முகப்பு

முருகக் கடவுள் வாழ்த்து நேரிசையாசிரியப்பா

தொடக்கம்


5   பாய்திரை யுடுத்த ஞாலமுடி வென்ன
முடங்குளை முகத்துப் பஃறோ ளவுணனொடு
மிடையுடு வுதிரச் செங்களம் பொருது
ஞாட்பினுண் மறைந்து நடுவுறு வரத்தால்
வடவைநெடு நாக்கின் கிளைகள்விரிந் தென்னச்
10   செந்துகிர் படருந் திரைகடற் புக்குக்
கிடந்தெரி வடவையிற் றளிர்முக மீன்று
திரையெறி மலைகளிற் கவடுபல போக்கிக்
கற்செறி பாசியிற் சினைக்குழை பொதுளி
அகறிரைப் பரப்பிற் சடையசைந் தலையாது
15   கீழிணர் நின்ற மேற்பகை மாவின்
ஓருட லிரண்டு கூறுபட விடுத்த
அழியாப் பேரளி யுமைக்க ணின்று
தற்பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த
அமையா வென்றி யரத்தநெடு வேலோய்
20   கீழ்மே னின்றவக் கொடுந்தொழிற் கெழுந்து
மாயாப் பெருவரத் தொருமயி லாகிப்
புடவிவைத் தாற்றிய பஃறலைப் பாந்தள்
மண்சிறுக விரித்த மணிப்படந் தூக்கி
25   விழுங்கிய பல்கதிர் வாய்தொறு முமிழ்ந்தென
மணிநிரை சிந்தி மண்புக வலைப்பக்
கார்விரித் தோங்கிய மலைத்தலைக் கதிரென
ஓவறப் போகிய சிறைவிரி முதுகிற்
புவனங் காணப் புகழொடு பொலிந்தோய்
 
  போழ்படக் கிடந்த வொருபங் கெழுந்து
மின்னன் மாண்ட கவிரலர் பூத்த
சென்னி வாரணக் கொடும்பகை யாகித்
தேவர்மெய் பனிப்புற வான்மிடை யுடுத்திரள்
30   பொரியிற் கொறிப்ப புரிந்தொரு ணாடித்
தாமரை பழித்த கைமருங் கமைத்தேய்
ஒருமையி ளொருங்கி யிருகைநெய் வார்த்து
நாரத னோம்பிய செந்தீக் கொடுத்த
திருகுபுரி கோட்டுத் தகர்வரு மதியோய்
35   முலையென விரண்டு முரட்குவடு மரீஇக்
குழற்காடு சுமந்த யானைமகட் புணர்ந்தோய்
செங்கட் குறவர் கருங்காட்டு வளர்த்த
பைங்கொடி வள்ளி படர்ந்தபுய மலையோய்
இமயம் பூத்த சுனைமாண் டொட்டில்
40   அறிவிற் றங்கி யறுதாய் முலையுண்
டுழன்மதில் சுட்ட தழனகைப் பெருமான்
வணங்கிநின் றேத்தக் குருமொழி வைத்தோய்
ஓமெனு மெழுத்திற் பிரமம் பேசிய
நான் மறை விதியை நடுங்குசிறை வைத்துப்
45   படைப்புமுதன் மாய வான்முதற் கூடித்
தாதையு மிரப்பத் தளையது விடுத்தோய்
கூடஞ் சுமந்த நெடுமுடி நேரி
விண்டடை யாது மண்புகப் புதைத்த
குறுமுனி தேற நெடுமறை விரித்தோய்
50   ஆறுதிரு வெழுத்துங் கூறுநிலை கண்டு
நின்றாட் புகழுநர் கண்ணுட் பொலிந்தோய்
மணிக்கா லறிஞர் பெருங்குடித் தோன்றி
இறையோன் பொருட்குப் பரணர்முதல் கேட்பப்
பெருந்தமிழ் விரித்த வருந்தமிழ்ப் புலவனும்
55   பாய்பா ரறிய நீயே யாதலின்
வெட்சிமலர் சூழ்ந்த நின்னிரு கழற்கால்
குழந்தை யன்பினொடு சென்னிதலைக் கொள்ளுதும்
அறிவுநிலை கூடாச் சின்மொழி கொண்டு
கடவுட் கூறா வுலவா வருந்தியும்
60   சனனப் பீழையுந் தள்ளாக் காமமும்
தற்படு துயரமு மடைவுகெட் டிறத்தலும்
தென்புலக் கோமகன் றீத்தெறு தண்டமும்
நரகொடு துறக்கத் துழல்வரு பீழையும்
நீளா திம்பரின் முடித்து
65   மீளாக் காட்சி தருதியின் றெனவே.

(உரை)

1 - 3: பாய்............................திரை

     (இ-ள்) பாய்திரை உடுத்த ஞாலம்-பரவிய அலைகளையுடைய கடலினை ஆடையாக உடுத்த உலகத்தில் வாழ்வோர்; முடிவு என்ன-இஃது இவ்வூழியின் முடிவுக் காலம் என்று அஞ்சாநிற்ப; முடங்கு உளைமுகத்து பல்தோள் அவுணனொடு-வளைந்த பிடரிமயிரையுடைய சிங்கமுகத்தினையும் பலவாகிய தோள்களையும் உடைய அசுரனோடே: செங்களம் மிடை உடு உதிரப் பொருது-குருதியால் சிவந்த போர்க்களத்தில் நெருங்கிய மீன்கள் உதிரும்படி போர் செய்து என்க.

     (வி-ம்.) பாய்-பரந்த; இயங்குகின்ற எனினுமாம். பாய்திரை அன்மொழித்தொகை. கடல் என்க. ஞாலம்-உலகம். ஆகுபெயர். உயிர் என்க. முடிவு-ஊழி முடிவு. முடங்குளை: அன்மொழித் தொகை. சிங்கம் என்க. பஃறோள் அவுணன் என்றது சிங்கமுகாசுரனை. உடு-விண்மீன்.

