முன்னுரை
ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த
திருப்புகழ்ப் பாடல்களுக்கு 31ஆண்டுகளாகத் திருப்புகழமிர்தம் என்ற
மாத வெளியீட்டில் உரை எழுதினேன். மேற்படி திருப்புகழமிர்தத்தில் வெளி வந்த
உரைகளில் விநாயகர்துதி, நூல், முதற்படை வீடாகிய திருப்பரங்குன்றம்
ஆகியவற்றின் திருப்புகழ்ப் பாடல்கள் 20-க்கும் விரிவுரைகள் முதல் தொகுதியாகவும்
இரண்டாவது படைவீடாகிய திருச்செந்தூர்த் திருப்புகழ்ப் பாடல்கள் 83-க்கும்
உரிய விரிவுரைகள் இரண்டாம் தொகுதியாகவும் வெளிவந்தன. மூன்றாவது படைவீடாகிய பழநி (திருவாவினன்குடி)
திருப்புகழ்ப் பாடல்கள் 97-க்கும் விரிவுரைகள் மூன்றாம் தொகுதியாக
இப்போது வெளிவருகிறது. பழநி என்னும் திருத்தலம் திண்டுக்கல் ஜங்ஷனுக்கும்,
கோயமுத்தூர் ஜங்ஷனுக்கும் இடையில் உள்ளது. ரெயில் மூலமாகவும் பஸ்களிலும்
செல்லலாம். எல்லா வசதிகளுடனும் கூடிய நகரம். இது மணிபூரக க்ஷேத்திரம். பெரும் புகழுடையது.
சிவமலை என்னும் பெயரும் பூண்டது. பல சித்தர்களும், முத்தர்களும் வாழ்கின்ற
மகிமையுடையது. போகமுனிவர் அருள் பெற்ற தலம். ஞான தண்டினை ஊன்றிய முருகன்
பாலவடிவுடன் எழுந்தருளிய ஞானமலை. “அதிசயம் அநேகம் உற்ற பழநி” என்று
சுவாமிமலைத் திருப்புகழிலும் வருகிறது. இன்னும் பழநியின் பெருமைகளை
“பதினாலு உலகோர் புகழ் பழநி” (60) “காசிய மீறிய பழநி” (82) “பிரகாசம்புரி
பழநி” (83) என்றும், திருவாவினன்குடியின் பெருமைகளை (10) (12) ஆகிய
பாடல்களின் விரிவுரைகளிலும் கூறப்பட்டுள்ளது.
|