற்றிற்கு அரிய விளக்கமாகவே அமைந்திருக்கின்றன. இறைவனைப் போன்று என்றென்றும் கட்டிளமை திகழும் கன்னிமையோடு நின்று நிலவும் நம் தமிழ்த் தெய்வத்திற்கு இவர் இயற்றி யளித்த சிந்தாமணி அழகின்மேல் அழகு செய்யும் ஓர் அருங்கலம் ஆகும் என்பதில் ஐயமில்லை.
வாழ்க ! திருத்தக்க தேவர் மலரடிகள்!
|