| கட்டளைக் 
 கலித்துறை  
  
 
 |        பதஞ்சேர்த்துப் பாடியென்? பாசத் தொடர்ப்பட்டுப்பாவையரிங்
 கிதஞ்சேர்த்துக் 
 கொஞ்ச மயங்கி இடர்ப்பட்
 டிரங்குவனங்
 கதஞ்சேர்த் 
 தரைக்கசைத் தாய்கச்சி வாண!
 கடையனெந்த
 விதஞ்சேர்தல் 
 நின்பதம் தாயனை யாய்கதி
 வேறிலையே.       (57)
 |  (இ-ள்.) 
 பதம் சேர்த்துப் பாடி - மொழிகளை ஒன்று சேர்த்துப் பாடினால், என் - என்ன பயன்?, 
 பாசத் தொடர்பட்டு - உலகப்பற்றுக்களாகிய தொடரில் அகப்பட்டு, பாவையர் - பெண்கள், 
 இங்கிதஞ் சேர்த்து - தங்கள் எண்ணக் குறிப்புப் பொருத்தி, கொஞ்ச - கொஞ்சுதலால், 
 மயங்கி - மயக்கமுற்று, இடர்ப்பட்டு - துன்பப்பட்டு, இரங்குவன் - வருந்துவேன், அங்கதம் 
 சேர்த்து - பாம்புகளை ஒன்றாகச் சேர்த்து, அரைக்கு அசைத்தாய் - அரையின்கண் கச்சாகக் 
 கட்டினவனே!, கச்சிவாண - கச்சியின்கண் வாழ்பவனே!, கடையன் - கீழ்மகனாகிய யான், 
 நின் பதம் - நின் திருவடிகளை, எந்தவிதம் சேர்தல் - எந்தவிதம் அடைதலாகும்?, தாயனையாய் 
 - அன்னையை ஒத்தவனே!, கதி வேறிலை - நின்னை யன்றி எனக்கு வேறு கதியில்லை. நெஞ்சு உண்மைவழிச் சார்தலின்றிச் சொற்களை அடுக்கிப் 
 பாடினால் என்ன பயன் உண்டாம் என்பதாம். பாவையர் இங்கு இதம் சேர்த்துக் கொஞ்ச - பெண்கள் 
 இனிமையான மொழிகளைக் கூட்டிக் கொஞ்சுதலால் எனப் பொருள் கூறினும் அமையும். இங்கிதம் - எண்ணக்குறிப்பு. பதஞ்சேர்த்துப் பாடி - உருக்களைச் சேர்த்துப் பாடி 
 எனினுமாம். என் என்பது, எவன் என்ற வினாவின் மரூஉ. வாண என்பது ‘வாழ்ந’ என்பதன் மரூஉ. ‘விடலேறு படநாகம் அரைக்கசைத்து’ என்பது தேவாரம். 
 ‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்பது திருவாசகம் ஆதலால், அவனருளால் அவனை அடைதல் 
 கூடுமேயன்றிப் பிறிதாற்றால் கூடா தென்பது கருத்து. |