4-11: ஞாட்பினுள்.................................மாவின்

     (இ-ள்) ஞாட்பினுள் மறைந்து-அவ்வசுரன் ஞெரேலென அப் போர்க் களத்தினின்றும் மறைந்து போய்; நடுவுறு வரத்தால்-செம்மை மிக்க வரம் பெற்றுடைமையால்; வடவைநெடு நாக்கின் கிளைகள் விரிந்தாற்போல்; செந்துகிர் படரும் திரைக்கடல் புக்கு-சிவந்த பவளக் கொடிகள் படருதற்குக் காரணமான அலைகளையுடைய கடலின் கண்ணே புகுந்து; அகல் திரைப்பரப்பில்-அகன்ற அலைகளையுடைய அக்கடற் பரப்பில்; கிடந்து எரிவடவையின் தளிர்முகம் ஈன்று- கிடந்து எரியா நின்ற வடவைத்தீயின் கொழுந்து போலத் தன்னிடத்திலே தளிர்விட்டு; திரை எறிமலைகளின் கவடுபல போக்கி-அக்கடலின் அலைகளால் மோதப்படுகின்ற மலைகளைப் போலக் கிளைகள் பலவற்றையும் வளரச் செய்து; கல்செறி பாசியில் சினைக்குழை பொதுளி-அம் மலைகளிடத்தே செறிந்த பாசிகளைப் போன்று அக் கிளைகள் தோறும் தழைகள் நிரம்பப் பெற்று; சடை அசைந்து-வேர்கள் மேலே அசையப் பெற்று; கீழ் இணர் அலையாது நின்ற-கீழே பூங்கொத்துக்கள் அசையாமல் தலைகீழாய் நின்ற; மேல்பகை மாவின்-முற்பகையுடைய சூர்மாவினது என்க.

     (வி-ம்.) ஞாட்பு-போர்க்களம்; மறைந்து என்பது தன் மாயத்தாலே ஒளிந்து என்பதுபட நின்றது. நடுவறுவரம் என்றும் பாடம். இதற்கு, இடையில் அரசுரிமை அறுதற்குக் காரணமான வரம் உண்மையால் என்று பொருள் கொள்க. முகம்: ஏழனுருபு. கவடு-கோடு; மேற்பகை-முற்பிறப்பிற் கொண்ட பகை. வேர் மேலும் பூங்கொத்துக்கள் கீழுமாய் நின்றமா என்க.

12-15: ஓருடல்...............................வேலோய்

     (இ-ள்) ஓருடல் இரண்டு கூறுபட விடுத்த-ஓருடம்பு இரண்டு கூறுபட்டுப் பிளக்கும்படி விடுக்கப்பட்ட; அழியா பேர் அளி உமை கண் நின்று தன் பெயர் புணர்த்தி-ஒரு காலத்தும் அழித லில்லாத பேரருளையுடைய உமையம்மையார் நின் எதிர் நின்று சக்தி என்னும் தன் பெயரைச் சூட்டி; கற்பினொடு கொடுத்த-அதற்குரிய மந்திரத்தைக் கற்பித்தலோடு வழங்கப்பட்ட; அமையாவென்றி அரத்த நெடுவேலோய்-ஒழியாத வெற்றியினையுடைய நீண்ட சிவந்த வேற்படையினை யுடையோய் என்க.

     (வி-ம்.) ஓருடல் இரண்டு கூறுபட என்பழிச் செய்யுளின்பம் உணர்க அளி-அருள்; கண்ணின்று-கண்முன் நின்று: தன்பெயர்-சக்தி என்னும் தனது பெயர் என்க. கற்பு-கற்பித்தல். அப் படைக்குரிய மந்திரத்தைக் கற்பித்தலோடு என்க. அமையா- ஒழியா. அரத்த-சிவந்த.

16 - 22: கீழ்...........................அலைப்ப

     (இ-ள்) கீழ் மேல் நின்ற அ கொடுந்தொழில் கொக்கின்-கீழ் மேலாக நின்ற அந்தத்தீதொழிலையுடைய மாமரத்தினது இரண்டு கூறுஆய ஒரு பங்கு எழுந்து- இரு கூறாகியவற்றுள் ஒரு கூறு எழுந்து; பெருவரத்து மாயா ஒருமயிலாகி-பெரிய வரம் உண்மையால் அழியாத ஒரு மயிலுருவாகி; புடவி வைத்து ஆற்றிய பல் தலை பாந்தள்-நில வுலகத்தைத் தன் தலையில் வைத்துத் தாங்கிய பலவாகிய தலைகளையுடைய பாம்பாகிய ஆதிசேடனுடைய; மண்சிறுக விரித்த மணிபடம் தூக்கி-நில வுலகம் சிறுமை எய்தும்படி விரிக்கப்பட்ட மணிகளையுடைய படத்தை அலகாற் கொத்தித் தூக்கி; விழுங்கிய பல் கதிர் வாய்தொறும் உமிழ்ந்தென-விழுங்குதற்பொருட்டுப் பலவாகிய ஞாயிற்று மண்டிலங்களை எல்லா வாய்களாலும் உமிழ்ந்தாற் போல; மணிநிரை சிந்தி மண்புக அலைப்ப- மணிவரிசையை மண்ணில் புகுமாறு சிதறி வருந்துதலாலே என்க.

