முகப்பு

மூத்தபிள்ளையார் வாழ்த்து நேரிசை யாசிரியப்பா

தொடக்கம்


5   திங்கண்முடி பொறுத்த பொன்மலை யருவி
கருமணி கொழித்த தோற்றம் போல
இருகவுள் கவிழ்ந்த மதநதி யுவட்டின்
வண்டினம் புரளும் வயங்குபுகர் முகத்த
செங்கதிர்த் திரளெழு கருங்கடல் போல
10   முக்கண்மேற் பொங்கும் வெள்ளமெறி கடத்த
பெருமலைச் சென்னியிற் சிறுமதி கிடந்தெனக்
கண்ணரு ணிறைந்த கவுன்பெறு மெயிற்ற
ஆறிரண் டருக்க ரவிர்கதிர்க் கனலும்
வெள்ளைமதி முடித்த செஞ்சடை யொருத்தன்
15   உடலுயி ராட வாடுறு மனலமும்
தென்கீழ்த் திசையோன் தெறுதரு தீயும்
ஊழித் தீப்படர்ந் துடற்றுபு சிகையும்
பாசக் கரகம் விதியுடை முக்கோல்
முறிக்கலைச் சுருக்குக் கரம்பெறு முனிவர்
20   விழிவிடு மெரியுஞ் சாபவாய் நெருப்பு
நிலைவிட்டுப் படராது காணியி னிலைக்கச்
சிறுகாற் றுழலு மசைகுழைச் செவிய
ஆம்பன்முக வரக்கன் கிளையொடு மறியப்
பெருங்காற்று விடுத்த நெடும்புழைக கரத்த
 
  கருமிடற்றுக் கடவுளைச் செங்கனி வேண்டி
இடங்கொண் ஞாலத்து வலங்கொளும் பதத்த
குண்டுநீ ருடுத்த நெடும்பா ரெண்ணமும்
எண்ணா விலக்கமொடு நண்ணிடு துயரமும்
25   அளந்துகொடு முடித்த னின்கட னாதலின்
வரியுடல் சூழக் குடம்பைநூ றெற்றிப்
போக்குவழி படையார் துள்ளுயிர் விடுத்தலின்
அறிவுபுறம் போய வுலண்டது போலக்
கடற்றிரை சிறுக மலக்குதுயர் காட்டும்
30   உடலெனும் வாயிற் சிறைநடுவு புக்குப்
போகா துணங்குறும் வெள்ளறி வேழமும்
ஆரணம் போன்றுநின் காலுற வணங்குதும்
கான்முக மேற்ற தொளைகொள்வாய்க் கறங்கும்
விசைத்தநடை போகுஞ் சகடக் காலும்
35   நீட்டிவலி தள்ளிய நெடுங்கயிற் றூசலும்
அலமரு காலு மலகைத் தேரும்
குறைதரு பிறவியி னிறைதரு கலக்கமும்
எம்மனத் தெழுந்த புன்மொழித் தொகையும்
அருள்பொழி கடைக்கண் டாக்கித்
4..   தெருளுற வைய முடிப்பையின் றெனவே.

(உரை)

1-4: திங்கள்.................முகத்த

     (இதன்பொருள்) திங்கள்முடி பொறுத்த-பிறைத்திங்களை தலைமிசைத் தாங்கிய, பொன்மலை அருவி-பொன்மலையினின்றும் வீழுகின்ற அருவியானது; கருமணி கொழுத்த தோற்றம் போல-நீலமணியைக் கொழிக்கின்ற காட்சியை யொப்ப; இருகவுள் கவிழ்த்த மத நதி உவட்டின்-தன் இரண்டு கவுள்களும் சிந்திய மத நீராகிய யாற்றினது பெருக்கின்கண், வண்டினம் புரளும்-வண்டுக் கூட்டங்கள் வீழ்ந்து புரளுதற்குக் காரணமாய்; வயங்கு புகர் முகத்த- விளங்குகின்ற புள்ளிகளை யுடைய யானை முகத்தையுடையோய் என்க.

