நூற்பயன்

[எண்சீரடியாசிரிய விருத்தம்]

திங்களணி திருவால வாயெம் மண்ணல்
      திருவிளையாட் டிவையன்பு செய்து கேட்போர்
சங்கநிதி பதுமநிதிச் செல்வ மோங்கித்
      தகைமைதரு மகப்பெறுவர் பகையை வெல்வர்
மங்கலநன் மணம்பெறுவர் பிணிவந் தெய்தார்
      வாழ்நாளு நனிபெறுவர் வானா டெய்திப்
புங்கவரா யங்குள்ள போக மூழ்கிப்
      புண்ணியராய்ச் சிவனடிக்கீழ் நண்ணி வாழ்வார்.

(இ - ள்.) திங்கள் அணி - சந்திரனை யணிந்த,
திருவாலவாய் - திருவாலவாயில் எழுந்தருளிய, எம் அண்ணல் -
எம் இறைவன் புரிந்தருளிய, திருவிளையாட்டு இவை - இத்
திருவிளையாடல்களை, அன்பு செய்து கேட்போர் - அன்போடு
வழிபாடு செய்து கேட்பவர், சங்க நிதி பதுமநிதி - சங்கநிதி
பதுமநிதிகளைப் போலும், செல்வம் ஓங்கி - செல்வவத்தால்
உயர்ந்து, தகைமை தரும் மகப் பெறுவர் - பண்புடைய மக்கட்
பேற்றையடைவர்; பகையை வெல்வர் - பகைகளைக் கடப்பர்;
மங்கலம் நல் மணம் பெறுவர் - மங்கலமாகிய நல்ல
மணங்களைப்பெறுவர்; பிணிவந்து எய்தார் - நோய்கள் வற்து
அடையப் பெறார்; வாழ் நாளும் நனி பெறுவர் - நீண்ட
ஆயுளையும் பெறுவர்; வான் நாடு எய்தி - விண்ணுலகிற் சென்று,
புங்கவராய் - தேவராய், அங்கு உள்ள போகம் மூழ்கி - அங்குள்ள
இன்பங்களை மிக நுகர்ந்து, புண்ணியராய் - சிவபுண்ணியம்
உடையவராய், சிவன் அடிக்கீழ் - சிவபெருமான் திருவடி நீழலில்,
நண்ணி வாழ்வார் - இரண்டறக் கலந்து வாழ்வார் - இரண்டறக்
கலந்து வாழ்வார், எ - று.

     திங்களணி அண்ணலென இயைக்க. திருவிளையாட்டு என்றது
அதனைக் கூறும் நூலுக்காயிற்று. இறைவன் செய்யுஞ் செயலெல்லாம்
எளிதின் முடிதனோக்கி அவற்றை அவனுடைய விளையாட்டுக்கள்
என்ப;

"காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி"

என்னும் திருவாசகமும்,

"சொன்னவித் தொழில்க ளென்ன காரணந் தோற்ற வென்னின்
முன்னவன் விளையாட் டென்று மொழிதலுமாம்"

என்னும் சிவஞான சித்தித் திருவித்தமும் நோக்குக. சங்கம்,
பதுமம் என்பன சில வேரெண்கள்; அவ்வளவினையுடைய நிதிகள்
சங்கநிதி, பதுமநிதி எனப்படும்; சங்கு போலும் தாமரை போலும்
வடிவினையுடைய நிரிகள் எனச் கூறுவாரு முளர். இவை
குபேரனிடத்திலுள்ளன வென்பர். திருநாவுக்கரசரும் ‘சங்கநிதி
பதுமநிதி யிரண்டுந்தந்து’ என அருளிச் செய்தல் காண்க. வாழ்நாளு
நனிபெறுவர் என்பதுகாறும் இம்மைப் பயனும், புங்கவரா யங்குள்ள
போக மூழ்கி என்பதனால் மறுமைப் பயனும், சிவனடிக் கீழ் நண்ணி
வாழ்வார் என்பதனால் முத்திப் பயனும் முறையே கூறப்பட்டன. இச்
செய்யுளில், திருவிளையாட்டிவை என்பதனால் நுதலிய பொருளும்,
அன்பு செய்து கேட்பார் என்பதனால் கேட்டற்குரிய அதிகாரியும்,
பிறவற்றால் கேட்போ ரெய்தும் பயனும் பெறப்பட்டமை காண்க. (2)


 

மேல்

மூலம்