அறுசீர்
ஆசிரிய விருத்தம்
கல்லாலின் கீழிருந்து கலைவிரித்துப் புணர்வளித்த
கள்வ னார்க்குச்
சொல்லாலா
யிரமுகமன் கூறுவையக் கச்சியர்க்குச்
சுகுணம் உண்டேல்
வில்லாரும்
புயவிதழி விரும்புவையின் றேலின்றே
விழையப் பெற்றாள்
அல்லோடக்
கண்டவிட மாயும்வகை அறிவளென
அறைதி மாதே. (47) |
(இ-ள்.)
கல்லாலின் கீழ் இருந்து - கல்லாலமரத்தின் கீழே தங்கி, கலை விரித்து - சிவம்
ஞானம் போதம் என்பவற்றினை விரித்து விளக்கி, புணர்வு அளித்த கள்வனார்க்கு - (ஆன்மா
கடவுளோடு இரண்டறக்) கலத்தலாகிய நன்னெறியை அளித்த, கள்வனார்க்கு - இன்னதன்மையர் என்று சுட்டி உணரப்படாதவருக்கு,
சொல்லால் - சொற்களால், ஆயிர முகமன் கூறுவை- பல பணிமொழிகளைச் சொல்லுவாய்,
அக் கச்சியர்க்கு - அக் கச்சியம்பதியில் எழுந்தருளிய ஏகாம்பரநாதருக்கு, சுகுணம்
உண்டேல் - நற்குணம் உண்டானால், வில்லாரும் புயம் - ஒளிவாய்ந்த புயத்திலணிந்த,
இதழி விரும்புவை - கொன்றை மாலையைத் தருமாறு வேண்டிப் பெறுவாய், இன்றேல் - (சிவபிரான்
தாம் அணிந்த கொன்றைமாலையைத் தருவது) இல்லையாயின், விழையப் பெற்றாள் - சிவபிரானால்
விரும்பப்பட்ட தலைவி, அல் ஓடக் கண்ட விடம் - இருளானது தோற்று ஓடும்படி செய்த நஞ்சால்,
மாயும் வகை - இறக்கும் வகையை, இன்றே அறிவள் என - இப்பொழுதே அறிவாளென்று, மாதே
- தோழியே!, அறைதி - அவரிடத்துச் சொல்லுவாய்.
அல் ஓடு - இருளும் நஞ்சின் கருநிறத்தைக் கண்டு அஞ்சி
ஓடும்படியான.
கண்ட விடம் ஆயும் வகை எனப் பிரித்துக் கழுத்தின்கண்
நஞ்சு தங்கிய வரலாற்றை ஆயும் வகை அறிவளென அறைதி என்று கூறலுமாம்.
தம்மால் அன்றிப் பிறவகையால் பிறர்க்கு உண்டான துன்பத்தினை
நீக்குவதற்குத் தமக்கு வரும் தீங்கினையும் கருதாது நஞ்சு உண்டவர், தம்மால் உண்டாக்கப்பட்ட
தலைவியின் உயிர் நீக்கத்தைத் தடுக்காமலிருந்தால் தகுதியோ எனப் பலர் அறியக்
கூறி வா என்று தோழியைத் தலைவனிடம் தூது அனுப்புவதாக அமைந்துள்ளது இப் பாடல். வில்
- ஒளி. திருவில்லிட்டுத் திகழ்தரு மேனியள் என்பது மணிமேகலை. ‘மாதே! முகமன் கூறித்
தலைவனை அழைத்து வா; வாராதொழியின், அவன் தோளிலணியும் மாலையைப் பெற்று வா. அம்மாலையும்
தர இயையானாயின், தலைவி ‘இறப்பாள்!’ என்பதைக் கூறி வா’ என்று தனக்குத் தலைவன்பால்
உள்ள அன்பு மிகுதியையும் பிரிவாற்றாமையையும் தலைவி உணர்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது
காண்க. |