     (விளக்கம்) திங்கள்-ஈண்டுப் பிறைத்திங்கள். பொன்மலை மூத்த பிள்ளையாருக்கும் மணி வண்டினத்திற்கும் உவமைகள். கவிழ்தல்-சிந்துதல். மதநதி-மத நீராகிய யாறு. உவடு-பெருக்கு. வயங்குபுகர்; வினைத்தொகை. புகர்-புள்ளி. முகத்த: விளி. இருகவுள்-இரண்டு கன்னம். வயங்கு-விளங்கும். பொன்மலை-இமயமலை. பொறுத்த-தாங்கிய.

5 - 6: செங்கதிர்........................கடத்த

     (இ-ள்.) செங்கதிர்த் திரள்எழு-ஞாயிற்றினது சிவந்த ஒளித்திரள் தோன்றா நின்ற, கருங்கடல் போல-கரிய கடல் அலை வீசினாற் போலே; முக்கண்மேல்-ஞாயிறும், திங்களும் நெருப்பும் ஆகிய மூன்று கண்களினிடத்தும்; பொங்கும் வெள்ளம் எறி-பொங்கா நின்ற மதநீர்ப் பெருக்கு அலை எறிதற்குக் காரணமான; கடத்த-மத்தகத்தையுடையோய் என்க.

     (வி-ம்) தலைமை பற்றிச் செங்கதிர் என்றாரேனும் இனம் பற்றித் திங்களையும் கொள்க. எனவே ஞாயிறும் திங்களும் த்யும் ஆகிய முக்கண் என்க. மூன்று கண்களிடத்தும் வெள்ளமாகப் பெருகி அலை எறிகின்ற மதநீரையுடையோய் என்றவாறு.

7 - 8: பெருமலை....................எயிற்ற

     (இ-ள்) பெருமலைச் சென்னியில்-பெரிய மலையினது உச்சியில், சிறுமதி கிடந்தென-இளம்பிறை கிடந்தாற்போல; கண் அருள் நிறைந்த-கண்ணின் கண் அருள்நோக்கம் நிரம்பிய (திருமுகத்தின்கண்); கவின்பெறும் எயிற்ற-அழகுபெற்ற கொம்பினையுடையோய் என்க.

     (வி-ம்.) சிறுமதி-இளம்பிறை இது கொம்பிற்கு உவமை. கண்ணருள் நிறைந்த திருமுகத்தின்கண் எனச் சொல் வருவிக்கப்பட்டது. கவினிஅழகு. எயிறு-கொம்பு.

9 - 14: ஆறு.......................நெருப்பும்

     (இ-ள்) ஆறு இரண்டு அருக்கர்-பன்னிரண்டு என்னும் தொகையைடுடைய கதிரவர்களின்; அவிர் கதிர்க் கனலும்-விளங்குகின்ற கதிராகிய நெருப்பும்; வெள்ளை மதி முடித்த செஞ்சடை ஒருத்தன்-வெள்ளிய பிறையினைச் சூடிய சிவந்த சடையினையுடைய ஒப்பற்றவனாகிய சிவபெருமான்; உடல் உயிர்ஆட ஆடுறும் அனலமும்-உடலோடு தோன்றி வாழும் உயிர்கள் நடுங்கும்படி கையில் ஏந்திக் கூத்தாடுதற்குக் காரணமான ஊழித்தீயும்; தென் கீழ்த்திசையோன் தெறுதரு தீயும்- தென் கிழக்குத் திசைக்குத் தெய்வமாகிய தீக்கடவுள் தன்னைச் சேர்ந்த எல்லாப் பொருள்களையும் அழிப்பதற்குக் காரணமான நெருப்பும்; உடற்றுபு படர்ந்த சிகை ஊழித்தீயும்-உலகினை அழித்தற் பொருட்டு யாண்டும் படர்ந்த கொழுந்துகளை யுடைய ஊழித்தீயும்; பாசக்கரகம் விதியுடை முக்கோல் முறிக்கலைச் சுருக்குக் கரம் பெறு முனிவர்-உறிக்கயிற்றில் தங்கிய கரகத்தினையும் தமக்கென விதிக்கப்பட்ட முக்கோலினையும் முறிக்கலையின் சுருக்கினையும் தம்முடைய கையிற்றாங்கிய துறவோருடைய; விழி விடும் எரியும் சாபவாய் நெருப்பும்-கண்கள் வெளிப்படுத்துகிற வெகுளித் தீயும் சாபமாகிய வாயிற்றோன்றுகின்ற நெருப்பும் என்க.

