முருகா
முன்னுரை
முருகப்பெருமான் ஒருவரையே பாடும்
பரமபதிவிரத நிலையையுடைய பரமகுருநாதராகிய அருணகிரிநாதர் உலகம் உய்யப்
பாடிய தெய்வத் தமிழ் திருப்புகழாகும்.
இது பிறவிப் பிணியை மாற்றும் மருந்தென
உணர்க.
அருணகிரிநாதர், மூலாதாரம், சுவாதிஷ்டானம்,
மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களையும் ஆறு
படைவீடுகளாக அமைத்துப் பாடியருளினார். குன்றுதோறாடல், விசுத்தி
என்ற ஐந்தாவது படைவீடு ஆகும். அதி அற்புதமான சந்தங்களையுடையதாய்
பரமவேத வேதாந்த நுண்பொருள்களை யுடையதாய் திகழ்வது இப்பாடல்கள்.
இப்பாடல்களுக்கு திருவருள் துணை
புரியச் சிறியேன் உரை எழுதி வெளியிட்டேன். அந்த நூல் இப்போது கிடைப்பது
அரிதாகிவிட்டது.
தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக்
கொண்டு பல காலமாக, நல்ல நூல்களை வெளியிடுகின்ற நற்பணியை மேற்கொண்ட
சென்னை வானதி பதிப்பகம் திரு. திருநாவுக்கரசு அவர்கள் இப்போது
இந்தக் குன்றுதோறாடல் என்ற பகுதியை அச்சிட்டு அடியார்க்கு அமுது
விருந்தாக வழங்குகின்றார். இந்த நூல் ஐந்தாம் படைவீட்டுத் திருப்புகழ்
முற்பகுதியாக வெளிவருகின்றது.
இது முருகனடியார்க்கு பவப்பிணியை
மாற்றும் அருமருந்தாகும்.
இதனை ஏனோரும் வானோரும் போற்றப்
பெருவாழ்வு பெற்று உய்வார்களாக. |