|   நேரிசை 
 வெண்பா 
 
 | ஐயம் 
 உறுமனமே! அண்ணறிருக் கச்சியரன் செய்ய மலரடியைச் 
 சிந்தித்தி - நையாமே
 இன்மையறி 
 யாவீகை எச்சமறி யாவாய்மை
 புன்மையறி 
 யாப்பொறையைப் பூண்.                         (2)
 |  (இ-ள்) 
 ஐயம் உறு மனமே - சந்தேகம் உறுகின்ற மனமே! அண்ணல் - பெருமையினையுடைய, திருக் கச்சி 
 - அழகிய காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய, அரன் - சிவபெருமானது (ஏகாம்பரநாதரது), செய்ய 
 மலரடியை - சிவந்த தாமரையைப் போன்ற திருவடியை, சிந்தித்தி - நீ நினைப்பாய். 
 (சிந்தித்தல் - நினைத்தல்) சிந்தித்தி: சிந்தி, பகுதி. த் சந்தி, த் எழுத்துப்பேறு. 
 இ முன்னிலை ஒருமை எதிர்கால விகுதி. நையாமே - வருந்தாமல், இன்மை அறியா - இல்லையென்று 
 சொல்லாத, ஈகை - ஈதலையும், (கொடுத்தலும்) எச்சம் அறியா - குறைவு இல்லாத, வாய்மை 
 - சத்தியத்தையும், புன்மை யறியா - கீழ்மை அறியாத, பொறையை - பொறுமைக் குணத்தையும், 
 பூண் - பூண்பாய், மனமே (நீ) எண்ணி நீ பூண் என இயையும். ‘ஐய முறு மனமே’ 
 என்றது யாம் இறைவன் திருவருளைப் பெறுவேமோ பெறமாட்டேமோ என்று ஐயப்பாடு அடைகின்ற 
 மனமே என்பதாம். இறைவன் மலரடியை நினைத்தலாலும், ஈகை, வாய்மை, பொறை 
 என்ற குணங்களைப் பூணாகக் கொள்ளுதலாலும் இறைவன் திருவருளை அடையலாம் என்று நெஞ்சிற்கு 
 அறிவுறுத்தும் பண்பு பாராட்டத்தக்கது. |