முகப்பு

தொடக்கம்


பதிப்புரை

'கல்லாடம்' என்பது தமிழ்-இலக்கியத்தில் உள்ள சிறந்த நூல்களுள் ஒன்று. பாயிரமும் நூலும், பதினைந்து முதல் அறுபத்தாறு அடிகள் வரையில் உள்ள நூற்றிரண்டு ஆசிரியப்பாக்களைக் கொண்ட மூவாயிரத்து நானூற்று எட்டு அடிகளில், அடங்கியுள்ளன. பாயிரத்துள், யானைமுகன் வணக்கம் ஒன்றும், முருகன் வணக்கம் ஒன்றுமாக இரண்டு பாக்களும், நூலுள், தனித் தனி ஒவ்வொன்றும் ஒவ்வொரு அகப்பொருள்-துறைக்குப் பொருந்திய நூறு பாக்களும் இருக்கின்றன. செய்யுட்கள் சொல்லால் சங்கச் செய்யுட்களைச் சார்ந்தும், பொருளால் இடைக்கால இலக்கியத்துக்கு இயைந்தும், இருக்கின்றன; சொல், செறிவுடையன; பொருள், புராணக் கலப்புடையது. திருவாதவூரடிகள் அருளிய திருக்கோவையாரின் நலத்தை உலகம் அறியச் செய்வதற்காக, அதிலிருந்து நூறு துறைகளைத் தேர்ந்து, ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வோர் ஆசிரியப்பா இயற்றி, தமிழறியும் பெருமானாகிய ஆலவாய் அண்ணலின் தெய்வத் திருமுன் இவ்வாசிரியர் ஓதியபோது, பாட்டுக்கு உருகும் பனிமலைவல்லி பங்கன், ஒவ்வொரு செய்யுள் முடியும்போதும், தன் திருமுடியைத் துளக்கி மகிழ்ந்தார் என்று ஒரு பழம் பேச்சு, இந் நூலின் சிறப்பைத் தெரிவிக்கும் நோக்கத்தோடு, நம் நாட்டில் வழங்கி வருகிறது.

'கல்லாடர்' என்ற ஆசிரியர் இயற்றியதால் இந் நூல் 'கல்லாடம்' எனப் பெயர் பெற்றது. தமிழ் இலக்கியத்துள், 'கல்லாடர்' என்ற பெயரால், பல ஆசிரியர்கள் விளங்கியிருக்கின்றார்கள். சங்க இலக்கியத்துள், பதினான்கு செய்யுட்கள் (அகம்-7, புறம்-5, குறுந்தொகை-2) கல்லாடர் என்ற பெயரில் காணப்பெறுகின்றன; பதினோராந் திருமுறையுள், 'திருக் கண்ணப்பதேவர் திருமறம்' என்பது கல்லாடதேவ நாயனார் அருளியது எனக் காணப்படுகிறது; 'திருவள்ளுவமாலையில்' ஒரு வெண்பா கல்லாடரை ஆசிரியராகக் கொண்டுள்ளது; தொல்காப்பியத்துக்கு உரைகண்டவருள் 'கல்லாடர்' என ஒரு பெயர் வழங்கப் பெறுகிறது; இந் நூலாசிரியரும் ஒருவர். இங்குப் பேசப் பெற்ற 'கல்லாடர்' என்ற பெயர் ஒரு புலவரையே குறிக்கக் கூடியதாக இருக்க முடியாதென்பது மேற்பார்வையாகப் பார்ப்போர்க்கும் விளங்கக் கூடியதே; குறைந்தது இரண்டு 'கல்லாடரா'வது இருந்திருக்க வேண்டும். சங்க நூலில் காணப் பெறுபவரும், ஏனையவற்றின் ஆசிரியராக வருபவரும், ஒருவராக இருக்க முடியுமா? மேலும் சங்கநூலில் காணப்பெறுபவர்தாமும் ஒருவர் என்றே சொல்லிவிடக் கூடுமா? அவ்வாறே ஏனைய நூல்களின் ஆசிரியரும் ஒருவரே என்று எவ்வாறு சொல்லுவது? இவையெல்லாம், ஆழ்ந்து நுணுகி ஆராய்ந்தே முடிவு செய்ய வேண்டுவனவாகும்.