     (வி-ம்.) ஆறிரண் டருக்கர் என்றது-ஓர் யாண்டின் அமைந்த பன்னிரண்டு இராசிகளிலும் இயக்குங்கால் ஒவ்வோர் இராசியிலும் இயங்குதல் குறித்து அஞ் ஞாயிற்றினைப் பன்னிருவர் என வழங்குதல் மரபு; அப்பன்னிருவரின் பெயர் வருமாறு. தாத்துரு (சித்திரை) சக்கரன் (வைகாசி) அரியமன் (ஆனி) மித்திரன் (ஆடி) வருணன் (ஆவணி) அஞ்சுமான் (புரட்டாசி) இரணியன் (ஐப்பசி) பகவான் (கார்த்திகை) திவசுவான் (மார்கழி) பூடன் (தை) சவித்துரு (மாசி) துவட்டன் (பங்குனி) என்பன; அவிர்தல்-விளங்குதல்; மதி-ஈண்டுப் பிறை என்பதுபட நின்றது; ஒருத்தன்-ஒப்பற்றவன்: தனியனுமாம்; “தாயுமிலி தந்தையிலி தான் தனியன்” என்றார் மாணிக்கவாசகப் பெருமானும். உடல் உயிர்-உடல் கொண்டு உழலும் உயிர்; அனலம்-நெருப்பு; தென்கீழ்த் திசையோன் என்றது அத்திசைக் காவற்றெய்வமாகிய தீக் கடவுளை, தெறுதரல்-அழித்தல்; ஊழித்தீ-ஊழி முடிவின்கண் உலகினை அழிக்கும் வடவைத்தீ. இது பெண்குதிரை வடிவமாயிருப்பது. இது கடல்நீர் தன் எல்லையைக் கடவாது நிற்றற் பொருட்டு இறைவனால் படைப்புக் காலத்தே படைத்து அக்கடல் நடுவே அமைக்கப்பட்டது என்பர். 12ஆம் அடியை உடற்றுபு படர்ந்து சிகை ஊழித்தீயும் எனப் பிரித்துக் கூட்டிக் கொள்க. படர்ந்து என்னும் செய்தெனெச்சத்தை செய்தவென் எச்சமாகத் திரித்துக் கொள்க. சிகை-கொழுந்து. இதனைச் சுவாலை என்பர் வடநூலார். பாசம்-கயிறு; ஈண்டு உறி என்க. கரகம்-கமண்டலம். விதி-நூல் விதி. முனிவர்க்கென்று விதித்தலையுடைய முக்கோல் என்க.

“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய” (தொல்-பொருள் மரபியல்)

எனவரும் தொல்காப்பியமும காண்க முறிக்கலைச் சுருக்கு-துண்டிக்கப்பட்ட துணியினது சுருக்கு, இது துறவோருடைய முக்கோலில் சுற்றப்படுவது, இ்த்துணியை அவிழ்த்து நீருண்ணுதல் முதலிய செய்தற்குத் தம்கையில் சுருக்கிக் கெர்ள்ளுதல் உண்மையின் அதனை ‘முறிக்கலைச் சுருக்கு’ என்றார், முறி-துண்டு, கலை-துணி, சுருக்கு-சுருக்கப்பட்டது, எனவே சுருக்கப்பட்ட துண்டு்த்துணி என்பதாயிற்று, விழிவிடும் எரி என்றது வெகுளித்தீயைச் சாபமாகிய வாய் நெருப்பு என்க,

17-18: நிலை.........................செவிய

     (இ-ள்) நிலைவிட்டுப் படராது-தத்தம் நிலையினின்றும் விரிந்து செல்லாமல்; காணியில் நிலைக்க-தத்தமக்குரிய இடத்திலேயே நிலை பெற்றிருக்கும்படி; சிறுகாற்று உழலும் அசைகுழைச் செவிய-சிறிய காற்று உலவா நின்ற அசையாநின்ற குழையை அணிந்த திருச்செவிகளை யுடையோய் என்க,

