அறுசீர்
ஆசிரிய விருத்தம்
சனியாகும்
ஊழ்வலியாற் சகலகலை யறிவுணர்ச்சி
தகைபெ றாதால்
தனியாகும்
எங்களுத வியைப்பெற்றுச் சாற்றும்பர்
அடைந்தார் பொன்னில்
கனியாரும்
பொழிற்கச்சிக் கண்ணுதலார் கைச்சி லம்பைக்
கனக மாக்கிப்
பனியாருங்
கடல்வண்ணன் மார்பினைப்பொன் னிருப்பா கப்
பண்ணி னோமே. (35)
|
(இ-ள்.)
சனியாகும் - அறிவையே யன்றி அறியாமையையும் தோற்றுவித்தலுக்கு முதலாகும், ஊழ் வலியால்
- முன்னைய பிறப்புக்களில் செய்த தீவினை நல்வினை வலியால், சகலகலை - எல்லா வகை
நூல்களையும், அறி உணர்ச்சி - அறிதலையுடைய உணர்ச்சி ஏற்படினும், அறியாமையும் கூடியிருத்தலால்
அவ்வுணர்ச்சி, தகை பெறாது - பெருமையைப் பெறாது, ஆல் - ஆதலால், (ஊழின் துணைவலியை
விடுத்து) தனியாகும் - ஒப்பில்லாத துணையாகும், எங்கள் உதவியைப் பெற்று - எங்களுடைய
துணையைப் பெற்று, சாற்று உம்பர் - உயர்ந்தோரால் உயர்த்துச் சொல்லப்பட்ட தேவர்களும்,
பொன்னில் அடைந்தார் - பொன்னுலகத்தில் இருந்து உரிமை ஆற்றலைச் செலுத்தும் உயர்வினை
அடைந்தார்கள், அவர்களுள் கனி ஆரும் பொழில் - கனிகள் நிறைந்த சோலை சூழ்ந்த,
கச்சி கண்ணுதலார் - காஞ்சி புரத்தில் எழுந்தருளிய நெற்றிக்கண்ணினையுடைய ஏகாம்பர
நாதரது, கைச் சிலம்பை - கையிலுள்ள கல் மலையை, கனகமாக்கி - பொன்மலையாக்கிக்
கொடுத்து, பனி ஆரும் - குளிர்ச்சி பொருந்திய, கடல் வண்ணன் - கடல் நிறம்போலும்
கரிய நிறத்தை உடைய திருமாலினது, மார்பினை - மார்பை, பொன் - பொன்னாகவும், இருப்பு
ஆகவும் - இரும்பாகவும், பண்ணினோம் - செய்தோம்.
கண்ணுதலார் காலில் அணியவேண்டிய சிலம்பைக் கையில்
அணிந்திருந்தார்கள்; அச் சிலம்பைக் கையில் அணிதற்குரிய பொன் தொடியாக்கித்
தந்தோம் எனவும் கையிலுள்ள மேருமலையைப் பொன்னாக்கித் தந்தோம் எனவும் சித்தர்
கூறினார் என்க. சிவபெருமான் கையில் உள்ள மேருமலை இயற்கையாகவே பொன்மலையாக இருந்ததன்றோ
வெனின், சித்தர், பொன் செய்தோம் யாம் என்று கூறுதல் வாயிலாக முன்னர் அம்மலை
ஏனைய மலைகள்போலக் கல் மலையாகவே இருந்தது; பின்னர்த் தம்முடைய சித்தினால்தான்
பொன்னாயிற்று என விளக்கினமையும் கொள்க.
கடல் வண்ணன் மார்பினைப் பொன் இருப்பாகப் பண்ணினோம்
என்றது, திருமால் கடல் வண்ணனாதலால் மார்பும் கடல் நிறமே என்பது போதருதலால், அவனுடைய
நீலநிறம் பொருந்திய மார்பினைப் பொன்னுக்கு (அழகிய நிறத்திற்கு) இருப்பிடமாகப்
பண்ணினோம் என்றும் ‘பொன்’ என்னும் திருமகளுக்கு இருப்பிடமாகப் பண்ணினோம்
என்றும், பொன் அழகிய மார்பினை இருப்பாக (இரும்பு+ஆக) கருநிறமுடைய மார்பாகப் பண்ணினோம்
என்றும் பொருள் தருதல் காண்க. இங்கே கூறப்பெற்ற மூன்றாம் பொருளுக்குப் பொன் மார்பினை
இருப்பாகப் பண்ணினோம் என இயைக்க. இங்ஙனம் இயைத்துப் பொருள் காண்டலே மிக்க
சிறப்புத் தருவதாம். இரும்பு என்றது, இருப்பு என வலித்தல் விகாரம் பெற்றது. இப்பொருளில்
‘பனியாரும் கடல் வண்ணன்’ என்றது, கடல் வண்ணன் பனி (நடுக்கம்) அடையும்
வண்ணம் என இயைந்து பொருள் தரும். இப்பாட்டில் சனியாகும் ஊழ்வலி என்றது, சனியன்போல்
துன்பத்தையே செய்வதாகிய ஊழ்வலி என்றும் பொருளாம்.
‘ஊழ் வலியால் பல பல கலைகளும் அறியும் உணர்ச்சி
பெற்றாலும், அவ் வூழ்வலியால் அறியாமையும் கூடவே தொடர்ந்து நிற்கும் ஆதலால், அறியும்
உணர்ச்சி பெருமை பெறுவதில்லை. ஆகவே, எங்கள் உதவியைப் பெற்றுத் தேவர்களும் பெருமை
பெற்றனர். ஊழ்வலியை விட்டு எங்கள் உதவியை நாடிய கச்சிக் கண்ணுதலார்க்கு அவர்
ஏந்திய கைச்சிலையையும் பொன்னாக்கிக் கொடுத்தோம். ஊழ் வலியையே நாடி எங்கள்
வலியை நாடாத கடல் வண்ணன் பொன் மார்பினை இரும்பு மார்பாகப் பண்ணிவிட்டோம்.
எங்கள் சித்தின் வலிமை இருந்தவாறு இதுவாம் எனச் சித்தர் தம் சித்தினால் எதையும்
செய்ய வல்லவர் என்பதைப் புலப்படுத்துந் திறம் இப்பாட்டால் அறியலாம்.
|