| 
 எண்சீர் 
 ஆசிரிய விருத்தம் 
 
 |       
 காரானைத் தோலுரித்த கறுப்பி னானைக்களித்துடல நீறணிந்த வெண்மை யானை
 வாரானை யூர்ந்திலங்கு செம்மை யானை
 வலத்தானை இடப்பாகப் பச்சை யானை
 நீரானைச் செஞ்சடையின் நெற்றி யுற்ற
 நெருப்பானைப் பொருப்பானைச் சகத்தி ரச்சீர்ப்
 பேரானைப் பெரியானைக் கம்பத் தானைப்
 பெம்மானை எம்மானைப் பேசு மாறே.            (22)
 |  (இ-ள்) 
 காரானை - கரிய யானையின், தோல் உரித்த - தோலை உரித்துக் கொண்டதனால் உண்டான, 
 கறுப்பினானை - கோபத்தை உடையானை, களித்து - மகிழ்ந்து, உடலம் - தம்முடலில், நீறணிந்த 
 - விபூதி அணிந்ததனால் உண்டான, வெண்மையானை - வெண்மை நிறத்தை உடையானை, வார்ஆனை 
 - நேர்மை உடைய ஏற்றை, ஊர்ந்து - செலுத்தி, இலங்கு - விளங்குகின்ற, செம்மை யானை 
 - செந்நிறம் உடையானை, வலத்தானை - (அம்மையார்) தன் வடிவின் வலப்பக்கத்தை இடமாகக் 
 கொண்டானை, இடப்பாகப் பச்சை யானை - இடப் பாகத்தில் பச்சை நிறங்கொண்ட மலைமயிலை 
 உடையானை, செஞ்சடையின் நீரானை - சிவந்த சடையில் கங்கையை உடையானை, நெற்றியுற்ற 
 நெருப்பானை - நெற்றியினிடத்து அமைந்த அக்கினிக் கண்ணை உடையானை, பொருப்பானை 
 - வெள்ளிமலையை உடையானை, சீர் சகத்திரப் பேரானை - சிறப்புப் பொருந்திய ஆயிரம் 
 பெயர் உடையவனை, பெரியானை - பெருமையுடையோனை, கம்பத்தானை - ஏகம்பம் உடையானை, 
 பெம்மானை - பெருமானை, எம்மானை - எம்முடைய இறைவனை, பேசும் ஆறே - பேசும்விதம் (அமைந்தது 
 என்ன நல்வினையோ!) எ - று. ‘பேராயிரமுடைப் பெம்மான் போற்றி’ 
 என்றதால் சீர்சகத்திரப் பேரானை என்றார்.  ‘கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள’ 
 (தொல்காப்பியம் உரியியல்) ஆனை - இடபத்தை, ‘ஆமா கோனவ் வணையவும் பெறுமே’ 
 என்ற விதியால் ஆ வென் பெயர் ‘ன’ கரச்சாரியை பெற்று இரண்டன்’ 
 உருபேற்று நின்றது. வாரானை என்புழிப் பெரிய யானை எனப் பொருள்கொண்டு 
 ஐராவணம் எனினும் அமையும். ஐராவணம் இரண்டாயிரம் கொம்பு உடைய யானை.  இது சிவபெருமானுக்கு 
 உரித்து. பச்சை,  பண்பாகு பெயராய் உமையம்மையை உணர்த்திற்று.  சடை பொன் வண்ணமாதலின், 
 ‘செஞ்சடை’ என்றார்.  சகத்திரம் - ஆயிரம்.  பெம்மான் - பெருமான் 
 என்பதன் சிதைவு.  எம்மான் - எம்மகான் என்பதின் சிதைவு.  அமைந்தது என்ன புண்ணியமோ 
 என்றது இசை யெச்சம். |