     (வி-ம்.) செஞ்சடை யொறுத்தன் ஏந்தி ஆடும் நெருப்பும், கீழ்த்திசையோன் தீயும், ஊழித்தீயும், முனிவர் சினத்தீயும், சாபத்தீயும் தத்தம் இடத்தில் நிலைபெற்றிருக்கும்படி மூத்த பிள்ளையாரின் திருச்செவிகள் அசைகின்றன என்பது கருத்து, அங்ஙனம் அசையாவிடின் அத்தீக்கள் உலகங்களையெல்லாம் அழித்துவிடும் என்பது கருத்து, நிலை-தத்தமக்குரிய இடம், காணி-உரிமை நிலம், பிள்ளையாரின் செவிகள் எழுப்பும் சிறு காற்றே இத்தீக்களை அடக்குதற்குப் போதியதாயிற்று என்பார் ‘சிறு காற்று’ என்றார், சிறு காற்று உழலும் செவி எனவும் அசை குழைச் செவி எனவும்ட தனித்தனி கூட்டுக,

19-20; ஆம்பல்.........................காத்த

     (இ-ள்) ஆம்பல் முக அரக்கன்-யானைமுகத்தையுடைய அரக்கன்; கிளையொடும் மாறிய-தன் சுற்றத்தாருடன் தடுமாறும்படி; பெருங்காற்று விடுத்த-பெிாய காற்றினை வெளிப்படுத்திய; நெடும்புழைக் கரத்த-நெடிய தோளையுடைய துதி்க்கையினை யுடையோய் என்க,

     (வி-ம்.) ஆம்பல்-யானை; ஆம்பல் முகவரக்கன் என்றது கயமகாசுரனை; மறிய-புறமிட்டுத் தடுமாற; புழை-தொளை; கரம்-துதிக்கை,

21-2; கனருமிடற்றுக்......................பதத்த

     (இ-ள்) கருமிடற்றுக் கடவுளை-நீல நிறமுடைய கழுத்தினையுடைய கடவுளாகிய சிவபெருமானிடத்தே; செங்கனி வேண்டி-சிவந்த பழம்பெறுதலை விரும்பி; இடங்கொள் ஞாலத்து-இடமமைந்த உலகமாகவே அப்பெருமானை நினைந்து; வலங்கொளும் பதத்த-அவனையே வலமாக வந்து அப்பழத்தைப் பெற்றுக்கொண்ட திருவடிகளையுடையோய்; என்க,

     (வி-ம்.) கருமிடற்றுக் கடவுள்-சிவபெருமான்; சிவபெருமான் கையிலுள்ள ஒரு பழத்தை இளைய பிள்ளையாரும் மூத்த பிள்ளையாரும் விரும்பிக் கேட்டாராக, அதுகேட்ட சிவபெருமான் நுங்களுள் இவ்வுலகினை வலமாகச் சுற்றி எம்பால் முந்தி வருவார்க்கு இப்பழத்தைத் தருவேன் என்று கூற, அதுகேட்ட முருகக் கடவுள் தன் ஊ்ாதியிலேறி உலகை வலம் வருதற்குச் சென்றாராக, மூத்த பிள்ளையாரோ உலகமெல்லாம் இறைவனுடைய அருளுருவத்தின்கண் அடங்கும் என்பது பற்றி அவ்விறைவனையே வலம் வந்து அப்பழத்தைப் பெற்றுக்கொண்டார். என்னும் புராணக் கதையை இவ்வடிகள் கொண்டுள்ளன, கருமிடறு செங்கனி இடங்கொள் ஞாலம் வலங்கொளும் பதம் என்னுமிவற்றில் முரணணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க,

23 - 5; குண்டு..................................ஆதலின்

     (இ-ள்) குண்டுநீர் உடுத்த-ஆழ்ந்த நீரையுடைய கடலை ஆடையாக உடுத்துள்ள; நெடும்பார் எண்ணமும்-நெடிய உலகின்கண் வாழும் உயிர்களின் நினைவுகளையும்; எண்ணா இலக்கமொடு நண்ணிடு துயரமும்-எண்ணுதற்கியலாத எண்களோடு அவ்வுயிரினங்களுக்கு வருகின்ற துன்பங்களையும்; அளந்துகொண்டு முடித்தல் நின்கடன் ஆதலின்-அளவிட்டுக் கொண்டு அவ்வுயிர்களின் வினைக்கேற்ப முடித்து வைத்தல் உன்னுடைய கடமையே யாதலின் என்க.

