களி

அறுசீர் ஆசிரிய விருத்தம்

     

      அரவிந்த மலரின்கட் குடியனயன்
            அமரர்சுரா பானத் தாரே,
      வரமுறுகா விரிநதிக்கட் குடியனே
            திருமருவு மார்பி னானும்,
      தரணியின்கட் குடியர்பெருந் தவமுனிவர்
            சித்தரும்விண் ணவர்க டாமும்,
      கரவடமேன் திருக்கச்சிக் கண்ணுதலார்
            பனையின்கட் குடியர் தாமே.                     (31)

(இ-ள்.) அயன் - பிரமன், அரவிந்த மலரின்கண் - தாமரை மலரினிடத்து,  குடியன் - குடியிருப்பவன் (அரவிந்தமலரின் - தாமரை மலரில் பதுங்கிக்கொண்டு, கள் குடியன் - கள் குடிக்கும் இயல்புடையவன்.) அமரர் - தேவர்கள், சுராபானத்தாரே - தேவலோகத்திலிருந்துகொண்டு அமுதத்தைக் குடிப்பவரே ஆவர். (கள் குடிப்பவரே ஆவர்.) திரு மருவு மார்பினானும் - திருமகள் உறைகின்ற மார்பை உடைய திருமாலும், வரமுறு - மேன்மையுடைய, காவிரிநதிக்கண் - காவிரிநதிசூழ்ந்த (ஆற்றிடைக்குறையாகிய) திருவரங்கத்தில், குடியன் - குடியிருப்புக் கொண்டவன் (மார்பினானும் காவிரிநதியின் கிளைகளிடைத் தெளிந்துண்ணும் கட்குடியன்) பெருந்தவ முனிவரும் - பெரியதவமுடைய முனிவர்களும், சித்தரும் - சித்தர்களும், விண்ணவர்க டாமும் - ஆகாய வீதியே செல்லும் வேணாவியரும், தரணியின் கண் - பூமியில், குடியர் - குடியிருப்பவர், (தரணியில் பொய் வேடங் கொண்டு கள்குடிப்பவரே யாவர்,) கரவடமேன் - வஞ்சகமேன், திருக்கச்சி கண்ணுதலார் - திருக்கச்சியில் எழுந்தருளியுள்ள நெற்றிக் கண்களையுடைய ஏகாம்பரர், பனையின் கட் குடியர்தாமே - திருப்பனங்காடு என்னும் பதியில் குடியிருப்பவர்.  (பனந்தோப்பினிடத்துக் குடியிருப்பு உடையவர்.  பனையின் கள்குடியரே - பனைமரத்திலிருந்து பெறும் கள்ளை வஞ்சகமாகக்குடிப்பவரே யாவர்.)

சுரா - கள், சுரை - அமுதம்.  சுரா - சுரை.

கர வடம் எனப் பிரித்துக் கரத்தில் உருத்திராக்க மாலை ஏந்திக் கொண்டு, இரு கச்சிக் கண்ணுதலார் - கச்சியில் நுதற்கண்ணுடைய சிவபெருமானார், கட்குடியர் தாமே எனவும் பொருள் கூறலாம்.

திருப்பனையின்கண் எழுந்தருளும் சிவபெருமானார் இன்ப வடிவினர்.  அவ்வடிவினரை நான்முகனும், ஏனைய தேவரும், திருமாலும், முனிவரும், சித்தரும், வேணாவியரும் தியானித்து இன்ப முறுவர்.  ஆதலால் ‘நமரங்காள், நீவிரும் அவ்வின்பவடிவினரை நினைவு செய்து இன்பமடைவீராக’ என்று இன்பமுற்ற ஒருவன் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல் என்க.

குடியிருத்தல், குடிப்பது என்று இரட்டுறமொழிதற் பொருளில் குடி யென்னும் சொல் ஆளப்பெற்றுள்ள நயம் பாராட்டத்தக்கது.

மண்ணுலக விண்ணுலகங்களில் வாழ்வோர் யாவரும் குடிப்பவர்களே யாதலால் குடித்தல் இழுக்காகாது என்று களிமகன் தன்பால் இழுக்கின்மையைத் தெளிவித்து மற்றவர்களையும் கள்ளுண்ணும்படி அழைக்கும் உபாயம் இப்பாட்டில் நன்கு அமைந்துள்ளது.

முதலடியில் அமரர் என்னும் சொல் தேவரென்னும் பொருள் பட வந்திருத்தலால், மூன்றாம் அடியில் விண்ணவர் என்னும் சொல் சூரியனோடு ஆகாய வீதியே சென்று அச்சூரியனுடைய ஒளி முழுவதும் மக்கள்மீது படாதவாறு தடுத்துக்காக்கும் வேணாவியோர் என்று பொருள் கூறப்பட்டது.  ‘விண்செலன் மரபினையர்க் கேந்திய தொருகை’ என்ற திருமுருகாற்றுப்படை யடிக்கு நச்சினார்க்கினியர் கூறியுள்ள பொருளை யுற்று நோக்குக.