அம்மானை கலித்தாழிசை.

வற்றா வளக்காஞ்சி வாழ்ந்தருளே காம்பரனார்
செற்றார் புரமெரித்த தீயர்காண் அம்மானை.
செற்றார் புரமெரித்த தீயரே யாமாயின்
கற்றார்கள் அந்தணராக் கழறுவதேன் அம்மானை
கழறல் அறுதொழில்சேர் காரணத்தால் அம்மானை.          (6)

(இ-ள்) வற்றா - குறையாத, வளம் - வளங்களையுடைய, காஞ்சி - காஞ்சியம் பதியில், வாழ்ந்தருள் - வாழ்ந்தருளிய, ஏகாம்பரனார் - ஏகாம்பரநாதனார், செற்றார் - பகைவரது, புரம் - முப்புரத்தை, எரித்த - அழித்த, தீயர் காண் அம்மானை - கொடியவர்காண் அம்மானை, (தீயர் - தீயை யுடையவர்) செற்றார் புரம் எரித்த - பகைவரது முப்புரம் அழித்த, தீயரே ஆமாயின் - கொடியவரே ஆமாயின், கற்றார்கள் - வேதநூல்களைக் கற்ற அந்தணர்கள், அந்தணராக - அழகிய குளிர்ந்த கருணையை உடையவராக, கழறுவதேன் அம்மானை - சொல்லுவது ஏன் அம்மானை, (அந்தணர் - பிராமணர்; அழகிய தட்பத்தை யுடையவர்) கழறல் - அங்ஙனஞ் சொல்லுதல், அறுதொழில் சேர் - ஆறு தொழில் சேர்ந்த, (அறு தொழில் - அழிக்கும் தொழில், அழித்து யாவரையும் ஒழித்தல்,) காரணத்தால் - காரணத்தால், அம்மானை - அம்மானை.

அறு தொழில் என்பன ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன.  ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்’ (தொல். 1020).

மறுத்துக் கேட்பவள் (4-ம் அடி) அந்தணர் - அழகிய குளிர்ந்த கருணையை உடையவர் எனக் கொண்டாள்.

மற்றொருத்தி - (மூன்றாமவள்) அந்தணர் பார்ப்பனர் எனக் கொண்டு பார்ப்பனர்க்கு ஆறு தொழில் உண்டு என்று சமாதானம் கூறினள்.  அறு தொழில் - அறுக்கும் தொழில் (சருவ சங்காரம்.)