     (வி-ம்.) குண்டுநீர்-கடல்; பார்-உலகம்; ஆகுபெயராய் உயிரினங்களை உணர்த்தியது. உயிர்களை வினைக்கீடாக எண்ணிவித்தலும் எண்ணிய அவ்வெண்ணங்களையும் வுனைக்கேற்ப வரையறை செய்துகொண்டு நுகர்வித்தலும் இறைவன் செயலாதல் பற்றி அளந்து கொடு முடித்தல் நின்கடன் என்றார். இலக்கம்-எண்; அவை ஆம்பல், தாமரை, வெள்ளம் முதலியன.

26 - 32: வரி.....................வனங்குதும்

     (இ-ள்) வரி உடல் சூழ-வரிகளையுடைய தனது உடம்பைச் சுற்றி; நூல் குடம்பை நெற்றி-தனது எச்சிலாகிய நூலினாலே கூட்டினை இயற்றிக்கொண்டு; போக்குவழி படையாது-தான் புறம்போதற்கு வழியமைக்காமல்; உள் உயிர் விடுத்தலின்-அக்கூட்டினுள்ளேயே உயிர் விடுதலாலே, அறிவு புறம்போய உலண்டதுபோல; அறிவில்லாதது என்றறியப்படும் அவ்வுலண்டுப் புழுப்போல; கடல்திரை சிறுக மலக்கு துயர் காட்டும் உடல் என்னும் வாயில் சிறை நடுவு புக்கு- கடலின்கண் எழுந்து மறிக்கின்ற அலைகள் தாமும் அளவில் சிறுமை உடையனவாம்படி கலங்குவதற்கு காரணமாகிய துன்பத்தை உண்டாக்குகின்ற உடம்பென்று கூறப்படுகின்ற வெளியேறுதற்கு வாயிலில்லாத இச்சிறைக் கோட்டத்தினுள்ளே புகுந்து; போகாது உணங்குறும் வெள் அறிவேமும்-அத்துன்பங்கள் வந்து மோதுந்தோறும் அதனை விட்டுப் போகாமலே பெரிதும் வருந்தா நின்ற அறியாமையையுடைய யாங்களும்; ஆரணம் போற்றும் நின்கால் இஉற வனங்குவதும்- மறையுணர்ந்த பெரியோர்களாலே உணர்ந்து போற்றப்படுகின்ற நின் திருவடிகளை மிகுதியாக வணங்குகின்றோம் அஃதெற்றுக்கெனின்; என்க.

     (வி-ம்.) வரி-கோடு; குடும்பை-கூடு; நூலால் குடும்பை தெற்றி என மாறுக. தெற்றுதல்-அமைத்தல்; போக்குவழி-புறம்போதற்குரிய வழி; உலண்டு-ஒருவகைப் புழு; கோற் புழு. இப்புழு தன் எச்சிலாலேயே தன் உடம்பைச் சுற்றிக் கூடு அமைத்துக்கொண்டு வெளிப்படுதற்கு வாயில் இல்லாமல் அக்கூட்டையமைத்து அதனுள்ளேயே இறந்துபடும் என்ப. இச்செயலாலேயே அப்புழு அறிவற்றது என்றுணரப்படும் என்பார் ‘உயிர் விடுத்தலின் அறிவு புறம் போய உலண்டு’ என்றார். இவ்வுலண்டுப்புழு வெள்ளறிவினையுடைய மாந்தர்க்குவமை. என்னை? இவர் தாமூம் தமது பழவினையாகிய நூலால் உடலாகிய கூட்டினை அமைத்துக்கொண்டு வெளியேறுதற்கும் வழியின்றி அதனுள் அகப்பட்டுக்கொண்டு துன்பத்தால் வருந்தி அதனுட் கிடந்தே மாய்தலின் என்க. கடற்றிரை, துயருக்குவமை. இடையறாது ஒன்றன்பின் ஒன்றாக வருகின்ற கடல் அலைகளினுங் காட்டில் உயிர்கட்கு வரும் துன்பங்கள் மிகுதி என்றவாறு. மலக்கு துயர்: வினைத்தொகை. மலக்குதல்-கலங்கச் செய்தல். வாய் இல் சிறை எனக் கண்ணழித்துக்கொள்க. உயிர் நினைந்துழி வெளியேறவும் உட்புகவும் வழியில்லாத சிறை என்றவாறு. அச்சிஐயை ஒரோவழி தகர்த்துவிட்டு வெளியேறுதல் கூடுமாயினும் அங்ஙனமும் செய்ய மனமின்றி அதனுட் கிடந்தே வருந்தும் என்று இரங்குவார் ‘சிறை நடுவு புக்குப் போகாது உணங்குறும்’ என்றார். வெள்ளறிவு-அறியாமை. ஆரணம்: ஆகுபெயர். ஆரணம் உணர்ந்த பெரியோர் என்க. மெய்யுணர்வோர் போற்றுதற்குரிய நின் திருவடிகளை வெள்ளறிவேமும் வணங்குதும் என்று தம் பேதமையை நினைத்து இரங்கியபடியாம்.