     (வி-ம்.) கொடுந் தொழில்-கொலைத் தொழில். கொக்கு-மாமரம். ஒரு பங்கு-ஒரு கூறு. மாயா ஒரு மயில் என ஒட்டுக. பெருவரம் மாயாமைக்குக் குறிப்பேதுவாய் நின்றது. புடவி-நிலவுலகம். ஆற்றிய-சுமந்த. பஃறலைப் பாந்தள்-ஆதிசேடங் ஆயிரந்தலைகள் உண்மையின் அங்ஙனம் கூறினார். மண்சிறுக விரித்த மணிப்படம்-மண்ணுலகம் தனக்குள் அடங்கும்படி அகலிதாக விரித்த மணிகளையுடைய படம் என்க. படத்தைக் கொத்தித் தூக்கி என்க. விழுங்கிய:செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். பண்டு விழுங்கிய பல் கதிர்களை என்பாருமுளர். கதிர்களை விழுங்குதல் ஆதிசேடன் அன்மையின் அது பொருந்தாமை அறிக. அம்மயில் படத்திற் கொத்தி விழுங்குதற் பொருட்டு அலைக்குங்கால் அப்பாம்பு தன் ஆயிரம் வாய்களினின்றும் உமிழும் மணிகளுக்கு ஞாயிற்று மண்டிலங்கள் உவமை என்க.

23 - 5: கார்..........................பொலிந்தோய்

     (இ-ள்) கார் விரித்து ஓங்கிய மலைத்தலை கதிரென-முகில்பரவப்பட்டு உயர்ந்துள்ள மலையினது உச்சியின்கண் தோன்றும் ஞாயிற்று மண்டிலம் போலே; ஓ அற போகிய சிறை விரிமுதுகில்-ஒழிவின்றி நீண்ட சிறகுகள் இருபாலும் விரித்தற்குக் காரணமன அம்மயிலின் முதுகின்மேல் எழுந்தருளி; புவனம் காண புகழொடு பொலிந்தோய்-உலகத்தார் காணும்படி வெற்றிப் புகழோடே விளங்கியோய்! என்க.

     (வி-ம்.) கார்விரித்து-கார்விரிக்கப்பட்டு என்க. கார்விரித்தோங்கிய மலை, இருபாலும் சிறகுகளை விரித்து உயர்ந்து நின்ற மயிலுக்கு உவமை. கதிர்-ஞாயிற்று மண்டிலம். இது முருகப்பெருமானுக்குவமை. ஓவற-ஒழிதலின்றி. சிறை-சிறகு. அம்மயிலின் முதுகில் என்க. புகழ்-வெற்றிப்புகழ். முருகப்பெருமானுக்கு ஞாயிற்று மண்டிலத்தை உவமை கூறுதலை, “உலகம் உவப்ப வலனேர்பு திருதரு, பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு, ஓவற இமைக்குஞ் சேண்விளங்கவிரொளி” எனவரும் திருமுருகாற்றுப் படையினும் காண்க: (திருமுரு. 1.3)

26 - 31: போழ்படக்...............................அமைத்தோய்

     (இ-ள்) போழ்படக்கிடந்த ஒருபங்கு எழுந்து-பிளவுபடுதலாலே ஆங்கு எஞ்சிக்கிடந்த மற்றொரு கூறு எழுந்து; மின்னல் மாண்ட கவிர் அலர் பூத்த சென்னி-மின்னுதலாலே மாட்சிமைப்பட்ட முருக்கம் பூப்போன்று பொலிவுபெற்ற சூட்டினையுடைய; கொடும்பகை வாரணம் ஆகி-கொடிய பகைப்பண்பினையுடைய கோழிச் சேவலாகி; தேவர்மெய் பனிப்பு உற வான்மிடை உடுத்திறள் பொரியில் கொறிப்ப-தேவர்கள் உடல் நடுங்கும்படி வானத்தின்கண் நெருங்கியுள்ள மீண் கூட்டங்களைப் பொரிகளைக் கொறிக்குமாறு போலத் தன் அலகாற் கொத்திக் கொறியாநிற்ப; புரிந்த பொருள்நாடி-அச்சேவற் கோழி விரும்பிய செயலை ஆராய்ந்துணர்ந்து அதனால் உலகிற்குத் துன்பமுண்டாகாதபடி; தாமரை பழித்த கை மருங்கு அமைந்தோய்-செந்தாமரை மலரைப் பழித்தற்குக் காரணமான நின்னுடைய திருக்கையின் பக்கத்தே அச்சேவலைப் பற்றிக்கொடியாக அமைத்துக் கொண்டோய்! என்க.

     (வி-ம்.) போழ்-பிளவு. மின்னல்-மின்னுதல், ஒளிர்தல். மாண்ட-மாட்சிமைப்பட்ட. கவிர்-முள்முருக்கு. சேவலின் சூட்டிற்கு முள் முருக்கமலர் உவமை. கவிரலர்பூத்த- கவிரலர்போன்று பூத்த என்க. கொடும்பகை வாரணம் எனமாறுக. இக் கோழிச்சேவல் உலகினை அழித்தொழிக்கும் என்று கருதித் தேவர்கள் மெய் நடுங்கினர் என்க. பனிப்பு-நடுக்கம். பொரி-நெல் முதலியவற்றின் பொரி. கொறித்தல்-தின்னுதற் றொழிலின் விகற்பம். புரிந்த பொருள்-அக் கோழி விரும்பியகாரியம். அஃதாவது இவ்வுலகினை அழிப்பல் என்பது. தாமரை-ஈண்டுச் செந்தாமரை. கொடியாக அமைந்தோய் என்க.

