கலிநிலைத்துறை


      இருப்புக்கு வெண்பொன் பசும்பொன்
            னகங்கொண்ட இறைவா! எனைக்
      கருப்புக் குழன்றெய்க்க வையாமல்
            அருள்கூர்ந்து காப்பாய்கொலோ
      பொருப்புக்கு வீழப் புவிக்காடை
            பொங்கப் புரஞ்செற்றசெந்
      நெருப்புக்கு வதனத் திடந்தந்த
            ஒருமா நிழற்சோ தியே!                    (36)


(இ-ள்.) பொருப்பு உக்கு வீழ - மலைகளெல்லாம் பொடியாகிக் கடலில் வீழ, புவிக்கு ஆடை - அதனால் பூமிக்கு ஆடையாகிய கடல், பொங்க - பொங்குமாறு, புரஞ் செற்ற - வான வீதியில் செல்லுதலையுடைய முப்புரத்தை அழித்த, செந் நெருப்புக்கு - சிவந்த செருப்புக்கு, வதனத்து இடந் தந்த - நின் முகத்தில் இடங் கொடுத்த, ஒரு மா நிழல் சோதியே - ஒரு மாமரத்தின் நிழலில் வீற்றிருக்கும் பெருமானாகிய ஒளி வடிவினனே, இருப்புக்கு - இருப்பிடத்துக்கு, வெண் பொன் நகம் - வெள்ளி மலையையும், பசு பொன் நகம் - பசும் பொன் மலையையும் இடமாகக்கொண்ட, இறைவா - இறைவனே, எனை - அடியேனை, கரு புக்கு - தாயின் கருப்பையில் புகுந்து, உழன்று - வருந்தி, எய்க்க - இளைக்க, வையாமல் - வைக்காமல், அருள் கூர்ந்து - கருணை மிகுதியாகச் செய்து, காப்பாய் - காக்கக்கடவாய், (கொல்ஒ, அசை.)

பசும்பொன் னகங்கொண்ட என்பதைப் பசும்பொன் அகம் கொண்ட எனப் பிரித்துப் பசும் பொன் நிறமுடைய உமா தேவியை உன் உள்ளத்தே கொண்ட இறைவனே எனப் பொருள் கூறலுமாம்.

“உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி” என்பது திருவாசகமாதலால், இறைவன் இறைவியை உள்ளத்தே வைத்திருத்தல் பொருத்தமுடையதாதல் காண்க.

யான் என தென்னும் செருக்கும், முப்புரத்தாருடைய முப்புரமும் அழிந்தொழியச் செய்தாய்; நீ எழுந்தருளும் இருப்பிடமாக வெள்ளிமலையையுடையாய்.  ஆகவே, உன்னால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை.  அருளே  வடிவமான அம்பிகையை உன் உள்ளத்தே கொண்டிருக்கின்றாய்; நானோ யான் என தென்னும் செருக்குகள் அற்றவனாக இருந்துகொண்டு உன் அருளொன்றையே நாடி நிற்கின்றேன்; ‘வேண்டத்தக்கது அறிவோனாகிய நின்னை’ என்னைக் கருவில் புகுந்து வருந்தி இளைக்க வைக்காமல் அருள் மிகச் செய்து காப்பாயோ என்று கேட்கவும் வேண்டுமோ? வேண்டாவன்றே! நீயே காப்பாய்; ஆதலால், உன் கருணை இருந்தவாறு என்னே! என்று ஆசிரியர் இறைவன் அருளில் தோய்ந்து நிற்றலை இப்பாடலில் காணலாம். இப்பொருளில் கொல், அசை. ஒ, வினா.

நெருப்புக்கு வதனத் திடந் தந்தவன் என்றதனால் இறைவனால் இயற்றலாகாத காரியம் ஒன்றுமில்லை என்பதைத் தெற்றென உணரலாம்.

இடந் தந்த சோதியே எனக் கூட்டுக.

கருப்புக்கு என்பதைக் கரும்புக்கு என்பதன் வலித்தல் விகாரமாகக்கொண்டு மன்மதனுடைய கரும்பு வில்லுக்கு இலக்காகி வருந்தி யிளைக்காதபடி அருள் செய்வாயாக எனப் பொருள் கூறுதலும் ஒன்று.

கரும்பு, கரும்புவில்லிற்குக் கருவியாகுபெயர்.  இருப்புக்கு வெண் பொன் கொண்டது வெள்ளி மலையாகிய கயிலை மலையை வெளிப்படையாக உணர்த்துவதாம்.

பசும் பொன் அகம் கொண்ட என்றது, அவ் வெள்ளி மலையாகிய கயிலையின்மீது பசும்பொன்னாலாகிய கோயிலைக் கொண்டது என்க.

இனிப் பசும் பொன் அகம் கொண்ட என்றதற்கு, பசும் பொன்னாலாகிய மேரு மலையை அகங் கையில் கொண்ட என்று பொருளுரைத்தலுமாம்.

செந்நெருப்பு என்றது, நெற்றிக்கண்.