கலிநிலைத்துறை

ஒன்று சூழின்வே றொன்றுமுந் துறவுணர் வுலைந்து
பின்றை எய்திடும் பெற்றியுய்த் துணர்கிலாப் பேயேன்
என்று நின்னரு ளிருங்கடல் குளிப்பதென் அரசே!
மன்றி லாடிய குழகமா நீழல்வாழ் மணியே!                   (45)

(இ-ள்.) ஒன்று சூழின் - ஒன்றை நினைக்கின், வேறொன்று முந்துற - வேறொன்று முற்பட்டு வர, உணர்வு உலைந்து - அறிவு கெட்டு, பின்றை எய்திடும் பெற்றி - பிறகு அடையும் தன்மையை; உய்த்து உணர்கிலா - ஆராய்ந்தறியமாட்டாத, பேயேன் - பேயேனாகிய யான், என் அரசே - எனது இறைவனே, மன்றில் ஆடிய குழக - பொன்னம்பலத்தில் நடனம் ஆடிய குழகனே!, மா நீழல் வாழ் மணியே - மாமரத்தின் நீழலில் வாழ்கின்ற விலையில் மணியே!, நின் அருள் இருங் கடல் - நினது அருளாகிய பெரிய கடலில், குளிப்பது என்று - குளிப்பது என்றைக்கு?

ஒன்று: எண்ணல் அளவை ஆகுபெயர்.

குழகன் - இளமை யழகுடையவன். “மழவும் குழவும் இளமைப் பொருள” (தொல்காப்பியம், உரியியல்.)

உலைந்து - கெட்டு.

என் அரசே! மன்றிலாடிய மணியே! குழக! மாநீழல் மாமணியே! நின் அருள் இருங் கடல் குளிப்பது என்று என இயைக்க. ‘உணர்கிலாத’ என்பது ‘உணர்கிலா’ எனத் தொக்கு நின்றது தொகுத்தல் விகாரம். ‘கில்’ ஆற்றலுணர்த்தும் இடை நிலை.

நின் அருள் இருங்கடலில் குளிப்பது என்றது, நின் அருளை முழுவதும் பெறுவது என்றவாறு.

‘அரசு’ - சொல்லால் அஃறிணை; பொருளால் உயர்திணை.