32 - 4: ஒருமையுள்..................................மதியோய்

     (இ-ள்) நாரதன் ஒருமையுள் ஒருங்கி-நாரதமுனிவன் தன் மனத்தைப் புலன்களில் செல்லவிடாமல் ஒருவழிப்படுத்தி இருந்து, இருகை நெய் வார்த்து ஓம்பிய-தன் இரண்டு கைகளாலும் நெய் வார்த்து வலர்த்த; செந்தீக் கொடுத்த-சிவந்த வேள்வித்தீயினின்றும் தோற்றுவித்து வழங்கிய; திருகுபுரி கோட்டு தகர் வரும் மதியோய்-திருகுதலையுடைய முறுக்கோடு கூடின கொம்புகளையுடைய ஆட்டுக்கிடாயின்மேல் எழுந்தருளி வருகின்ற புலவனே! என்க.

     (வி-ம்.) ஒருமையுள்-ஒருவழியில் ஒருங்கல்-ஒருவழிப் படுத்தல். ஒருமையுள் இருவகை என்புழிச்செய்யுளின்பமுணர்க. ஓம்பிய-வளர்த்த. செந்தியினின்றும் தோற்றுவித்துக் கொடுத்த என்க. திருகுபுரிகோடு-திருகுதலையுடைய முறுக்குடைய கோடு என்க. தகர்-ஆட்டுக்கிடாய். தகரிவரும் என்றும்பாடம். இதற்குத் தகரில் ஏறிச் செலுத்துகின்ற என்க. மதியோய் என்றது புலவன் என்பதுபட என்றது. “மாலை மார்ப நூலறி புலவ” (திருமுருகு 291) எனப் பிறரும் ஓதுதல் காண்க. ஈண்டு முருகப் பெருமானுடைய மயிலும் சேவலும் தகரும் ஆகிய இவற்றைப்பற்றி,

“ஆரா வுடம்பினீ அமர்ந்து விளையாடிய
போரால் வறுங்கைக்குப் புரந்தர னுடைய
அல்லலில் அனலன் தன்மெய்யிற் பிரித்துச்
செல்வ வாரணங் கொடுத்தோன் வானத்து
வளங்கெழு செல்வன்றன் மெய்யிற் பிரித்துத்
திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன்
திருந்துகோன் ஞமன்றன் மெய்யிற் பிரிவித்
திருங்கண் வெள்யாட் டெழின் மறிகொடுத்தோன்
ஆஅங், கவரும் பிறரும் அமர்ந்துபடை யளித்த
மறியு மஞ்ஞையும் வாரணச் சேவலும்
பொறிவரச் சாபமு மரனும் வாளும்
செறியிலை யீட்டியும் குடாரியும் கணிச்சியும்
தறுகதிர்க் கனலியு மாலையு மணியும்
வேறுவே றுருவினிவ் வாறிரு கைக்கொண்டு
மறுவில் துறக்கத் தமரர்செல்வன்றன்
பொறிவரிக் கொட்டையோடு புகழ்வாரம் பிகந்தோய்”

(பரிபா. 5 செவ்-55-70)

என வரலாறு வேறாகவும் கூறப்பட்டுளது.

35 - 6: முலை.....................புணர்ந்தோய்

     (இ-ள்) முரண் இரண்டு குவடு என முலை மரீஇ-மாறுபாட்டினையுடைய இரண்டு மலைகள் என்று சொல்லும்படி இரண்டு முலைகளையும் பொருந்தி; குழல்காடு சுமந்த-கூந்தலாகிய காட்டினையும் சுமந்த; யானைமகள் புணர்ந்தோய்- தெய்வயானையைச் சேர்ந்தோய்! என்க.

     (வி-ம்.) குழற்காடு சுமந்த யானைமகளின் முலை மரீஇப் புணர்ந்தோய் எனக் கொண்டு கூட்டினுமாம். முரண் மாறுபாடு. குவடு-மலை. மரீஇ-மருவி. குழற்காடு: பண்புத்தொகை. குழல்-கூந்தல். யானை மகள்-தெய்வயானை.

37 - 8: செங்கண்................................மலையோய்

     (இ-ள்) செங்கண் குறவர் கருங்காட்டு வளர்த்த-சிவந்த கண்களையுடைய குன்றக் குறவர் கரிய காட்டின்கண் பேணி வளர்த்த; வள்ளி பைங்கொடி படர்ந்த புயமலையோய்-வள்ளியாகிய பசிய பூங்கொடியானது படரப்பெற்ற திருத்தோள்களாகிய மலையினையுடையோய்! என்க.

     (வி-ம்.) செங்கண் கருங்காடு என்புழிச் செய்யுளின்பம் உணர்க. வள்ளிப்பைங்கொடி என மாறுக. கொடி படர்ந்த என்பதற்கேற்பப் புயமலை என்றார். மலையில் கொடி படர்தல் இயல்பாதல் உணர்க.

39 - 42: இமயம்.................................வைத்தோய்

     (இ-ள்) இமயம் சுனைபூத்த மாண் தொட்டில்-இமயமலையின் கண்ணதாகிய சுனையின்கண் மலர்ந்த மாண்புடைய தாமரை மலராகிய தொட்டிலின்கண்; அறிவில்தங்கி-மெய்யறிவினோடு தங்குதல் செய்து, அறுதாய் முலை உண்டு-கார்த்திகை மகளிராகிய தாயர் அறுவருடைய முலைப்பாலை உண்டருளி; உழல்மதில் சுட்ட தழல் நகை பெருமான்- விசும்பின்கண் திரியா நின்ற முப்புரத்தைச் சுட்டெரித்த நெருப்பினைட்யுடைய நகைப்பினையுடைய சிவபெருமான்; வணங்கி நின்று ஏத்த குருமொழி வைத்தோய்- நின்னைத் தொழுது நின்று வாழ்த்தாநிற்ப. அப் பெருமானுக்கு ஆசிரியனாய் மறைமொழி செவியறிவுறுத்தோய்! என்க.

