Lxiii

இதனாலும் புராணம் வேதாந்தப் பொருளை மிகத் தெளியச் செய்யுங் கருவி என்பது புலனாயிற்று. சிறப்புடைய புராணங்கட்கும் வேதாந்தத் தீதில் பொருளுக்கும் உள்ள அணுக்கத் தொடர்பு நுணுக்கமாகத் தெரிந்தது.

உயிர்கட்குள்ள நோய்கள் பெரியனவும் சிறியனவுமாக இரு திறப்படும்.. அவற்றுள் பெரியன இறப்பும் பிறப்புமாம். ஆயினும் பிறப்பைப் பெரியதொரு நோயாகக் கொள்ளார் பேதையர். இறப்பை மட்டும் கொண்டஞ்சும் அவர்க்கு அவ்விறத்தலாகிய பெரிய துன்பம் பிறத்தலால் வருவதென்பது தெரியாது. தெரிந்தோர் ‘யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்கு என்கடவேன்’ என்று நைவர். அந் நைதலை விளைக்கும் நோய் கெடக் கடவுளை நூலே உணர்த்த வல்லன. அதனால்தான். நம் ஆசிரியருள் பெரியராம் அப்பர், “நூலால் நன்றா
நினைமின்கள் நோய் கெட’’ என்றருளினார். அந்நூல் வகையுள் அடங்கும்
புராணம், கடவுளை நன்றா நினைய உணர்த்தும் ஆற்றல் சான்றவை.
‘நான்மறை ஞானமெல்லாம் ஆவகை ஆவர்போலும்’ ‘கலையாரும் நூலங்கம்
ஆயினான் காண்’ என்பவற்றின் கருத்தை ஊன்றியுணர்தல் மிக நன்றாம். மறை நான்கும் அங்கமாறும் பிறகலையும் சிவரூபம் என்னும் உண்மையைத் திருமுறைகளில் பயிலக் காணலாம். காணவே புராணமும் சிவரூபமே என்பது பெற்றாம். சிவரூபத்தைக் கொண்டே சிவத்தை உணர்தல் வேண்டும். எருமையுருவைக் கொண்டு பசுவை அறியலாகுமோ? வேத முதல்வனை வேதமே முதல் முதலாகத் தொழுது காட்டிற்று. வேதாங்கங்களும் வேதம் தொழும் ஆற்றை விளக்கிக் காட்டின. உபவேதங்களும் உபாங்கங்களும் அன்னவாயின. விளக்குதலில் மட்டும் வேறுபட்டனவே அவையெல்லாம் பொருளால் வேறுபட்டன அல்ல. அதனால், புராணம் வேதத்தின் வேறுபட்டன ஆகா. ‘ஆயிரம் ஆரணம்’ உள. அவற்றை ஓதுவது எதற்கு? கடவுள் நம் உள்ளத்திற் புகும் பொருட்டே. மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னும் பொருட்டே. அம்மன்னுதற்கு, வேதமுதல்வனுடைய குறிகளையும் அடையாளங்களையும் கோயில்களையும் நெறிகளையும் நேர்மைகளையும் அறிதல் வேண்டும். அவற்றையெல்லாம் விளக்குவன புராணங்கள். சிவபிரான் திருவடிக்கு மனம்புகாப்பொறியிலிகளை அப்பர் கடிந்து அறிவுறுத்தருள்கின்றார்.

“குறிக ளும்அடை யாளமும் கோயிலும்
நெறிக ளும்அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியி லீர்மனம் என்கொல் புகாததே’’