கல்லாடர் என்ற பெயர் ஒருவருடைய இயற்பெயர் என்று சொல்லுவதா, பிறந்த ஊரைக் கொண்டோ குடியைக்கொண்டோ வந்த சிறப்புப் பெயர் எனக் கொள்ளுவதா, என்பதும் கருத வேண்டியதே: 'கல்லாடம்' என்ற ஒரு திருப்பதி திருவாசகத்தில் போற்றப் பெறுகிறது. இதைப் பாண்டிய நாட்டுப் பழம்பதிகளுள் ஒன்று எனவும், மேற்குக் கடற்கரையில் கொல்லத்துக்கு அருகில் இருந்த ஓர் ஊர் எனவும், வேறு வேறு கூறுவர்; வீரசைவ ஞானாசிரியர்களுடைய மரபு ஒன்று 'ஹல்லட' என வழங்கப் பெறுவதாகவும், ஒருகால் 'கல்லாடர்' என்ற பெயரோடு ஒற்றுமையுடையதாக இருக்கக் கூடும் என்றும் சிலர் கருதுகின்றனர். தெய்வத் திருப்பதிகளின் பெயரை மக்களுக்கு இயற்பெயராகச் சூட்டும் மரபை ஒட்டி இது அக்காலத்து ஒரு பகுதியில் மக்களுக்கு இடப்பெற்று வந்த பெயராக இருக்கக் கூடாதோ எனக் கேட்போரும் உளர். 'மம்மட', 'பல்லட', என்ற சொற்கள் போல், இச் சொல்லும் வேற்று நாடுகளில் 'ஹல்லட' என வழங்கி, நம் நாட்டில் 'கல்லாடம்' எனத் திரிந்திருக்கலாகுமோ என ஐயுற்று, 'பல்லடன்' என்ற காஷ்மீர நாட்டுப் புலவனையும் 'பல்லடம்' என்ற தமிழ்நாட்டு ஊர் ஒன்றையும் சேர்த்து எண்ணிப் பார்ப்பார்கள்.

இந் நூலாசிரியரின் காலத்தைப் பற்றி மூன்று வகையாகக் கருதுகின்றனர். ஒரு சாரர் இவரை ஆறாம் நூற்றாண்டினர் என்பர்; ஒரு சாரர் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பர்; மற்றொரு சாரர், இந் நூல், பதினொன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எழுந்தது எனக் கூறுவர். இம் மூன்று கொள்கைகளுள் பதினொன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இந் நூல் எழுந்தது என்பதைக் கொண்டு இவ்வாசிரியர் பதினொன்றாம் நூற்றாண்டினர் எனக் கொள்ளுவதே பொருத்தமாகத் தெரிகிறது.

இந்த நூலில், இவ் ஆசிரியரின் அடிப்படையான நோக்கம், மக்கள் உள்ளம் வளம் பெற்று, சுருள் நீங்கி விரிவடைந்து, தெய்வ நலத்தில் ஈடுபட்டு, மேம்பாடடைய வேண்டும் என்பதே எனத் தெரிகிறது: மதுரையையும் திருப்பரங்குன்றத்தையும் புனைந்து உரைக்கும் முறையில், சிவபெருமானுடைய பேரருட்பெருக்கையும், முருகனுடைய பெருமையையும், கனிவுடனும் இனிமையாகவும் விளக்கிச் சொல்வதை இந் நூல் முழுவதும் காணலாம். அளவால் சிறு நூலாக இருப்பினும், இதில், இராமாயணம், பாரதம், புராணக் கதைகள், திருவிளையாடற் கதைகள், திருத்தொண்டர் வரலாற்றுள் சில, இசைக் கலை,


முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்