முன்னுரை

அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த திருப்புகழ் பாடல்கள் அமுதம் போன்றவை. ஆறுபடை வீடுகளுள் நான்காம்படை வீடு திருவேரகம் என்ற சுவாமி மலை. சுவாமி மலைத் திருப்புகழ் 38 பாடல்கள். இது நான்காம் தொகுதியாக இப்போது வெளிவருகின்றது.

திருவருள் துணையினால் மற்ற தொகுதிகளும் விரிவுரைகளுடன் விரைவில் வெளிவரும்.

சுவாமி மலை என்னும் திருத்தலத்துக்குத் தஞ்சாவூர்-மாயூரம் பிரிவிலுள்ள சுவாமி மலை ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கி வண்டிகள் மூலமாகவும், கும்பகோணம் ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கி திருவிடைமருதூர் to  சுவாமிமலைச் செல்லும் டவுன் பஸ் மூலமாகவும் செல்லலாம். சுவாமி மலை ஸ்டேஷனிலிருந்து வடக்கே ஒரு மைல் தூரத்திலும், கும்பகோணம் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து மேற்கே 5 மைல் தூரத்திலும் உள்ளது இந்த ஸ்தலம்.

சுவாமிநாதசுவாமி (செய்குன்று) மலைமேல் எழுந்தருளியிருக்கிறார். அடிவாரத்தில் இராஜகோபுரத்திற்கு உட்பக்கம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.

சுவாமி மலைக்குத் திருவேரகம், குருமலை, தாத்ரீகிரி, சுந்தராசலம் எனப் பல பெயர்கள் வழங்குகின்றன. ஸ்தல விருக்ஷம் நெல்லி மரம். ஆதலால் “தாத்ரீகிரி” எனப் பெயர் பெற்றுள்ளது.

இங்கு நான்கு தீர்த்தங்கள் உள்ளன. அதில் “குமாரதாரை” என்பதும் ஒன்று. இது கோவிலுக்குத் தெற்கே ஒரு பர்லாங் தூரத்திலுள்ள காவிரியாற்றின் பெயர். சிவபெருமானுக்கு முருகக் கடவுள் பிரணவ உபதேசம் செய்த வரலாற்றினாலும், கந்தபுராணம் கடவுள் வாழ்த்தில் “பிறவி நீத்திடும் தாரகத் துருவமாந் தலைமை யெய்திய ஏரகத்தறுமுகன்” என்பதாலும் இத்தலம் சுவாமி மலை எனப் பெயர் பெற்றது.