     (வி-ம்.) இமயம் சுனைபூத்த என மாறுக. பூத்தமலராகிய தொட்டில் என்க. முற்றறிவினோடு பிறத்தலின் அறிவில் தங்கி என்றார். அறுதாய்-கார்த்திகை மகளிராகிய தாய்மார் அறுவர்பாலும் என்க. உழல் மதில்-வானத்தே திரிகின்ற முப்புரம். தழல் நகை: பண்புத் தொகையுமாம். பெருமான்-சிவபெருமான். குருமொழி- ஆசிரியர் செவியறிவுறூஉ. இப்பகுதியோடு,

“வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள்
கடவுள் ஒருமீன் சாலினி யொழிய
அறுவர் மற்றையோரு மந்நிலை அயின்றனர்
மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே
நிவந்தோங் கிமயத்து நீலப் பைஞ்சுனைப்
பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்
பெரும்பெயர் முருகநிற் பயந்த ஞான்றே”

(பரிபாடல். செவ்வேள். 43 : 50)

எனவரும் பரிபாடற் பகுதியையும் ஒப்பு நோக்குக. முருகப்பெருமான் சிவபெருமானுக்குக் குருமொழி வைத்ததனை,

“தேமொழி யத்தன் பெறவோந் தனக்கன்று சேணுலகத்
தேமொழி யத்தஞ் சினங்காட் டவுணரைச் சேமகரத்
தேமொழி யத்தம் புயமலர் சூடிகை சிந்தவென்ற
தேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததென்றே”

என்றற்றொடக்கத் தனவற்றா னினிதுணர்க. இனி, சிவபெருமான் மதில் சுட்டதனை,

“ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ
வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து
நாகா நாணா மலைவில் லாக
மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய
மாதிரம் அழலவெய் தமரர் வேள்விப்
பாக முண்டபைங்கண் பார்ப்பான்”

(பரி. 5. 22 : 27)

எனவரும் பரிபாடலாலும் உணர்க.

43 - 6 : ஓம்......................................விடுத்தோய்

     (இ-ள்) பிரமம் பேசிய நால் மறை விதியை-தானே பிரமம் என்று செருக்குற்று வாய் மதம் பேசிய இருக்கு முதலிய நான்கு மறைகளையுமுடைய படைப்புக் கடவுளாகிய நான்முகனை: ஓம் எனும் எழுத்தில் நடுங்கு சிறை வைத்து-ஓம் என்னும் எழுத்திற்குப் பொரு வினவுமாற்றால் நடுங்குதற்குக் காரனமான சிறைக்கோட்டத்தில் இட்டு; படைப்பு முதல் மாய வான் முதல் கூடி தாதையும் இரப்ப-படைத்தல் முதலிய தொழில்கள் நடவாமையாலே அதுகண்ட தேவர்கள் முதலியவரோடு கூடி வந்து நின்தந்தையாகிய சிவபெருமானும் நின்னை இரந்து வேண்டிக் கோடலால்; தளையது விடுத்தோய்-அந் நான்முகனை அவர்கள் வேண்டுகோட்கிணங்கிச் சிறை வீடு செய்தருளிய பெருமானே! என்க.

     (வி-ம்.) பிரமன் பேசிய-தானே பிரமம் என்று வாய் மதம் பேசிய என்க. ஓம் எனும் எழுத்திற்குப் பொருள் வினவ அவன் அதற்கு விடை கூறமாட்டாமையின் சிறையில் வைக்கப்பட்டான் என்பது கருத்து. விதி-பெயர்; படைப்புக்கடவுள் என்க. நான்மறை-இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்பன. நடுங்கு சிறை-நடுங்குவதற்கு காரணமான சிறை. படைப்பும், காத்தலும், அழித்தலும் ஆகிய முத்தொழிலும் மாய என்க. வான்: ஆகுபெயர்; தேவர்கள் முதலியோரோடு கூடிவந்து இரப்ப என்க. சிறைக்கோட்டத்தில் வைக்குங்கால் விலங்குபூட்டி வைத்தல் மரபாதலின் தளையது விடுத்தோய் என்றார். தளையது என்புழி அது பகுதிப் பொருள் விகுதி. விதியைச் சிரைவைத்துப் பின்னர் வானவரும் தாதையும் இரத்தலாலே விடுத்தோய் என இயைக்க படைப்பு முதல் மாய என்றது இரப்ப என்பதற்குக் குறிப்பேதுவாய் நின்றது,

47 - 9: கூடம்.........................விரித்தோய்

     (இ-ள்) கூடம் சுமந்த நெடுமுடிநேரி-அண்ட கடாகத்தைத் தாங்கி நின்ற நெடிய உச்சியினையுடைய நேரிமலையானது; விண் தடையாது-விண்ணிடத்து வழியைத் தடைசெய்யாமைப் பொருட்டு; மாண்புகப் புதைத்த-நிலத்திற் புகும்படி அழுத்திய; குறுமுனி தேற-அகத்திய முனிவன் மெய்ப் பொருளை அறிந்துணர்ந்து தெளியும்படி; நெடுமறை விரித்தோய்-நெடிய மறைப் பொருளை விரித்துச் செவியறிவுறுத்த பெருமானே! என்க:

     (வி-ம்.) கூடம்-அண்டகடாகம் இனி, கூடம் சுமந்த என்பதற்கு மன்றாகச் செய்யப்பட்ட தேவகோட்டங்களைத் தாங்கியுள்ள எனப் பொருள் கொள்ளினும் பொருந்தும். என்னை! “மாடஞ்செய்....................கூடஞ்செய் சாரல் கொடிச்சி யென்றோ நின்று கூறுவதே” எனவரும் திருக்கோவையார் 129 ஆம் செய்யுளுக்கு அதன் உரையாசிரியர், “கூடமென்றது மன்றாகச் செய்யப்பட்ட தேவகோட்டத்தை” என உரைவகுத்தலானும் உணர்க. நேரி- சோழநாட்டின் கண்ணதாகிய ஒரு மலை. தடையாது- தடைசெய்யாமல். நேரிமலை வானுற வளர்ந்து விண்ணில் வானவர் செல்லும் வழியைத் தடைசெய்து நின்றது ஆதலின் அகத்தியர் அதனை நிலத்தில் அழுத்தி வழியுண்டாக்கினர் என்பது கருத்து. இனி முருகப்பெருமான் குறுமுனிக்கு மறைமொழி செவியறிவுறுத்தியதனை,

