முகவுரை.
 

அருந்தமிழபிமானிகட்கு ஓர் விண்ணப்பம்.
 
கம்பராமாயணம் முழுவதற்கும் உரைகண்டு வெளியிட்டபின், வில்லிபுத்தூரார்பாரதம் முழுவதுக்கும் உரைகாண வேணுமென்று அடியேன் திருத்தமப்பனார்ஸ்ரீ வை. மு. கோபாலகிருஷ்ணமாசாரிய ஸ்வாமிகளைப் பலர் ஊக்கியதுண்டு. அவர்களின் விருப்பப்படியே அவர் தமது ஆசிரியன்மாரான ஸ்ரீமாந். வை. மு.சடகோபராமாநுஜாசார்ய ஸ்வாமிகள், ஸ்ரீமாந். சே. கிருஷ்ணமாசார்யஸ்வாமிகள் இருவரும் முந்துறவே பெரும்பாலான பகுதிகட்கு உரைகண்டிருப்பவற்றைக்கொண்டும் அவர்கள் உரையெழுதாது விட்ட பகுதிகளுக்குத் தாமே உரைகண்டும் வில்லிபாரதம் பத்துப்பருவங்களுக்கும் நல்லுரையைப்பூர்த்தி செய்தனர்.
 
அவற்றுள்ஐந்தாவதாகிய உத்தியோகபருவம் இஞ்ஞான்று வெளியிடப்படுகிறது.  செய்யுண்முதற்குறிப்பகராதி, அபிதான சூசிகையகராதி, அரும்பதவகராதி முதலியன சேர்க்கப்பட்டு இவ்வுரை மேலும் மிளிர்கிறது. இந்தப்பருவத்தின் உயிர்நிலையாகிய கிருட்டிணன் தூது சருக்கம் அனைவரும் விரும்பிக் கற்கின்றதொன்றாகலின் விழுமிய உரை திறம்பட எழுதப்பட்டுள்ளமை பிரசித்தம்.  இந்தப் புதிய பதிப்பு அச்சாகுங்கால் பிழைகளைக் களைந்து மேற்குறித்த சேர்க்கைகளைக் கூட்டிச் செம்மையுறவாக்கி உதவியவர், விவேகாநந்தா கல்லூரித் தலைமைத்தமிழ்ப்பேராசிரியரான ஸ்ரீ. உ. வே. வித்வான்C. ஜெகந்நாதாசார்யர்,  M.A. (Hist), M.A. (Tamil), L.T., P.O.L. Dip. Geog. ஆவர்.இவருடன் ஈகை ஸ்ரீ. E. S.வரதாசார்யர்.B.A.அவர்களும் உதவி புரிந்தார்.இவ்விருவர்திறத்தும் நன்றியறிதலுடையேன்.      இந்நூல்செவ்வன் முற்றுப்பெறத் தோன்றாத்துணையா யிருந்த தேர்கடவிய பெருமானின் கனைகழல்களை அநவரதமும் வழுத்துவேன்.

விசுவாவசு வரு
பங்குனிமீ
1966

இங்ஙனம்,
வை. மு. நரசிம்மன்.