| 
 கட்டளைக் 
 கலிப்பா
       
 கட்ட தும்புமி தழித்தெ ரியலைக்கச்சி நாதர் தருவ திலையெனில்
 துட்ட மன்மதன் 
 ஐங்கணை யாமணச்
 சூத முல்லைய சோகம ரவிந்தம்
 கெட்ட 
 உற்பலம் அஞ்செரி போல்வருங்
 கிளிய னீர்மட நாணமச் சம்பயிர்ப்
 புட்ட யங்குயி 
 ரைந்தும வைக்கிரை
 யோவென் றோதிரச் செம்மழு வாளர்க்கே.          (32)
 
 (இ-ள்.) 
 கள் ததும்பும் - தேன் ததும்பும், இதழித் தெரியலை - கொன்றை மலர் மாலையை, கச்சிநாதர் 
 - காஞ்சியில் எழுந்தருளிய ஏகாம்பர நாதர், தருவ திலை யெனில் - எமக்குக் கொடுப்பது 
 இல்லையானால், துட்ட மன்மதன் - கொடிய மன்மதனுடைய, ஐங்கணையாம் - ஐந்து அம்பாகிய, 
 மணச்சூதம் - மணம் பொருந்திய மாம்பூ, முல்லை - முல்லை மலர், அசோகம் - அசோக மலர், 
 அரவிந்தம் - தாமரை மலர், கெட்ட உற்பலம் - சாவினை உண்டாக்கும் நீலோற் பல மலர், 
 (கரு நெய்தல் மலர்) அஞ்சும் - ஆகிய இவ்வைந்தும், எரி போல் வரும் - நெருப்புப் 
 போல் வரும், கிளி அனீர் - கிளிமொழி போன்ற இனிய மொழியுடைய தோழியரே, மடம் 
 நாணம் அச்சம் பயிர்ப்பு உள் தயங்கும் உயிர் ஐந்தும் - மடமும் நாணமும் அச்சமும் 
 பயிர்ப்பும் உடம்புள் கரந்து ஊசலாடும் உயிர் ஆகிய ஐந்தும், அவைக்கு இரையோ என்று 
 - அவ் வைந்து அம்புகளுக்கும் இரையாக வேண்டுமோ என்று, அச்செம்மழு வாளர்க்கு ஓதிர் 
 - அந்தச் சிவந்த மழுப்படை ஏந்திய ஏகாம்பரநாதருக்குச் சொல்லுவீர். தன்பால் காதலுற்றவளிடத்தே தானும் காதலுற்று, அதற்கறிகுறியாக 
 தன் மார்பிடத்துப் பூணும் கொன்றை மாலையைச் சிவபெருமான் தருவானானால் தலைவி ஆறியிருத்தலமையும்.  
 சிவபெருமான் காதலி என்பதையும் அறிந்து மன்மதன் தன் கணைகளை ஏவமாட்டான். தலைவியின் 
 நாற்குணங்களும் உயிரும் அவற்றிற்கு இரையாகமாட்டா.  இல்லையெனின், ஐங்கணைகட்குக் 
 குணமும் உயிரும் இரையாகும்.  தன்னைக் காதலித்த தலைவியைத் தான் காதலித்து இன்பம் 
 பெறாது, தன் கண்ணீறுபட்டுச் சாம்பரான ஒருவன் (மன்மதன்) எளிதான நாசமுறுவித்தலைத் 
 தான் கண்டுகொண்டு எரியிருப்புப் படையை (மழுவினை) ஏந்தியிருத்தலால் தனக்குண்டாகும் 
 சிறப்பென்னையோ, என்று தலைவி தோழியின் மூலமாகத் தூதுரை கூறி, அம்மழுப்படை கொண்டு 
 அம் மன்மதனை நீறாக்கித் தன்னைச் சேரும்படி வேண்டுவதாக இச்செய்யுள் அமைந்துள்ளது. 
 சூதம், முல்லை, அசோகம் அரவிந்தம் உற்பலம் என்பன முதலாகு பெயர்களாய்ப் பூவை உணர்த்தின. ஐந்து - அஞ்சு என்று போலியாயிற்று, செம்மழுவாளர் என்பதனால் 
 மன்மதனை மீண்டுமொருமுறை நீறாக்கிவிட வல்ல கருவி வல்லமை யுடையர் என்பது குறிக்கப்பட்டது. |