| காப்பு நேரிசை 
 வெண்பா 
 
 | தங்கச் 
 சிலையேடுந் தந்தவெழுத் தாணியுங்கொள் துங்கக் 
 கரிமுகத்துத் தூயவனென் - சங்கையொழித்
 தேடெழுத் 
 தாணி யெடுத்தறியேன் இந்நூலைப்
 பாடஅளிப் 
 பான்நற் பதம்.                               1
 |  இதன் பொருள்: 
 தங்கச் சிலையேடும் - மேருமலையாகிய ஏட்டையும், தந்த எழுத்தாணியும் - 
 தந்தம் ஆகிய எழுத்தாணியையும், கொள் - கொண்ட, துங்கம் - பெருமைபொருந்திய, கரிமுகத்துத் 
 தூயவன் - யானை முகத்தையுடைய தூயோனாகிய மூத்த பிள்ளையார், என் சங்கை - எனது ஐயம் 
 (திரிபு முதலியவற்றை) ஒழித்து - முழுவதும் போக்கி, ஏடு எழுத்தாணி - யேட்டினையும், 
 எழுத்தாணியையும், எடுத்தறியேன் - எடுத்தறியேனாகிய யான், இந்நூலைப் பாட - இந் நூலை 
 நன்கு பாடும்பொருட்டு, நல் பதம் - தன்னுடைய நல்ல திருவடிகளின் துணையை, அளிப்பான் 
 - தருவான். மூத்த பிள்ளையார் தம் முகத்தில் உள்ள தந்தங்களில் 
 ஒன்றனை ஒடித்து, அதனை எழுத்தாணியாகக் கொண்டு, மேருமலையாகிய ஏட்டில், பாரதத்தை 
 வியாசர் கூறிவருங்கால் எழுதிக்கொண்டே வந்தனர் என்பது கதை. சங்கை - ஐயம். அஃது இனம்பற்றி திரிபு மயக்கத்தையும் 
 உணர்த்தும். பிறவிக் கடலினின்றும் எடுத்து வீடு பேற்றைத் தருவதாகிய நன்மையைச் செய்யும் 
 அடிகளாதலால் நற்பதம் என்றார். தூயவன் நற்பதம் அளிப்பான் என்க.  கொள் என்னும் 
 பெயரெச்சப் பகுதி தூயவன் என்னும் பெயரைக் கொண்டது. பதம் - செய்யுட்களில் புலவர் தம் கருத்துக்களை வைத்துப் 
 பாடுங்கால், கருத்தைத் தெளிவாகத் தோற்றி திட்பம் நுட்பம் இசையின்பம் தோன்ற 
 (பிற சொற்களால் அமைத்துக் கூற முடியாததாக) பொருட்செறிவு கொண்ட சொற்களாலே புலனாக 
 அமைத்துப் பாடும் பக்குவம் எனலுமாம். கரிமுகத்தை யுடையவனே பிரணவ வடிவமாய்த் திகழ்கின்ற 
 தூயனாய் விளங்குபவன் ஆதலின், அவனைப் பாடும் என்னையும் தூய்மைப் படுத்துவான் என்றபடி. கொடுப்பான் முதலியன கூறாது, அளிப்பான் என்றதனால் 
 பிள்ளையாரது பேரருளுடைமையும் நூல் ஆக்கியோரது எளிமையும் விளங்கக் கிடக்கும். ஏடு எழுத்தாணி: இந்தச் சொற்களால் பொத்தகம் என்னும் 
 சொல், புத்தகம் எனத் திரிந்து வடமொழியிற் சென்று புஸ்தகம் எனத் திரிந்து வழங்குகின்றது 
 என்பது புலனாகும். பொத்து அகம் - பொத்தலை (துளை யிடுதலை)த் தன் அகத்தே கொண்டது. 
 பனை ஏடுகளைத் திருகு ஊசியால் துளையிட்டுக் கயிறு சார்த்திக் கோத்துச் சட்டம் அமைத்துக் 
 கட்டப் படுதலின் ஏட்டுச் சுவடி, ‘பொத்தகம்’ எனப் பெயர்பெற்றது. “நிறை நூற் பொத்தகம் 
 நெடுமணை யேற்றி” - பெருங்கதை, உஞ்சைக், 34 : 26) பொத்தகம் என்ற வடிவமே மிகப் பழங்காலத்ததாகிய அகத்தியச் 
 சூத்திரத்திலும் வந்துள்ளமை நன்னூல் 261 ம் சூத்திரத்தின் மேற்கோளில் காண்க. கச்சிக் கலம்பகம் என்னும் நூலின் பெருமை பாராட்டுவோர் 
 காப்புச் செய்யுளே தங்கமாய் இருக்கிறதே என்பர்.  தங்கச் சிலை ஏடும் என்று தொடங்குவது 
 காண்க. |