எண்சீர்
ஆசிரிய விருத்தம்
பெரியானைப் பேரின்ப நிறைவீட் டானைப்
பிறைமதியம் பிறங்குசடா தரனை யார்க்கும்
அரியானை
அடலவுணர் புரநீ றாக்க
அழலூற்று நகையானை அரனை வேழ
வுரியானைத்
திருக்கச்சி யுடையான் றன்னை
உன்னரிய குணநிதியை ஒப்பில் வேதப்
பரியானை
அகநிறுவித் துதிப்பார் அன்றே
பவத்துவக்கைப் பாற்றுறுமா டவர்க ளாவார். (53) |
(இ-ள்.)
பெரியானை - பெருமை உடையவனை, பேரின்ப நிறைவீட் டானை - பேரின்பம் நிறைந்த வீட்டுலகத்தை
உடையவனை, பிறை மதியம் - பிறைத்திங்கள், பிறங்கு - விளங்குகின்ற சடாதரனை - சடையைத்
தரித்தவனை, யார்க்கும் அரியானை - எத்தன்மையர்க்கும் அருமை உடையவனை, அடல் அவுணர்
புரம் - வலிமை பொருந்திய அவுணர்களாகிய திரிபுராதிகளுடைய முப்புரம், நீறாக்க - சாம்பலாகும்படி,
அழல் ஊற்று நகையானை - தீச்சொரிகின்ற சிரிப்பை உடையவனை, அரனை - அரன் என்னும்
திருநாமத்தை உடையவனை, வேழ உரியானை, யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டவனை,
திருக்கச்சி யுடையான் தன்னை - அழகிய காஞ்சிநகரத்தை இருப்பிடமாக உடையவனை, உன்னரிய
- நினைத்தற்கரிய, குண நிதியை - எண் குணங்களுக்கு உறைவிடமானவனை, ஒப்பில் - ஒப்பில்லாத,
வேதப் பரியானை - மறைகளாகிய குதிரைகளைக் கொண்டவனை, அகம் நிறுவி - மனத்தில்
நிறுத்தி, துதிப்பார் அன்றே - துதிப்பவர் அல்லவா, பவத் துவக்கை - பிறவிச் சங்கிலியை,
பாற்றுறும் - அழிவுறு தலைச்செய்யும், ஆடவர்களாவார் - ஆண்தன்மையுடைய மக்களாவார்கள்.
அரன் - பெரியானை முதலிய ஒரு பொருள்மேல் வந்த பல
பெயரடுக்கித் ‘துதிப்பார்’ என்ற ஒருவினைகொண்டு முடிந்தன.
“ஒரு பொருள்மேல் பலபெயர் வரின், இறுதி ஒருவினை கொடுப்பர்”
என்பது நன்னூல்.
சிற்றின்பத்திற்கு மறுதலை என்பார், ‘பேரின்பம்’
என்றார்.
மக்கள் வாழும் வீடு சிற்றின்பமும் பெருந்துன்பமும் நிறைந்ததாதலால்,
பேரின்பம் நிறை வீடு என்றது, புத்தேள் உலகத்தை.
பிறை மதியம் என்றவிடத்து, அம் சாரியை.
அரன் - உள்ளத்துறவுடையாரின் வினைகளை அழித்தருளுபவன்.
வேதங்களைக் குதிரையாகக்கொண்டது.
திரிபுரம் எரித்தபோது உலகமே தேராக அமைய, அதில்
பூட்டப்பெறுங் குதிரைகளாக வேதங்கள் அமைந்தன என்னும் கதையை உட்கொண்டது.
பவத்துவக்கு - பிறவிக்கட்டு ஆம்; பிறவித் தளை.
ஆடவர்களின் இலக்கணம் இஃது என்று உணர்த்துவது போன்று இப்பாடல் அமைந்திருக்கும் நயம்
போற்றத்தக்கது. |