| அறுசீர் 
 ஆசிரிய விருத்தம்
 
 | குன்றைக்கு 
 னித்தகச்சிக் கோமானார் சித்தவுருக்கொண்ட நாள்யாம்
 என்றைக்கும் 
 சிறப்பெய்த விச்சையுடன் கற்றவித்தை
 இற்றென் றாமோ
 மின்றைக்கு 
 முடிவேந்தர் விரும்பவொரு தினத்திரும்பு
 தனைப்பொன் செய்வேம்
 இன்றைக்குப் 
 பொன்னளித்து நாளைவெள்ளி இயற்றினும் பின்
 சனிய தாமே.                            (34)
 |  
 (இ-ள்.) 
 குன்றைக் குனித்த - மேரு மலையை வில்லாக வளைத்த, கச்சிக் கோமானார் - காஞ்சிபுரத்தில் 
 எழுந்தருளிய ஏகாம்பரநாதர், சித்த உருக் கொண்ட நாள் - (மதுரையில்) சித்தர் வடிவாக 
 வந்த நாளில், யாம் - யாங்கள், என்றைக்கும் - எந்நாளும், சிறப் பெய்த - சிறப்படைய, 
 இச்சையுடன் - அன்போடு, கற்ற வித்தை - கற்ற படிப்பு, இற்று என்று ஆமோ - இவ்வளவினது 
 என்று சொல்ல முடியுமோ, மின் தைக்கும் முடிவேந்தர் - மின்னல் போல ஒளிவீசும் முடியையுடைய 
 அரசர்கள், விரும்ப - விரும்பும்படி, ஒரு தினத்து - ஒரு நாளைக்குள்ளே, இரும்பு தனை - 
 இரும்பினை, பொன் செய்வேம் - பொன்னாகச் செய்வோம், இன்றைக்கு - இற்றைப்பொழுது, 
 பொன் னளித்து - பொன்னைக் கொடுத்து, நாளை - நாளைப் பொழுதில், வெள்ளி இயற்றினும் 
 - வெள்ளி செய்தாலும், பின் சனியது ஆம் - பிற்காலத்தில் அது இரும்பே யாகும். சித்த உருக் கொண்ட நாள் - சோமசுந்தரக்கடவுள் மதுரையில் 
 சித்தராய் வேடங்கொண்டு எண்வகைப் பேறுகள் செய்த நாளில். விச்சையுடன் - மந்திரத்துடன் எனினுமாம். ஒரு நாளில் இரும் புதனைப் பொன் செய்வேம். புதன் கிழமையை 
 மாற்றிப் பொன் (வியாழன் - வியாழக்கிழமை) ஆக்கிவிடுவோம் என்றுமாம். இன்றைக்குப் பொன் அளித்து என்றது, இன்றைக்கு வியாழக்கிழமையாய், 
 நாளை வெள்ளிக்கிழமையாயினும், அதற்குப் பின் சனிக்கிழமையாம் என்பது மற்றொரு பொருள். மின் தைக்கும் முடி என்றது - தன்னொளி மின்னலொளியையும் 
 தைத்துப் பின்னிடச் செய்யும் முடி என்பதாம். இரும்புதனை - இரும்பு+தனை யென்றும், இரும்+புதனை என்றும் 
 பிரித்துப் பொருள்கொள்ளக் கிடத்தலால் பிரிமொழிச் சிலேடை. பொன் - செம்பொன்; வியாழன். வெள்ளி - வெண் பொன்; 
 வெள்ளி நாள். சனி - கரும் பொன்; சனி நாள். சனி - இரும்பு என்றது, சனியினது நிறம்போலும் 
 கருநிறமுடையதுபற்றியாதல், பொன்னும் வெள்ளியும் பிறத்தற்கு (சனித்தற்கு)க் கருவாந்தன்மைபற்றியாதல் 
 என்க. இனிச் சனியதாமே என்றது, சித்தினால் இரும்பைப் பொன்னாக்கும் 
 தொழிலுடையார்க்குப் பிற்காலத்தில் சனி பிடித்தது போல் வறுமையே உண்டாகும் என்றுமாம். |