“இன்னபல் வரமு நல்கென் றிரந்தனன் முனிவர் கோமான்
அன்னனணம் வரங்க ணல்கி யறுமுகக் கடவு ளன்னான்
தன்னைநற் றமிழின் பாடை தனக்குமுன் குரவ னாக்கிப்
பொன்னிவர் கோயி லுள்ளாற் போதந்து ஞானங் கூறும்”

(தணிகை. அகத்தியர், 148) எனவரும் செய்யுள் முதலியவற்றால் உணர்க. குறுமுனி-அகத்திய முனிவங் குறுமுனிதேற நெடுமறை விரித்தோய் என்புழிச் செய்யுளின்ப முணர்க.

50 - 51: ஆறு..............................பொலிந்தோய்

     (இ-ள்) ஆறுதிரு எழுத்தும் கூறும் நிலைகண்டு-நினக்குரிய ‘சரவணபவ’ என்னும் ஆறு திருவெழுத்துக்களையும் ஓதுதற்குரிய முறைமையினை யுணர்ந்து ஓதி; நின் தாள் புகழுநர்-நின்னுடைய திருவடிகளைப் புகழ்ந்து பாடுகின்ற நின் அன்பர்களுடைய; கண்ணுள் பொலிந்தோய்-அகக் கண்ணினூடே அருளுருக் கொண்டு பொலிவு பெற்றுத் திகழ்ந்தோய் என்க.

     (வி-ம்.) ஆறுதிருவெழுத்து-சரவணபவ என்பன; ‘குமராயநம’ என்பனவுமாம். ;முருகாய நம’ என்பனவுமாம். கூறும்நிலை-ஓதும் முறைமை. கண்டு-அறிந்து. புகழுநர்-புகழ்ந்து பாடுவோர். கண்-அகக்கண்

“அஞ்சு முகந்தோன்றில் ஆறுமுகந் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன்”

(-திருமுருகு. பின்சேர்க்கை வெண்பா 6)

எனவரும் வெண்பாவையும் ஈண்டு நினைக.

52 - 55: மணிக்................................ஆதலின்

     (இ-ள்) மணிக்கால் அறிஞர் பெருங்குடித்தோன்றி-மணிகளின் பிறப்பிடத்தை அறியும் மணிவணிகரது பெரிய குடியின்கண் மூங்கைப் பிள்ளையாய்ப் பிறந்து; இறையோன் பொருட்கு-இறையனார் அருளிச் செய்த அகப்பொருள் இலக்கணமாகிய பொருள் நூலுக்கு; பரணர் முதல் கேட்ப-பரணர் முதலிய சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மரும் கேளாநிற்ப; பெருந்தமிழ்-பெரிய தமிழில்; பாய்பார் அறிய-பரந்த உலகிலுள்ளோர் அறியும்படி; விரித்த அருந்தமிழ்ப் புலவனும் நீயே ஆதலின்-பொருள் விரித்துணர்த்திய உணர்தற்கரிய தமிழ்ப் புலமையுடையோனும் நீயே யாதலால் என்க.

     (வி-ம்.) மணிக்கால்-மணிகளின் பிறப்பிடம். இறையோன் பொருள்-இறையனார் அருளிச்செய்த களவியல் என்ற அகப்பொருணூல்; முருகப்பெருமான் இறையனார்களவியல் நூலுக்கு நல்லுரை உணர்த்தினார் என்பதனை,

     “அக்காலத்துப் பாண்டியநாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது, செல்லவே, பசிகடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி, வம்மின், யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என்தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் நுமக்கு அறிந்தவாறுபுக்கு, நாடு நாடாயின ஞான்று என்னை யுள்ளிவம்மின் என்றான். என அரசனை விடுத்து எல்லோரும் போயினபின்றைக், கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது, கழிந்தபின்னர், நாடு மலிய மழை பெய்தது, பெய்த பின்னர், அரசன், ‘இனி நாடு நாடாயிற்றாகலின், நூல்வல்லாரைக் கொணர்க’ என்று எல்லாப் பக்கமும் ஆட் போக்க, எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, “பொருளதிகாரம் வல்லாரை எங்குத் தலைப்பட்டிலேம்” என்று வந்தார்; வர அரசனும் புடைபடக் கவன்று, ‘என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே? பொருலதிகாரம் பெறேமேயெனின், ‘இவை பெற்றும் பெற்றிலேம்’ எனச் சொல்லா நிற்ப, மதுரை ஆலவாயின் அழல் நிறக்கடவுள் சிந்திப்பான்; ‘என்னை பாவம்! அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று; அதுதானும் ஞானத்திடையதாகலான், யாம் அதனைத் தீர்கற்பாலம்’ என்று, இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத்து எழுதிப் பீடத்தின் கீழிட்டான்.

