திரு.S. அருணாசலம் பிள்ளை அவர்களும், கோவையில் எனது உறவினர்களில்
ஒருவராகிய திரு D. ஞானசம்பந்தம் அவர்களும், புராணம், சஞ்சிகை முதலியவற்றின்
பொருள் வருவாய்க்குரிய எழுத்து, (தபால்) அஞ்சல் முதலிய எல்லாப் பணிகளையும்
மனமாரச் செய்துவருகின்றார்கள். புராணப் புத்தகத்தின் கட்டிட வேலைகளை
அழகாகவும், லகுவான செலவிலும், உறுதியாகவும் அப்போதுக்கப்போது
அன்பர்களுக்கு மனமகிழ்ச்சி தரும்படி செய்து கொடுத்து அவர்களது நூல்நிலயத்தை
அணிபெற உதவி வருகின்றவர் கோவை திரு D. சோமசுந்தர முதலியார் ஆவர்.
அவர்களுக்கு என் உள்ளிட்ட எல்லா அன்பர்களுடைய நன்றியும் உரியது. இனி,
இவை எல்லாவற்றிற்கும் மேலாய்ப் புராணத்தை அழகாகவும், அன்பர்கள் எல்லாம்
மகிழும்படியாகவும் எனது மனம்போல் செய்துகொடுத்த சாது அச்சுக்கூடத்தாருக்குக்
கடப்பாடுடைய எனது மனமார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன். சென்ற 19
ஆண்டுகளாக நீண்ட பெருங்கால எல்லையுள் புராண உரை அச்சுவேலைக்கு நேர்ந்த
சங்கடங்களும், இடையூறுகளும் கணக்கில் அடங்காதன. இரண்டு பெரிய உலகப்
போர்களினால் காகிதங்களும், அச்சு வேலைக்கு உரிய சாதனங்களும் கிடைக்காமல்
வருந்தின காலங்கள் பல. பொருள் முட்டுப்பாட்டுக்கு அளவே இல்லை. என்னுடைய
தாமதங்களினால் அச்சுக்கூடத்தாருக்கு நேர்ந்த இன்னல்களும் பல உண்டு. இவை
எல்லாவற்றையும் தங்கள் பெருமையினால் பொறுத்து இவ்வெளியீடு வெற்றிகரமாக முடிவுபெறுவதில் என்போலவே கவலை கொண்டு உதவிய என் நண்பர்கள் இவ்
அச்சுக்கூடத் தலைவர்கள் காலஞ்சென்ற திரு.வி. உலகநாத முதலியார் அவர்களும்,
திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களும் செய்த அன்பு உதவிகள் மிகப்
பெரியன. இப்பொழுது அச்சுக் கூடத்தின் உரிமையாளர்களாகிய ஸ்ரீமதி -
மங்கையர்க்கரசியம்மையார், ஸ்ரீமதி புனிதவதி அம்மையார் இவர்களின் செயலாளராகி
நடத்திவரும் அன்பர் திரு. மு. நாராயணசாமி முதலியார் அவர்களும்,
இவ்வெளியீட்டை விரைவாக நிறைவேற்றிக் கொடுத்ததுமன்றி, நிறைவு விழாவில்
வந்திருந்து சிறப்பித்தார்கள். இவர்கள் எல்லாருக்கும் என் கடப்பாடுடைய நன்றி.
இத்துணையும் உடனிருந்து புராணப் பேருரையை முற்றுவித்து எனை
ஏன்றுகொண்டருளிய கூத்தப்பெருமான் றிருவடிகளை வணங்குகின்றேன்.

     வாழ்கவே வாழ்க சிவபிரான் றிருவடி
     வாழ்கவே வாழ்க சேக்கிழார் சேவடி
     வாழ்கவே வாழ்க திருத்தொண்டர் மாக்கதை
     வாழ்கவே வாழ்க அடியவர் வாழ்கவே.

திருச்சிற்றம்பலம்                    

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

சேக்கிழார் நிலயம்                               
கோயமுத்தூர்                               
29-6-54                               

அடியார்க்கடியேன்
சிவக்கவிமணி,
C.K. சுப்பிரமணிய முதலியார்.