33 - 8: கான்முகம்............................தொகையும்

     (இ-ள்) கால்முகம் ஏற்ற-காற்றினைத் தன் முகத்திலே ஏற்றுக்கொண்ட; தொளைகொள்வாய் கறங்கும்-தொளையினையுடைய வாயினையுடைய காற்றாடியும்; விசைத்த நடைபோகும் சகடக் காலும்-விரைந்த செலவோடு செல்லுகின்ற பண்டியின் உருளையும்; நீட்டி வலி தள்ளிய நெடுங்கயிற்று ஊசலும்-நீலச் செலுத்தி வலிமையாலே தள்ளிவிடப்பட்ட நெடிய கயிற்றினையுடைய ஊசலும்; அலமருகாலும்-சுழலா நின்ற காற்றும்: அலகைத்தேரும்- பேய்த்தேரும்; குறைதரு பிறவியின் நிறைதரு கலக்கமும்-சுழற்சி முதலியவற்றால் தாழ்தற்குக் காரணமான பிறப்பினது நிறைந்த கலக்கத்தையும்; என் மனத்து எழுந்த புன்மொழித் தொகையும்-என் உள்ளத்திற் றோன்றிய புல்லிய இச்சொல் மாலையினையும் என்க.

     (வி-ம்.) பிறப்பின் சுழற்சிக்குக் காற்றாடியும், சகடக்காலும், ஊசலும், சூரைக்காற்றும், பேய்த்தேரும் உவமைகள். இவற்றின் சுழற்சியினுங் காட்டில் மிக்க சுழற்சியினையுடையது பிறப்பு என்றவாறு. மொழித்தொகை-சொன்மாலை.

39 - 30: அருள்...........................இன்றென

     (இ-ள்) அருள்பொழி கடைக்கண் தாக்கி-திருவருள் மழையைப் பொழிகின்ற நின் கடைக்கண் நோக்கத்தைச் செலுத்தி ஐய-ஐயனே!; இன்று-இப்பொழுது; தெருள் உற-தெளிவுண்டாக; முடிப்பை என-முடித்தருளவை என்று கருதியேயாம் என்க.

     (வி-ம்.) பொழி என்றமையால் அருள்மழை என்க. தாக்கி-செலுத்தி. தெருள்-தெளிவு. ஐய:விளி. முகத்த! கடத்த! எயிற்ற! செவிய! கரத்த! பதத்த! ஐய! உயிர் எண்ணமும் துயரமும் முடித்தல் நின்கடனாதலின் வெள்ளறிவேமும் நின்காலுற வணங்குதும், அஃதெற்றுக் கெனின் எம் பிறவிக்காலத்தையும் இம்மொழித் தொகை யையும் இன்று தெளிவுண்டாக முடித்துத் தருக! என்று கருதியே; என்று வினை முடிவு செய்க. பிறவிக் கலக்கத்தை முடித்தலாவது பிறவிக் கடலினின்றும் கரையேற்றி வீடளித்தல் என்க. புன்மொழித் தொகையை முடித்தலாவது இந்நூல் இடையூறின்றி முடித்தற்கு அருள் செய்தல் என்க. இது வழிபடு கடவுள் வாழ்த்து.


 

மேல்

மூலம்