vi
  “வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே ”  

என்ற அப்பர் திருமொழியும், 

 “வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து”

என்ற திருவாசகமும் இதனையே அறிவுறுத்துகின்றன.  
 
மனத்தால்  நினைதல், வாயால் வாழ்த்தல், காயத்தால் வணங்குதல்
என்னும்     மூன்றனுள்    இடைநிற்கின்ற    வாயால்    வாழ்த்தல்
தனிச்சிறப்புடைய   ஒன்றாகின்றது.  ஏனெனில்,  இறைவன்   ஏனைப்
பொருள்கள்போல எல்லாராலும் கண்ணாற் காணப்படும் பொருளல்லன்;
அதனால்    காட்டப்படாத   பொருளும்   ஆகின்றான்.   கண்ணாற்
காணப்படும்   பொருளே   காயத்தால்   வணங்குதற்கும்,  கருத்தால்
நினைத்தற்கும்   உரியதாகும்.  ஆகவே,  கண்ணிற்குக்  காணப்படாத
இறைவனை மக்கள் நினைத்தலும், வணங்கலும் இயலாவாகின்றன.  
 
கண்ணாற்     காண்டலும், கருத்தாற் கருதலும் இயலாத பொழுது
இறைவனை  மக்கள்  உணர்வது  எவ்வாறு  எனின்,  முன்னைத் தவ
முதிர்ச்சியால்   அரியரினும்   அரியராய்   அவனைக்  காணப்பெற்ற
பெருமக்கள் ஒரு சிலர் ‘ நாம்பெற்ற  இன்பம்  பெறுக  இவ்வையகம்’
என்னும்    பெருங்கருணையால்  அருளிச்செய்யும்  அருள்மொழிகள்
வாயிலாகவே அவனை உணர்தல் வேண்டும். எனவே, அருளாளர்களது
அருள்மொழியைச் செவியால் கேட்டுணரும் கேள்வியுணர்வின் வழியே
மக்கள்  இறைவனை  நினைத்தல்  முதலியவற்றை  முதற்கண்  செய்ய
வேண்டியவராகின்றனர்.  ஆகவே,  அருளாளர்களது அருள்மொழியை
அவர்கள் திரும்பத்திரும்பப் பன்முறை சொல்லிச் சொல்லி  அவற்றின்
பொருளை  உணர்ந்து  உணர்ந்து  உள்ளம்  உருக  நினைந்து, உடல்
குழைய   வணங்கிப்   பயன்பெறல்   வேண்டும்   என்பது   இனிது
பெறப்படுகின்றது.  அதனால்,  மனம்,  மொழி, மெய் என்னும்  மூன்று
பற்றிய   இறைவழிபாட்டில்   இடைநிற்கின்ற   மொழி  வழிபாடாகிய
வாழ்த்துதலே