நலம் வரும் வழி

நேரிசை வெண்பா.


அம்மானைக் கையமைத்தான் அக்காளை ஓடவைத்தான்
சும்மா விருந்துமதற் சுட்டெரித்தான் - பெம்மான்
பதிக்கச்சி மேய பரமன் பணிந்து
துதிக்கத் தருவன் சுகம்.                      (7)

(இ-ள்) அம்மானை - (தாருகாவனத்து முனிவர்கள் செலுத்திய) அந்த மானை, கை யமைத்தான் - கையில் எந்திக்கொண்டவரும், அக் காளை - அந்தத் திருமாலாகிய இடபத்தை, ஓடவைத்தான் - ஓடும்படி செய்தவரும், சும்மா இருந்தும் - ஆலமர்செல்வனாக யோக நிலையில் அமர்ந்திருந்தும், மதன் - மன்மதனை, சுட்டு எரித்தான் - சுட்டெரித்தவரும், பெம்மான் - பெருமானும், பதிக்கச்சி மேய பரமன் - கச்சிப்பதியில் எழுந்தருளிய சிறந்தவருமாகிய ஏகாம்பரநாதரை, பணிந்து துதிக்க - வணங்கித் துதிக்க, சுகம் தருவன் - சுகத்தைக் கொடுப்பர். அமைத்தானும் ஓடவைத்தானும் எரித்தானும் பெம்மானும் ஆகிய பரமன், தன்னைப் பணிந்து துதிக்கச், சுகம் தருவன் என இயைக்க.

அம்மான், தாயோடு பிறந்தவன் என்றும், அக்காள், கூடப் பிறந்தவள் என்றும் பொருள் தோன்றுதலும் காண்க.