எண்சீர்
ஆசிரிய விருத்தம்
குணதிசைவெய்
யோற்கலரும் அரவிந்தம் பானலமே
குலைந்திடுந்தென் பொதியில்வரும் அரவிந்தம் பானலமே
கணமிகுவெண்
முத்துயிர்க்கு நந்தனந்தங் கயலாமே
கச்சியிறை தணத்தலின்வார் நந்தனந்தங் கயலாமே
அணங்குறவின்
மதன்முளரி முலையெய்திடு மாசுகமே
ஆசற்றா ரிதழ்பருக முலையெய்திடு மாசுகமே
வணமணியின்
பரஞ்சுமந்த வாழிதயங் கருங்கலமே
வஞ்சருக்கென் நெஞ்சரங்க வாழிதயங் கருங்கலமே. (39)
|
(இ-ள்.)
குணதிசை வெய்யோற்கு - கிழக்குத் திசையில் உதயமாகும் வெப்பம் மிக்க சூரியனுக்கு,
அரவிந்தம் அலரும் - தாமரையானது மலரும், பானல் குலைந்திடும் - குளிர்ச்சி மிக்க
சந்திரனுக்கு அலரும் நீலோற்பலம் (குவளை) சீரழிந்திடும்; (சந்திரன்போன்ற தண்ணளியுடைய
தலைவர் பிரிவால்) தென் பொதியில் வரும் அரவு - தெற்கேயுள்ள பொதியமலையிலிருந்து
வருகின்ற பாம்பு போன்ற தென்றற்காற்றும், இந்து - சந்திரனும், அம்பு - மன்மதன்
எய்கின்ற அம்புகளும், ஆன் -ஆகிய இவற்றான், அலமே - நமக்குத் துன்பமே, கணம் மிகு - கூட்டம் மிகுந்த, வெண் முத்து
- வெள்ளிய முத்துக்களை, உயிர்க்கும் - ஈனுகின்ற, நந்து - சங்குகளும், அனந்தம் கயல்
- அளவில்லாத கயல் மீன்களும், ஆம் - வளப்பமாதற்கு இடமாகிய, கச்சி - கச்சியில்
தங்கிய, இறை தணத்தலின் - இறைவர் பிரிதலினாலே, நம் தனம் வார் தங்க அயலாம்
- நமது முலைகள் கச்சுத் தங்குவதற்கு வேறுபட்டவாம் (விட்டு நீங்கும்), அணங்கு உற -
பிரிவினால் எனக்கு வருத்தம் உண்டாக, வில் மதன் - வில்லையுடைய மன்மதன், எய்திடும்
- எய்கின்ற, முளரி - தாமரை மலரும், முலை - முல்லை மலரும், ஆசுகமே - அம்பே, ஆசற்றார்
- குற்றம் நீங்கினவராகிய தலைவர், இதழ் பருக - என் இதழைப் பருகுதலால், முலை - எயிற்றுநீர்
ஊறுவதற்கு இடமாகிய முல்லை அரும்பு போன்ற பற்கள், மாசுகம் - பெரிய இன்பத்தினை,
எய்திடும் - அடைந்திடும், வணமணியின் - அழகிய இரத்தினங்களின், பரம் - சுமையினை,
சுமந்த - தாங்கியுள்ள, ஆழி - கடலில், தயங்கு - விளங்குகின்ற, அருங் கலமே - அரிய
மரக்கலமே, வஞ்சருக்கு - வஞ்சகராகிய தலைவர்பொருட்டு என் நெஞ்சு அரங்க - என் மனம்
வருந்த, வாழ் - பொருந்திய, இதயம் - (அவர்) இருதயமானது, கருங்கல் அமே - கருங்கல்லின்
அழகு உடையதே! கருங்கல்போல் வன்மை உடையதோ?
தலைவனது பிரிவால் தலைவிக்கு உண்டான வருத்தம் கூறப்பட்டது.
பொதியமலையில் இருந்துவரும் தென்றற்காற்று அரவாக (பாம்பாக) உருவகப்படுத்தப்பட்டது.
நம் தனம் வார் தயங்க அயலாம் என்பது - தலைவனது பிரிவால் தலைவிக்கு உண்டான உடல்
மெலிவு கூறப்பட்டது. ஆசற்றார் நம் இதழ் பருக, முலையைத் தழுவுவாராயின் அம் முலை பெரிய
நலமடையும் எனினுமாம்.
பாரம் என்பது பரம் எனக் குறுகிற்று. கருங்கல் அழகு;
ஈண்டு வன்மைமேற்று. தலைவி இரங்கலாதலின் நெய்தல் நிலக் கருப்பொருளாகிய மரக்கலத்தைப்
பார்த்து இரங்குகின்றாள்.
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி
றூறிய நீர்” ஆதலால், இதழ் பருக மு(ல்)லை (பற்கள்) மாசுகம் எய்திடும் என்று
கூறப்பட்டது.
“வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச்செவ்
வாய்க்கரிய பானல்வாய்க் கண்ணியர்க்கும்” (திருவாசகம்). பானல் - கருங்குவளை. |