Liii
அறிவு (Practical wisdom) இவ்வுண்மையைக் கடைப்பிடித்தே வேதவியாசர்
நான்கு மாணாக்கர் மூலம் நான்கு வேதங்களையும் உலகில் பரப்பியதோடு
அமையாது. பதினெண் புராணங்களையும் கேட்டுணர்ந்து சூதமுனிவர் மூலம்
உலகிற் பரப்பினார். சுருங்கக் கூறின், உயர்ந்த கருத்துக்களை எல்லோரும்
உணரும்படி எளிமையாகவும் இனிமையாகவும் உணர்த்துவனவே புராணங்கள்
ஆகும். ஆதலால், புராணங்களுக்கு இலக்கியத்திலும் சாத்திரத்திலும் ஒரு
சிறந்த இடம் என்றும் இருக்கும் என எண்ணலாம்.
திருக்குறள், திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலியவற்றுள் புராணக்
கதைகள் வருவதை உணர்ந்தால், புராணங்களைக் குறைவாக எண்ணி மதிக்க
ஒருவரும் ஒருப்படார்.
மேற்கூறிய உயர்வும், பயனும் உள்ளனவாய், நம் நாட்டின் பழைய
நாகரிகத்தையும், பண்பாட்டினையும், மக்களின் பலதலைப்பட்ட உணர்வு
நெறிகளையும் சொல்லோவியஞ் செய்து காட்டும் புராணங்களுள்
காஞ்சிப்புராணமும் ஒன்று ஆகும்.
இது திராவிட மாபாடிய கருத்தராகிய மாதவச் சிவஞான சுவாமிகளால்
இயற்றப்பெற்றது. இலக்கிய இலக்கணச் செறிவும் கற்பனைத் திறனும் உள்ளது.
பொதுவாகச் சிவபுராணங்கள் எல்லாம் வேத உபப்பிருங்கணம்
எனப்படினும் அத்தன்மையில் தலைசிறந்து விளங்குபவை கந்தபுராணமும்
சிவஞான சுவாமிகளால் இயற்றப்பெற்ற காஞ்சிப் புராணமுமே என
எடுத்துக்கூறுதல் மிகையாகாது. கந்தபுராணத்திலுள்ள வரலாறுகளெல்லாம்
காஞ்சிப் புராணத்திலமையும்; காஞ்சிப் புராணத்திலுள்ள வரலாறுகள்
அனைத்தும் கந்தபுராணத்தில் அமைந்துள்ளன. ஆயினும் முன்னையது
மிக விரிந்த பார காவியமாய்க் கலைஞானங்களின் எல்லையை ஆங்காங்கு
வரையறுத்து விளக்கிச் செல்வது. காஞ்சிப்புராணம் கலைஞானத்தின்
தெளிவாய் அமைந்து மக்களுணர்வைச் சிவநெறியின்கண் செவ்விதின்
உய்ப்பது. வேத மந்திரங்களையும் உபநிடதத் தொடர்களின் பொருளையும்
ஆங்காங்குத் தெரித்துரைப்பது, இது தமிழ்ப் புலமை நிரம்ப விரும்புவோரும்,
சித்தாந்த சைவ நுண் பொருள்களை உணர்ந்து இன்புறக் கருதுவோரும்
இன்றியமையாது ஓதி உணர்தற்குரியது.
இப்புராணம் இதற்குமுன் பல பெரியோர்களால் பலவகையில்
அச்சிடப்பட்டு மக்களுக்குக் கிடைத்துள்ளது. ஆயினும், இஞ்ஞான்று இதனைப்
பெற்றுக் கற்றுணர விரும்புவோர்க்குப் பிரதிகள் சென்ற பத்தாண்டுகளுக்கு
மேலாகக் கிடைத்தல் அரிதாயிற்று. ஆதலினால் இதனைக் காஞ்சிபுரம்
மெய்கண்டார் கழக ஆசிரியரும் முதுபெரும் புலவருமாகிய அருட்டிரு.
பொன். குமாரசாமி அடிகள் அவர்கள் தம் முதுமைப் பருவத்தே அச்சிட்டுப்
பலருக்கும் கிடைக்கும்படி செய்ய முன்வந்தது போற்றுதற்குரியது. அவர்கள்
காஞ்சிபுரத்தில் பரம்பரை
|