| 
 கலி 
 விருத்தம் 
 
 | மாறி 
 யாடு மலரடி மாமறைகூற வாடுங் 
 குவலயத் தின்னறந்
 தேற வாடுந் 
 தெளிதமிழ்க் கச்சியின்
 பூற வாடும் 
 உளமகிழ் பொங்கவே              (23)
 |  (இ-ள்.) 
 மாறி ஆடும் மலரடி - மதுரையில் வெள்ளியம்பலத்தில் ஊன்றியகாலைத் தூக்கியும், தூக்கிய 
 காலை ஊன்றியும் மாறியாடின தாமரை மலர்போலும் திருவடி. தெளி தமிழ் கச்சி - நெஞ்சு நிலைக்கும் அமைதி தரும் 
 தமிழ் மொழியினைக் கற்றுத் துறைபோய பெரும் புலவர் வாழ்கின்ற காஞ்சிப் பதியில், 
 உளம் மகிழ் பொங்க - (கண்டோர்க்கு) உள்ளத்தில் மகிழ்ச்சி பெருக, இன்பு ஊற - 
 இன்பம் ஊற்றெடுக்கவும், ஆடும் - ஆடும், மா மறை கூற - சிறந்த வேதம் புகழ, ஆடும் - 
 ஆடும், குவலயத்தின் அறம் தேற ஆடும் - உலகத்தின்கண் ஆன்மாக்கள் அறப்பயனைத் தெளியும்படி 
 ஆடும். தெளிதமிழ் ஆவது தெளிவினை (நெஞ்சுநிலைக்கும் அமைதியை)த்தரும் தமிழ்.  ஈண்டுத் 
 தெளி என்பது முதனிலைத் தொழிற்பெயர்.  தமிழ் - ஆகு பெயர்.  தமிழ் மொழிகற்ற 
 பெரும்புலவரைக் குறித்தது.  தெளிவைத் தரும் தமிழ் கற்ற புலவர் தீயனசெய்தற்கு நாணமுறுதலும் 
 பிறர்க்கு மாறாது கொடுத்தலும் உடையராவர் என்பதும், அவர் காஞ்சி வளம் பதியில் 
 உளர் என்பதும், “பூண்டாங்கு கொங்கை பொரவே குழை பொருப்பும், தூண்டாத தெய்வச்சுடர் 
 விளக்கும் - நாண்டாங்கு, வன்மைசால் சான்றவரும் காஞ்சிவளம் பதியின், உண்மையால் 
 உண்டிவ்வுலகு” என்ற தண்டியலங்காரப் பாடலால் அறியலாம்.  (தண்டி: ஒப்புமைக் 
 கூட்டவணி)
 மாறியாடும் மலரடி என்றது, பதஞ்சலி வியாக்கிரபாதர் 
 இவர்கள் பொருட்டு வெள்ளியம்பலத்துள் நடனக்கவினாய வடிவுடன் நின்ற பெருமானார் வலக்கால் 
 ஊன்றி இடக்கால் தூக்கியிருத்தலைக் கண்டு, நடனங்கற்று அதில் உள்ள வருத்த மிகுதியை 
 யுணர்ந்த இராசசேகரப் பாண்டியன், பலநாள் வலக்காலொன்றையே ஊன்றி நடனம் செய்யும் 
 சிவபெருமானுக்கு வருத்தம் மிகுமே யென்று நெஞ்சு நெக்குருகிக் கால் மாறியாடும்படி அப்பெருமானை 
 வேண்ட, அப்பாண்டியன் வேண்டினபடியே மாறியாடினன் என்ற வரலாற்றை உட்கொண்டுள்ளது. |