| 
 வலைச்சியார் ஆசிரிய 
 விருத்தம். (பன்னிரு 
 சீர்கொண்டது) 
 
 | வாளைக் கயலை நிகர்த்தவெங்கண் வலைச்சி யீர்! நும் வனப்பெவரான்
 மதிக்க அமையும்; அரன்கச்சி
 வந்தீர்; அளவா மயறந்தீர்;
 தோளைத் தழுவிற் சுகம்பெறலாம்;
 ஊடல் ஒழிவீர்; நீர்க்குமிழி
 சுழிதேம் புளினந் தோன்றிடுமால்;
 துயரம் உறுவேன் நடைகிழங்கான்
 நாளைக் கழியா திறாலிதழின்
 நறவைப் பருக நச்சுறக்கொள்
 நானக் கருப்பஞ் சிலைவேளை
 நாணச் செய்வேன் மலங்குறேன்
 கோளைப் போக்கற் குறவைமட
 வைப்பாம் அகத்தைக் குழைத்தென்மேற்
 கொள்வீர் இரதத் தென்காலான்
 கொடிய பகழிக் குடையேனே.             (10)
 |  (இ-ள்.) 
 வாளைக் கயலை நிகர்த்த - கூர்மையாகிய வாட்படையையும் சேல்மீனையும் ஒத்த, வெங் 
 கண் வலைச்சியீர் - விரும்பத்தக்க கண்களையுடைய வலைச்சியாரே, நும் வனப்பு - உம் 
 அழகு, எவரான் - யாரால், மதிக்க அமையும் - மதிப்பிட முடியும், (ஒருவரானும் மதிப்பிடமுடியாது) 
 அரன் கச்சி வந்தீர் - சிவபெருமான் எழுந்தருளியுள்ள காஞ்சிபுரத்தில் வந்தீர், அளவா 
 - அளவில்லாத, மயல் தந்தீர் - (எனக்கு) மயக்கத்தைக் கொடுத்தீர். தோளைத் தழுவின் - உமது தோளைத் தழுவினால், சுகம் 
 பெறலாம் - இன்பத்தைத் துய்க்கலாம், ஊடல் ஒழிவீர் - என்னிடத்துக் கொண்ட பிணக்கை 
 ஒழிப்பீர், நீர்க்குமிழி - நீர்க்குமிழியும், சுழி - நீர்ச்சுழியும், தேம் புளினம் 
 - இனிய மணல் மேடும், தோன்றிடும் - உம்மிடத்தே காணப்படும், ஆல் - ஆதலால், துயரம் 
 உறுவேன் - துன்பம் அடைவேன், நடை கிழம் கால் - நடை கிழவன் கால் போன்றது. (தளர்ச்சி 
 அடைந்தது) நாளைக் கழியாது - நாளைப் போக்காது, இறால் இதழின் 
 நறவைப் பருக - நும் வாய் இதழ்களின் தேன் இறாலிலிருந்துப் பெறுவதை ஒத்த இனிய தேனை 
 உண்ண (இறால் மீன்போல் குவிந்துள்ள வாயிதழ் எனினுமாம்) நச்சு உறக்கொள் - விரும்புதலை 
 மிகக்கொண்டுள்ள, நான் - யான், (நீர் என் விருப்பத்தை நிறைவேற்றின்) அக் கருப்பஞ் 
 சிலைவேளை - அந்தக் கரும்பு வில்லையுடைய மன்மதனை, நாணச் செய்வேன் - (என்னை வெற்றி 
 கொள்ளாமல்) நாணும்படி செய்வேன், மலங்குறேன் - (மனம்) கலங்கமாட்டேன், கோளைப் 
 போக்கற்கு - மன்மதன் வலிமையைப் போக்குவதற்கு, மடம் - அறியாமைக்கு, வைப்பாம் 
 - இருப்பிடமாகும், அகத்தை - நெஞ்சினை, குழைத்து - நெகிழச்செய்து, என்மேல் உறவைக்கொள்வீர் 
 - என்மீது உரிமை கொள்வீர் (உரிமை - நட்பு). (கொள்வீராயின்) இரதத் தென்காலான் 
 - தென்றற் காற்றினைத் தேராக உடைய மன்மதன், கொடிய பகழிக்கு - (செலுத்தும்) கொடிய 
 அம்புக்கு, உடையேன் - நெஞ்சம் நிலைகெடேன். நடை கிழங்கான் - விரைவாக ஓடும் கிழங்கான் மீன். 
 நாளைக்கு அழியாது - நாளைக்குள் கெடாது. இறால் - இறால் மீன். நச்சுற - நல்ல சுறாமீன். 
 சுறா - சுற, சுறவு (புறா, புற, புறவு): குறியதன்கீழ் ஆகார ஈறு இவ்வாறு திரிவதை முன்னும் 
 காட்டினாம். கருப்பஞ்சிலை - சினையைக் கொண்ட பஞ்சிலை மீன் (பஞ்சிலை - ஒரு மீன்) 
 மலங்கு - விலாங்கு என்னும் மீன். மடவை, குறவை - மீன்களின் பெயர். காலான் - ஒருவகை 
 மீன். நீர் குமிழி - மூக்கு நீர்மையையுடைய (அழகுடைய) குமிழ்ந்து 
 தோன்றும் மூக்கு. (நீரில் முட்டை முட்டையாகத் தோன்றுவது). சுழி - நீர்ச்சுழி (நீரில் 
 சுழியாகத் தோன்றுவது); உந்தி.  புளினம் - மணற்குன்று - முலை: இவற்றைக் கண்டு மயக்கம் 
 அடைவேன், ஊடல் - புலவி (பிணக்கு). நாளைப் போக்காது, இதழில் ஊறுகின்ற இனிய நீர் பருக 
 விருப்பத்தைக் கொண்ட நான் நீர் இயையின் மன்மதனை நாணச் செய்வேன் என்க. இரதத் தென்காலான் - தென்கால் இரதத்தான் என விகுதி 
 பிரித்துக் கூட்டுக. |