     “இட்டபிற்றை ஞான்று, தேவர்குலமும் வழிபடுவான், தேவர் கோட்டத்தை எங்குந் துடைத்து, நீர் தெளித்துப் பூவிட்டுப் பீடத்தின் கீழ் என்றும் அலகிடாதான் அன்று தெய்வதத்துக் குறிப்பினான், ‘அலகிடுவென்’ என்று உள்ளங்குளிர அலகிட்டான்; இட்டாற்கு அவ்வலகினோடும் இதழ் போந்தன. போதரக், கொண்டு போந்து நோக்கினாற்கு வாய்ப்புடைத்தாயிற்றோர் பொருளதிகாரமாய்க் காட்டிற்று. காட்டப், பிராமணன் சிந்திப்பான்: “அரசன் பொருளதிகாரம் இன்மையிற் கவல்கின்றான் என்பது கேட்டுச் செல்லா நின்றது உணர்ந்து நம் பெருமான் அருளிச் செய்தானாகும்’ என்று தம் அகம் புகுதாதே, கோயிற் றலைக்கடைச் சென்று நின்று, கடைகாப்பாற்கு உணர்த்தக், கடைகாப்பார் அரசற்கு உணர்த்த, அரசன், ‘புகுதுக’ எனப் பிராமணனைக் கூவச், சென்று புக்குக் காட்ட ஏற்றுக் கொண்டு நோக்கிப் ‘பொருளதிகாரம்! இது நம் பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்தானாகற்பாலது’ என்று, அத்திசை நோக்கித் தொழுது கொண்டு நின்று, சங்கத்தாரைக் கூவுவித்து, ‘நம் பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச்செய்த பொருளதிகாரம், இதனைக் கொண்டுபோய்ப் பொருள் காண்மின்’ என அவர்கள் அதனைக் கொண்டு போந்து கன்மாப்பலகை ஏறியிருந்தது ஆராய்வுழி, எல்லோருந் தாந்தாம் உரைத்த உரையே நல்லதென்று சில நாளெல்லாஞ் சென்றன.

     “ செல்ல, ‘நாம் இங்ஙனம் எத்துணை உரைப்பினும் ஒருதலைப்படாது; நாம் அரசனுழைச் சென்று, நமக்கோர் காரணிகணைத் தரல் வேண்டும் என்று, கொண்டு போந்து, அவனாற் பொருளெனப் பட்டது பொருளாய், அன்றெனப்பட்டது அன்றாய் ஒழியக் காண்டும்’ என்று எல்லோரும் ஒருப்பட்டு, அரசனுழைச் சென்றார், அரசனும் எதிர் சென்று, ‘என்னை, நூற்றுக்குப் பொருள் தரல் வேண்டும்?’ என, ‘போமின், நுமக்கோர் காரணிகனை நான் எங்ஙனம் நாடுவேன்! நீயிர் நாற்பத்தொன்பதின்மார் ஆயிற்று, நுமக்கு நிகராவார் ஒருவர் இன்மையின் அன்றே’ என்று அரசன் சொல்லப், போந்து, கன்மாப் பலகை ஏறியிருந்து, ‘அரசனுன் இது சொல்லினான், யாம் காரணிகளைப் பெறுமாறு என்னைகொல்’ என்று சிந்திப்புழி, சூத்திரஞ் செய்தான் ஆலவாயில் அவிர்சடைக் கடவுளன்றே, அவனையே காரணிகளையுந் தரல் வேண்டும் எனச் சென்று வரங்கிடத்தும் என்று வரங்கிடப்ப இடையாமத்து, ‘இவ்வூர் உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பான், பைங்கண்ணன், புன்மயிரன், ஐயாட்டைப் பிராயத்தான், ஒரு மூங்கைப் பிள்ளையுளன்; அவனை அன்னனென்று இகழாது கொண்டு போந்து, ஆசனத்தின்மேல் இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருள் உரைத்தாற் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்கும் மெய்யாயின உரை கேட்டவிடத்து; மெய்யல்லா உரை கேட்டவிடத்து வாளா இருக்கும்; அவன் குமார தெய்வம், அங்கோர் சாபத்தினால் தோன்றினான்’ என முக்கால் இசைத்த குரை எல்லோர்க்கும் உடன்பாடாயிற்று; ஆக, எழுந்திருந்து தேவர்குலத்தை வலங்கொண்டு போந்து, உப்பூரி குடிகிழாருழைச் சங்கமெலாஞ்சென்று, இவ்வார்த்தையெல்லாஞ் சொல்லி, ‘ஐயனாவான் உருத்திரசன்மனைத் தரல் வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டுபோந்து, வெஇயாது, உடீஇ, வெண்பூச்சூட்டி, வெண்சாந்து அணிந்து, கன்மாப்பலகை ஏற்றிக் கீழிருந்து சூத்திரப் பொருள் உரைப்ப, எல்லாரும் முறையே பொருளுரைப்பக் கேட்டு வாளா இருந்து, மதுரை மருதனிள நாகனார் உரைத்தவிடத்து ஒரோவிடத்துக் கண்ணீர் வார்த்து, மெய்ம்மயிர் நிறுத்திப் பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்தவிடத்துப் பதந்தொறுங் கண்ணீர் வார்த்து, மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான் இருப்ப, ஆர்ப்பெடுத்து, ‘மெய்யுரை பெற்றாம் இந்நூற்கு! என்றார்.

