என்று
கூறுதலை நோக்கின் அவர் தாம் பயின்றதோர் உதயணன் கதையாகிய பெருநூலின்கண்
கண்டதொரு காட்சியையே எடுத்திங்ஙனம் கூறுகின்றார் என்றுணரலாம். சீத்தலைச்
சாத்தனார் காலத்தே வடமொழியில் உதயணன் கதை பற்றிய நூல்கள் தோன்றவில்லை. குணாட்டியர் இயற்றியதாகக் கூறப்படும் பைசாசமொழிக் காப்பியம் கி. பி. 3
ஆம் நூற்றாண்டிற்றான் முதன் முதலாக வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்று
ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஆதலால், சீத்தலைச் சாத்தனார்
இப்பெருங்கதையையே பயின்று கூறுகின்றார் என்னலாம். இப்பொழுது நமக்குக்
கிடைத்துள்ள பெருங்கதையில் அந்த யூகி யந்தணன் உருவுக் கொவ்வா உறுநோய் கண்டு மாக்கள் பரிவுறும் பகுதி இறந்துபோயிற்று; ஆதலால் அதனைக்
காண்டற்கில்லை.
இந்நூலிற் செய்யுணடையைச்
சமயச்சார்பான சொற்களையும், நிகழ்ச்சிகளையும் அகற்றி, நோக்கின் நந்தம்
அருமைப் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாகிய மேற்கணக்கு நூல்களின்
செய்யுணடையையே பெரிதும் ஒத்திருத்தலானும், இப் புலவர் பெருமான் முற்கூறப்பட்ட மணிமேகலை சிலப்பதிகாரம் முதலியவற்றின் ஆசிரியர்கட்குக்
காலத்தால் முற்பட்டவர் என்று துணியலாம்.
கொங்குமண்டல சதகத்தில் ''உதயேந்திரன் காதை நிகழ்த்துதற்கு மூன்று
பிறப்புற்றனர் என்பது,'' புத்தர் அச் சமயத்தைத் தோற்றுவிக்க இருபத்தேழு
பிறப்புகள் எடுத்து இறுதிப் பிறப்பில் தோற்றுவித்தனர் என்பது போன்றதொரு
உபசாரவழக்கு என்னலாம். அங்ஙனம் கூறுவதன் கருத்து இச்செயல் ஒருபிறப்பிலே செய்து
முடிக்கவியலாத சிறப்புடைத்து என்பதேயாம்.
இப்புலவர் பெருமான் அக்காலத்தே சிறப்புற்றோங்கிய அருக சமயத்தை
மேற்கொண்டவர். அவ்வருக சமயத்தே கர்ண பரம்பரையாக வழங்கி வந்ததும்
அச்சமயச் சார்பான முடிவேந்தர் வரலாறும் ஆகிய ''பிருகத்கதா'' என்னும்
வரலாற்றில் இவர் ஒரு கூற்றினைப் பொருளாகக் கொண்டு இந்நூலை இயற்றினர் என்று
தோன்றுகின்றது. இவ்வுதயணன் கதை அப்பிருகத் கதையின் ஒரு பகுதியே ஆதலின்,
''பெருங்கதை'' என்றே வழங்கப்பட்டது.
வாழ்க கொங்குவேளிர் வண்புகழ்!
|