பின்னையோர் உரை

முதற்சருக் கந்தன்னிற் கவிமுப்பத் தொன்பதாம்
  இதனிரண் டாவதன்னில் ஈண்டுமுப் பத்து நான்காம்
  பதமுறு மூன்றுதன்னில் பாட்டிருபத் தெட்டாகும்
  விதியினா னான்குதன்னில் நாற்பத்து மூன்ற தன்றே.


இன்புறு மைந்து தன்னி லிரட்டித்த பதின்மூன் றாகும்
  நன்புறத் கூட்டவெல்லா நான்கை நாற்பதின் மாற
  வன்பினற் றொகையின் மேலே வருவித் தீரைந் தாகும்
  இன்புறக் கதையைக் கேட்பா ரியல்புடன் வாழ்வ ரன்றே.

இப் பாடல்கள் இரண்டும் ஆசிரியர் வாக்காகத் தோன்ற வில்லை. பின்வந்தோர் பாடிச் சேர்த்ததாக இருக்கலாம்.  ஒருகால் காப்புச் செய்யுளை நூலின் முதற்கண் தனிப்பட நிறுத்தினாற்போல, காவிய ஆசிரியரே தம் காவியப் பாடல்களின் எண்ணளவைச் சுட்டிப் பாடிவைத்தார் என்றும் கொள்ள இடமுண்டு.

இவற்றுள் இக் காவியத்தில் உட்பிரிவுகளாகிய ஐந்து சருக்கங்களிலும் தனித்தனி அடங்கிய செய்யுள்களும், நூல் முழுமைக்கும் ஆன செய்யுள் தொகையும் சுட்டப்பட்டுள்ளன.

முதற் சருக்கம் கவி
-
39
இரண்டாம் சருக்கம் கவி   
-
34
மூன்றாம் சருக்கம் கவி 
-
28
நான்காம் சருக்கம் கவி
-
43
ஐந்தாம் சருக்கம் கவி
-
26
ஆகக் கவி
-
170

இந் நாககுமாரன் கதையை இன்புறக் கேட்போர் நல்லியல்பு களுடன் வாழ்வர் என்று பயனும் கூறி இக் காவியத்தின் பாடல் தொகைப் பாடல் முடிவுறுகிறது.