xLii

சிவமயம்

சிவஞான சுவாமிகள் வரலாறு

செந்தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராய் வீற்றிருந்து சிவபிரானார் அத்தமிழைப் பரப்பாநின்ற பாண்டி நன்னாட்டில் தமிழ் முனிவர் எழுந்தருளி இருக்கும் பொதிகை மலைச் சாரலிலே பாவநாசத்திருத்தலத்தைச் சார்ந்து பொருநை நதிக்கரையில் விக்கிரமசிங்கபுரம் என்னும் நற்பதி சிறந்து விளங்கியது.

அந்நற்பதியில் சைவ வேளாளர் நன்மரபில் வந்த ஆனந்தக் கூத்தர், கற்பிற் சிறந்து குறிப்பறிந்தொழுகும் தம் துணைவியார் மயிலம்மையொடும் வாழ்ந்து வந்தனர். மரபிரண்டுஞ் சைவநெறி வழிவந்த கேண்மையராய் இல்லறத்தை நல்லறமாய் நடாத்துங்கால், அகத்தியர் திருவருளை முன்னமே பெற்று ஏழு தலைமுறை அளவும் திருவருட் புலவர்களே மக்களாக வழிவழி வரும் அக்குடியில் அவ்வேழாவதாகும் வரப்பேற்றினால் அவர் தங்கட்குச் சிவஞானச் செல்வராக நம் முனிவர் பெருமான் அவதரித்தனர்.

வரப்பிரசாதமாக வாய்த்த மகனார்க்குத் தாய்தந்தையர் ‘முக்களாலிங்கர்’ எனப் பிள்ளைத் திருப்பெயரிட்டழைத்தனர். பாண்டி நாட்டுத் திருக்கருவைப் பதியில் முக்களாமரத்து நீழலில் எழுந்தருளி விளங்கும் சிவபிரானார் திருவருளால் அப்பெயர் வாய்க்கப்பெற்ற மகவு இளம்பிறைபோல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் உரிய காலங்களில் சாதகன்மம் முதலிய செய்யப்பெற்று வளர்வாராயினர்.

ஐந்தாண்டு நிரம்புகையில் முக்களாலிங்கர் பள்ளியிற் சேர்க்கப் பெற்றனர். முற்பிறப்புக்களிற் கலைஞானம் கைவரப் பெற்றிருந்த சிறிய பெருந்தகை நன்கு கல்வி பயின்று வந்தனர். அங்ஙனம் வருநாளில் ஓர்நாள் பள்ளியினின்றும் வீட்டிற்கு வரும்பொழுது, திருவாவடுதுறை ஆதீனத்து முனிவர் பெருமக்கள் சிலர் பாவநாசத்தை நோக்கிச் செல்லுதலைக் கண்ட முக்களாலிங்கர் ஆவின்பின் செல்லும் கன்றுபோல அன்புமீதூர்ந்து தொடர்ந்து போய் அம்முனிவரர்தம் திருவடிகளில் பணிந்தெழுந்து ஒருமருங்கொதுங்கி நின்று தம் வீட்டிற் கெழுந்தருளுமாறு குறை இரந்து வேண்டினர். சிறுவர்தம் சொல்லையும் செயலையும் ஒருங்கு நோக்கிய துறவோருள்ள நிலையை எங்ஙனம் எழுதிக்காட்ட இயலும். இன்சொல் லென்னும் விறல்கயிற்றில் விருந்தினரை வளைத்து உடன்கொண்டு சென்ற பருவச் சிறுவர் தம் பெருஞ்