     “அதனால், உப்பூரிகுடிக்கிழார் மகனாவான் உருத்திரசன்மனாவான் செய்தது இந்நூற்கு உரை என்பாரும் உளர்; அவர் செய்திலர், மெய்யுரை கேட்டர்ா என்க” எனவரும் இறையனார் களவியலுரை யானும் உணர்க, பரணர் முதலிய சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மாரும் என்க, உயர்தனிச் செம்மொழி என்பது பற்றிப் பெருந்தமிழ் என்றார் பாய வென்பதன் ஈறுகுறைந்து பாய் என நின்றது, பார்-உலகு: ஆகுபெயர், புலவனும் என்னும் உம்மை உயர்வு சிறப்பு,

56 - 7: வெட்சி...............................கெள்ளுதும்

     (இ-ள்) வெட்சி மலர் சூழ்ந்த-வெட்சி மலர் மாலை அணியப்பெற்ற; நின் இருகழல்கால்-உன்னுடைய வீரக்கழலணிந்த இரண்டு திருவடிகளையும்; குழந்தை அன்பினொடு-சிறு குழந்தை தந்தையின்பாற் செலுத்தும் அன்பையொத்த இயற்கை யன்பினொடு, சென்னிதலைக் கொள்ளுதும்-எந்தலையின் மேல் ஏற்றுக்கொள்வேம், அஃதெற்றுக்கெனின் என்க,

     (வி-ம்.) குழந்தையன்பு-இயற்கையன்பு சென்னிதலை- சென்னியின்மேல், தலை : ஏழனுருபு,

58-65: அறிவ..........................எனவே

     (இ-ள்) அறிவு நிலைகூடா சில்மொழி கொண்டு-மெய்யறிவு நிலைபெறாத எம்முடைய சிலவாகிய இப்புன்மொழிகளைத் திருச்செவியில் ஏற்றுக்கொண்டு, கடவுள்கூறா உலவா அருத்தியும்- இறைவனாகிய உன்னைப் புகழ்ந்தேத்தாமைக்குக் காரணமான அழியாத அவாவினையும்; சன்னப் பீழையும்-இப்பிறவிப் பிணியையும்; தள்ளாக்காமமும்-ஒழித்தற்கரிய காம நுகர்ச்சியினையும்; தன்படுதுயரமும்-தன்னாலுண்டாகிய துன்பங்களையும்; அடைவு கெட்டு இறத்தலும்-முறைதப்பி ஒழுகுதலையும்; தென்புலக் கோமகன் தீ தெறு தண்டமும்-கூற்றுவன் நெருப்புப் போன்று வருத்துகிற ஒறுத்தற் றுன்பங்களையும்; நரகொடு துறக்கத்து உழல்வரு பீழையும்-நரகத்தினும் துறக்கத்தினும் சென்று சென்று உழலுதலால் வருகின்ற துன்பங்களையும்; நீளாது இம்பரின் முடித்து-இன்னும் நீளவிடாமல் இப்பிறப்பிலேயே ஒழித்து; மீளாக் காட்சி இன்று தருதி என-பிறப்பின்கண் மீளாமைக்குக் காரணமான மெய்க்காட்சியினை இப்பொழுதே அளித்தருள்வாயாக! என்றே; என்க.

     (வி-ம்.) அறிவுநிலை கூடாத மொழி என்றது, மயங்கிக்கூறிய மொழி என்றவாறு. நீ பெருந் தமிழ் விரித்த அருந்தமிழ்ப் புலவனும் ஆதலின் எளியேமாகிய எம் புன்மொழியையும் எமொருட்டு ஏற்றுக்கோடல் இழுக்காகாமையின் ஏற்றுக் கொண்டருளுக என்று வேண்டியபடியாம். கடவுள்: முன்னிலைப்புறமொழி, கடவுளாகிய உன்னை என்க. கடவுள் கூறுதலாவது கடவுளின் புகழைப் பாடிப் பரவுதல்; அவாமிக்குடையோர் அஃதுந்திய வழியே இயங்குதலன்றி இறைவனை நினைதலும் வாழ்த்தி வணங்கலும் அரிதாகலின் கடவுட் கூறாமைக்கு அருத்தியை ஏதுவாக்கினார். உலவா-அழியாத. எல்லாத் துன்பங்களுக்கும் முதலாகலின் அருத்தியை முற்படக் கூறினார். அருத்தி-அவா.

“அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்”               (திருக். 397)

எனவும்,

“அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃதுண்டேற்
 றவாஅது மேன்மேல் வரும்”                (திருக். 398)

எனவும் வரும் அருமைத் திருக்குறளையும் நோக்குக. தள்ளாக் காமம்-விலக்குதற்கியலாத காமம். மன முதலிய கருவிகள் உயிர்களின் வினைக்கீடாக அவற்றைத் தம்வயப் படுத்திக்கொண்டு முதல்வனது ஆணைவழி இயங்குதலால் காமம் உயிர் முயற்சியால் தள்ளுதற்கியலாததாயிற் றென்க. தன்படுதுயரம்-தன்னால் உண்டாகுந் துன்பங்கள். இவற்றை ஆதித்யாமிகம் என்பர் வடநூலார். அடைவு-முறைமை. தென்புலக் கோமகன்-கூற்றுவங் துறக்கமும் பொன்விலங்கு போறலின் துறக்கத்து உழல்வரு பீழை என்றார். இம்பர்-இப்பிறப்பு. மீளாக்காட்சி-பிறப்பின்கண் மீளாமைக்குக் காரணமான் மெய்க்காட்சி என்க.

“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
 மற்றீண்டு வாரா நெறி”             (திருக். 356)

எனவும்,

“ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாய்ப்
 பேர்த்துள்ள வேண்டா பிறப்பு”           (திருக். 357)

எனவும் வரும் திருக்குறளையும் நினைக.

     வேலோய்! பொலிந்தோய்! அமைந்தோய்! மதியோய்! புணர்ந்தோய்! மலையோய்! வைத்தோய்! விடுத்தோய்! விரித்தோய்! பொலிந்தோய்! புலவனும் நீயே யாதலின் நின்கால் சென்னிதலைக் கொள்ளுதும்; அஃதெற்றுக்கெனின் எம்மொழிகொண்டு எம் அருத்தியும் பீழையும் காமமும் துயரமும் இறத்தலும் தண்டமும் பீழையும் இம்பரின் முடித்து இன்று மீளாக்காட்சி தருதி எனவே; என்று வினை முடிவு செய்க.

கடவுள் வாழ்த்து முற்றிற்று.


 

மேல்

மூலம்