முகவுரை.
அருந்தமிழன்பர்காள்!
படிப்பதற்கு மிக
இனிய வில்லிபுத்தூரார் பாரதத்துப் போர்ச் சருக்கங்கட்கு,
காலஞ்சென்ற ஸ்ரீ. உ. வே. வை. மு. சடகோபராமாநுஜாசார்ய ஸ்வாமிகளும்,
ஸ்ரீ.
உ. வே. சே. கிருஷ்ணமாசார்ய ஸ்வாமிகளும்உரைகண்டு
வெளியிட்டிருந்தமை இத்தமிழுலகு நன்கறியும். அவற்றுள் சல்லிய சௌப்திக
பருவங்களடங்கிய பதினெட்டாம் போர்ச்சருக்கம் முன்னரே அச்சிடப்பட்டு
வெளிவந்துள்ளது. எஞ்சிய பதினேழுநாட் போர்ச்சருக்கங்களும் கிடைப்பது வெகு
அருமையாய் விட்டதனாலும், பலரும் அப்பகுதிகளை வேண்டுவதனாலும்,
அவ்வுரையையே பார்வையிட்டுச் சில திருத்தங்கள் செய்தும், சங்கப்பதிப்பிலுள்ள
பாடங்களோடு ஒத்துப் பார்த்து அப்பதிப்பிற் சிறப்புற்றிருந்த பாடங்களை
மேற்கொண்டும் மூலமும் உரையுமாக இந்தப்பகுதியை வெளியிட்டனர் எனது
தமப்பனாராகிய ஸ்ரீ. உ. வே. வை. மு. கோபாலக்ருஷ்ணமாசார்யஸ்வாமி
அவர்கள். அப்பதிப்பில், அபிதானசூசிகையகராதி, அரும்பதவகராதி, சில
அருந்தொடர்கள் முதலியன இறுதியிற் சேர்க்கப்பட்டன. இந்த இரண்டாம்பதிப்பு
முதற்பதிப்பையொட்டியே அமைக்கப்பட்டிருப்பினும், சில அரிய விடயங்கள் உரிய
இடங்களிற் சேர்க்கப்பட்டு மிளிர்கின்றன. மற்றும், செய்யுண்முதற்குறிப்பகராதியும்
இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பு அச்சாகுங்கால், அரிய விடயங்கள்
சேர்த்தல், அச்சுப்பிழைதிருத்தல் முதலிய பல்லாற்றானும் தமது பேருழைப்பினை
நல்கி, இப்பதிப்பைச் செம்மையுற ஆக்குதற்கு உதவியவர் சென்னை விவேகாநந்தர்
கல்லூரித் தலைமைத்தமிழ்ப் பேராசிரியர், வித்வான் c. ஜெகந்நாதாசார்யர்,
M.A., L.T.Dipl. Geog.என்பவர். அவருடன் உதவி புரிந்தவர் ஈகை ஸ்ரீ.
E.S.வரதாசார்யர்B. A.இவ்விருவர் திறத்தும் நன்றியறிதலுடையேன். இந்நூல் செவ்வன்
முற்றுப்பெறத் தோன்றாத்துணையாயிருந்த தேர்கடவிய
பெருமானின் கனைகழல்களை அநவரதமும் வழுத்துவேன்.
ஹேவிளம்பி |
ஐப்பசிமீ |
வை. மு. நரசிம்மன்.
|
|