| 
 கல்மனத்தைக் 
 குழைவித்தல் கம்பற்குக் கூடும் இரட்டை 
 ஆசிரிய விருத்தம். 
 
 | மாதுமையாள் 
 பனிமலையில் வளர்ந்தாள்நின்மதலையரிற் கயமு கத்தோன்
 வரமுனிவன் 
 வேண்டவட வரையேட்டிற்
 பாரதப்போர் வரைந்தான்; நீபப்
 போதலங்கல் 
 அணிகுமரன் குன்றுதொறும்
 பேருவகை பூப்ப மேவிப்
 புனிதவிளை 
 யாட்டயர்ந்தான்; கச்சியமர்
 புண்ணியநீ கயிலை மேரு
 மாதிரத்தே 
 வதிந்தனை; யென் கல்லனைய
 மனத்தூடுன் குடும்பத் தோடு
 மருவவொரு 
 தடையுமிலை மலைசிலையா
 வளைத்த நினக் கெளிதே, என்றன்
 கோதுடைய 
 மனச்சிலையைக் குழைத்தன்பின்
 நெகிழ்வித்தல் ஐய முன்னாட்
 குருகுய்ய 
 உபதேசங் கூறியநீ
 எனக்குரைத்தாற் குறைமட் டாமே.          (14)
 |  (இ-ள்) 
 பனிமலையில்-இமயமலையில், மாது உமையாள்-உமாதேவி, வளர்ந்தாள்-வளர்ந்தாள், நின் மதலையரில்-நின் புதல்வருள், கயமுகத்தோன் 
 - யானைமுகத்தையுடைய விநாயகன், வரமுனிவன் - மேலான வியாச முனிவன், வேண்ட-வேண்டிக்கொள்ள, வடவரை யேட்டில் வடக்கேயுள்ள மேருமலையை ஏடாகக்கொண்டு 
 அதில், பாரதப்போர் - பாரதப்போரை, வரைந்தான்-எழுதினான், நீபப் போது அலங்கல் - செங்கடம்பு மலராலாகிய மாலையை, அணி 
 - அணிந்த, குமரன்-முருகன், குன்றுதொறும் - மலைகள் தோறும், பேர் உவகை பூப்ப - பெரிய மகிழ்ச்சி உண்டாக, மேவி - 
 தங்கி, புனிதம் விளையாட்டயர்ந்தான் - தூய திருவிளையாடலைச் செய்தான். கச்சியமர் புண்ணிய - காஞ்சியில் எழுந்தருளிய நல்வினையை நற்றவம் புரிவார்க்கு ஈந்து 
 விளங்கும் நல்லவரே! நீ கயிலை மேரு மாதிரத்தே - தேவரீர் கயிலை மலையிலும், மேருமலையிலுமே, வதிந்தனை - வசித்தனை, (ஆதலால்) 
 என் கல்லனைய - எனது கல்லையொத்த, மனத்தூடு - மனத்தில், உன் குடும்பத்தோடு - உனது குடும்பத்துடன், மருவ ஒரு தடையுமிலை - பொருந்தி வாழ்வு புரிந்தருள ஒரு தடையுமில்லை, மலை - பொன்மலையாகிய மேருமலையை, 
 சிலையா(க) வளைத்த - வில்லாக வளைத்த, நினக்கு - தேவரீருக்கு, என்றன் - எனது, கோது உடைய - குற்றமுடைய, மனச்சிலையை - 
 மனமாகிய மலையை, குழைத்து - குழையச் செய்து, அன்பின் நெகிழ்வித்தல் - அன்போடு நெகிழச் செய்தல், எளிதே - எளிதாகும், 
 ஐய - ஐயனே, முன் நாள் - முற்காலத்து, குருகு உய்ய - நாரை உய்ய, உபதேசங் கூறிய - மெய்யறிவுரை மொழியைச் சொல்லிய, 
 நீ - தேவரீர், எனக்கு உரைத்தால் - எனக்குச் சொன்னால், குறைமட்டாமே - குறை அதிகம் ஏற்படாதன்றே. கஜம் - கயம் - யானை. முனிவன் - வியாசன். போது - மலர் (பொழுதில் மலர்வது, 
 காலவாகுபெயர்.) மலரும் பருவத்தில் உள்ள பேரரும்பு. மாதிரம் - மலை.  
  
 
 |      காலை அரும்பிப் பகலெல்லாம் 
 போதாகிமாலை மலரு மிந்நோய் (குறள்: 1237).
 |  குறை மட்டாமே - குறைவு அளவு படுமோ? ஏகாரம் வினாப் பொருளது. (ஆகுமோ - 
 குறை ஆகாது.) உன் மனைவி மலையில் வளர்ந்தாள்; உன் மூத்த மகன் மலையில் எழுதினான்; உன் இளைய 
 மகன் மலைதோறும் ஆடுகின்றான்; நீ கயிலைமலையில் வாழ்கின்றாய். எனவே, உன்குடும்பம் மலையை விருப்பம்கொண்டிருத்தலால் 
 மனமாகிய மலையில் நீ குடும்பத்தோடு வாழ்வாய். 
 அங்ஙனம் நீ வாழ என் மனமாகிய மலையை நெகிழ்ச்சி அடையச் செய்வாய்; அவ்வாறு செய்வது எளிதானதே. எவ்வாறெனில் (முன் ஒரு திண்ணிய பொன்மலையாகிய மேரு 
 மலையை வளைத்தாயாதலால் என்க.) அஃறிணைப் பிறப்பினதாகிய ஒரு நாரைக்கு அறமுரைத்த நீ ஆறறிவு உடைய எனக்கு அறநெறி காட்டிப் 
 பக்குவம் வருவித்தல் குறையாகாது. |